articles

img

கூட்டுறவுத் துறையையும் அழிக்க ஒன்றிய அரசு முயற்சி.... பாதுகாக்க திமுக அரசு முன்வர வேண்டும்......

கூட்டுறவு இயக்கத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியதில் தமிழகத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. வறுமையை ஒழிக்கவும், உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு, சமூகஒருமைப்பாட்டை மேம்படுத்திட முக்கிய பங்காற்றியது கூட்டுறவுத்துறை.

கூட்டுறவுகளை உருவாக்குவது ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டுமென அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் 97 பிரிவு 43 (பி) தெளிவுபடுத்துகிறது. அதனடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மாநில உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டம் இயற்றியுள்ளனர். மாநில உரிமைகளை பறித்து கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்புரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, கூட்டுறவு அமைப்புக்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

நடத்தப்படாத தேர்தல்...
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அத்தகைய வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர மாநில அரசு விரைந்துசெயல்பட வேண்டும். 2018ல் கூட்டுறவு தேர்தல் நடத்தப்பட்டது. நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஐந்தாவது கட்ட தேர்தல் இன்றளவும் நடைபெறவில்லை. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தற்போதைய உறுப்பினர் பட்டியலை தீர ஆய்வு செய்