articles

img

ஓட்டுப் பசி... கமிஷன் ருசி... காவிரி-சரபங்கா நீரேற்றம் திறப்புவிழாவும், திருகுதாளமும்...

சேலம் மாவட்டம் மேற்கு பகுதியில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கனாபுரம், சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஒன்றியங்களில் நூறு ஏரிகளில் மேட்டூர்- காவிரி உபரி நீரை கலந்திட செய்வது என அதிமுக அரசு அறிவித்து, அதற்கு “காவிரி-சரபங்கா நீரேற்றம் திட்டம்” என பெயர் சூட்டியது. 

                                                                *********************

அதற்காக கடந்த 4.3.2020ல் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளியில் முதல் மந்திரி அடிக்கல் நாட்டுவிழா நடத்தினார்; அதற்காகரூ.565 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். உடனே அதற்காக நிலம் ஆர்ஜிதம் பணியை முடுக்கிவிட்டார். இத்திட்டம் 33 ஊராட்சிகளில் அமலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

                                                                *********************

இத்திட்டம் வீணாகப் போகும் காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா நதியில் கலந்திட செய்வது, அதன்மூலம் நூறு ஏரிகளில் நீரைவிடுவது, அதன்வாயிலாக பாசனவசதிகளை கூடுதலாக ஏற்படுத்துவது, இது முதல் மந்திரியின் கனவுத் திட்டம் என்றெல்லாம் டமாரம் அடிக்கப்பட்டது. 

                                                                *********************

இதனால் பாதிக்கப்படும் 2632க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் அழுகுரலை அரசும் முதல் மந்திரியும் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. அரசு இயந்திரத்தை வைத்து மிரட்டி, விவசாயிகளின் பட்டா நிலங்களை திட்ட அலுவலர் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. விவசாயிகளை அரசு “பர்சனல் செட்டில்மெண்ட்” என்கிற பெயரால் ஆசை வார்த்தைகளைக் காட்டியோ, மிரட்டியோ பணிய வைக்கிறது. சில விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்து போராடி வருகிறார்கள்.

                                                                *********************

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26 அன்று அதிகாலை 7 மணிக்கு முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி அவசரகதியில் திறப்புவிழாவை திப்பம்பட்டியில் நடத்தி உள்ளார். இவரின் ஆட்சியில் பாலம் திறப்பதாக இருந்தாலும் சரி, கட்டடங்கள் திறப்பதாக இருந்தாலும் சரி பணிகள் முழுமை பெறாமலே திறக்கப்பட்டுவிடும். அப்படித்தான் இதுவும். ஆம், ஆற்றையே கால்பாகம் பணிகூட முடியாமல் திறக்கும் ஒரே முதல் மந்திரி எடப்பாடியாகத்தான் இருப்பார்போலும்; தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஒரு முதல் மந்திரியே விளையாடுவதுதான் மிகுந்த கண்டனத்திற்குரியதும், வேதனை மிக்கதும் ஆகும். 

                                                                *********************

திப்பம்பட்டியில் இருந்து இரண்டு ராட்சத குழாய்வழியே நீரை எடுத்து வந்து, 6 கி.மீ தொலைவில் உள்ள கோனூரில், ஒன்று வடக்கு நோக்கியும், இன்னொன்று கிழக்கு நோக்கியும் சென்று எடப்பாடி பகுதியில் இரண்டும் ஒன்றாக கலந்து காவிரியில் கலந்திடுமாம். கோனூரில் இருந்து கிழக்கு நோக்கி வரும் குழாய்தான் சரபங்கா ஆற்றில் கலந்திடும். கோனூரில் இருந்து வடக்கு நோக்கி போகும் குழாய் சரபங்காவில் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. 

                                                                *********************

எப்படி திறப்புவிழாவில் திருகுதாளமும், தில்லாலங்கடி வேலையும் கொட்டிக் கிடக்கிறதோ அதுபோல திட்டம் முழுவதும் தில்லாலங்கடி வேலைதான் நிறைந்திருக்கிறது. இது சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு துளி பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்திட்டத்தை காண்ட்ராக்ட் எடுத்த ஒருவரைத் தவிர யாருக்கும் இதனால் பயனில்லை என்பதே உண்மை. அது, இவ்வளவு விரைவில் அம்பலமாகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

                                                                *********************

திப்பம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அங்கிருந்த அதிகாரிகள், “காவிரியில் 120 அடி நீர் நிரம்பி வழியும்போது, இந்த ராட்சத கிணறுக்குள் நீர் வரும்; அதை பம்ப் செய்து அனுப்புவோம்” என்றனர். அப்பொழுது அருகில் இருந்த தவிச மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, “80 அடி நீர் வந்தாலே, இந்த ராட்சத கிணற்றில் நீர் வரும் என மக்கள் பேசுகிறார்களே” என்று கேட்டார். அப்போது அந்த அதிகாரி வேட்டியைப் போட்டு தாண்டாதக் குறையாக, “அய்யய்யோ அப்படியெல்லாம் கிடையாது சார்” என மறுத்தார். ஆனால், அதுதான் இப்பொழுது நடந்துள்ளது.

                                                                *********************

26.2.21 அன்று திறப்புவிழா நடத்திய இந்த காலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியைத் தொடவில்லை. அப்படியிருக்க, எப்படி இதை முதல் மந்திரி திறந்து வைத்தார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. ஒருபக்கம் திட்டப்பணிகள் 25%கூட நிறைவடையவில்லை. இன்னொரு பக்கம் அணையில் 120 அடி நீருமில்லை. எப்படி திறப்புவிழா நடந்தது? தண்ணீரை ஆற்றில் இருந்து ஏதோ ஒருவகையில் உறிஞ்சியிருக்க வேண்டும். இது உண்மை எனில், இனி இப்படித்தான் நடக்கும். இப்படி நடந்தால் காவிரி டெல்டா விவசாயிகள் நிலைமை அதோகதிதான். 

                                                                *********************

உபரிநீர் அல்லாமல் இப்படி உறிஞ்சிடுவதைக் காவிரி மேலாண்மை வாரியம் அனுமதிக்குமா? அப்படி அனுமதிக்கவில்லை எனில் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு பட்டைநாமம் போடப்போவது உறுதி. அவர்களின் நிலமும், கிணறு, வீடு, மரம் போன்ற கீழ்காணும் செல்வங்கள் நாசமாக்கப்பட்டதுதான் மிச்சம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஓட்டுப் பசிக்காக, கமிஷன் ருசிக்காக சேலம் மாவட்ட விவசாயிகளையும், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளின் நலன்களையும் காவு கொடுக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. 

                                                                *********************

முதல் மந்திரியின் பதவி மற்றும் பண வெறிக்கு ஆகும் நட்டத்தைப் பாருங்கள்... 

                                                                *********************

பனை 1361, தென்னை 2487, பழவகை மரங்கள் 1550, தேக்கு 809, வேம்பு 2009, சந்தனம் 21, செம்மரம் 09, இதரவகை 1246 என 9492 மரங்கள் அழிக்கப்படுகின்றன. 

                                                                *********************

நிலம் 275 ஏக்கர், போர்வெல் 36, கிணறு 16, வீடு 11, குளியல் அறை 5 என அழிக்கப்படுகிறது.

                                                                *********************

285 ஏக்கர் மட்டும் பாதிக்கவில்லை. பெரும்பாலான நிலங்களில் நடுவில் இத்திட்டம் குழாய் அல்லது கால்வாய் என போவதால், இருபுறமும் துண்டு நிலம் வருவதால் ஒரு ஏக்கர் மட்டுமே இருக்கும் விவசாயிக்கு மொத்த நிலமும் போய்விடும். துண்டு துக்காணியாக இருக்கிற மீதி நிலத்தால் ஒருபயனும் கிடையாது. வாய்க்காலாக போகும் நிலங்களில் தாண்டி போக முடியாது. ஒவ்வொருவர் நிலத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்பட்டாலும் அதனாலும் விவசாயிக்கு பயனில்லை. அதுமட்டுமல்ல, மீதியாக கிடக்கும் நிலத்தில் உழவு இயந்திரத்தின் மூலம் எப்படி உழுவது? ஆகவே எடுக்கப்படும் 60 அடி அகலத்தில் அகப்பட்ட நிலம் மட்டுமல்ல, மொத்த நிலமும் வீணாகும். 

                                                                *********************

1361 பனைமரம் அழிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் சேர்த்தே அழிக்கப்படுகிறது. 2487 தென்னை மரங்கள் அழிக்கப்படுகிறது. இதன் பயன்பாடுகள் அபாரமானது. 2009 வேம்பு அழிக்கப்படுகிறது. தேக்கு 809, இதரவகை1246 என மொத்தம் 9492 மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இருக்கிற நிலத்தடிநீர் முற்றாக வற்றிப் போய்விடும். அதனால் இருக்கிற கிணறு, போர்வெல் நீர் ஆதாரங்களும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக இயற்கையாக பெய்து, சராசரியாக பெய்யும் மழையும் பெய்யாது. அதனால் இதர விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.

                                                                *********************

வேம்பு மூலிகை மரம் மட்டுமல்ல. மனிதன் உயிர்வாழ தேவைப்படும் ஆக்சிசனை அள்ளி வழங்கும் அட்சயப்பாத்திரம். இது அழிக்கப்படுவதனால் மனிதனின் சுவாசக்காற்றே கேள்விக்குறியாகிவிடும். வேம்பு எண்ணெய், புண்ணாக்கு எல்லாம் விவசாயத்திற்கும், மனிதன் மற்றும் கால்நடைகளுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ஆகும். அவையும் சேர்த்து அழிக்கப்படுகிறது. சுமார் 10,000 மரங்கள் அழிக்கப்படுவதால், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். மண் உஷ்ணம் அதிகரிக்கும். 

                                                                *********************

விவசாயிகளின் விளைநிலங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல், ஒவ்வொரு ஏரிக்கும் இடையே உள்ள நீர்வழிப் புறம்போக்கின் வழியே இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இதன் மூலம் திட்டச்செலவு பெருமளவு குறையும். 
மாறாக இத்திட்டத்தை அரசு நினைத்த வழியாக மட்டுமே செயல்படுத்த முனைவது, வேளாண் பெருமக்களை தங்களின் நிலங்களில் இருந்து முற்றாக வெளியேற்றும் முயற்சியே. மேலும் விளை நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவதன்மூலம் பூமிக்குள் இருக்கும் இயற்கை வளங்களை தனியார் கொள்ளைக்கு வழிகோலப்படுகிறதோ என்ற அச்சமும் பெருமளவு விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. 

                                                                *********************

இப்படியான விவசாயிகள் விரோத திட்டப்பணியை ஏறக்குறைய 120 கி.மீ. தொலைவிற்கு செய்து, திறப்புவிழா காணவேண்டியதை வெறும் 12 கி.மீ. மட்டும், அதாவது திப்பம்பட்டி முதல் மே.காளிப்பட்டி ஏரிவரை அடித்து, பிடித்து அரைகுறையாக செய்துவிட்டு, காற்றழுத்தம் மூலமாக இந்த ஏரிவரை காவிரிநீரை தள்ளிவிட்டு, “திறப்புவிழா” என்கிற நாடகம் நடத்தியிருப்பது முதல் மந்திரியின் பதவிவெறியை, பணவெறியைக் காட்டுவதைத்தவிர வேறென்ன? 

                                                                *********************

எல்லாவற்றையும்விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், எல்லாம் வல்ல இறைவனால் தான் இத்திட்டம் நிறைவேறியதாம்; பிப்ரவரி 26 அதிகாலை 7.30 நல்லநேரத்தில் நடந்த திறப்புவிழா என்கிற நாடகத்தில் முதல் மந்திரி உதிர்த்த முத்துக்கள்..!

தொகுப்பு : பி.தங்கவேலு

;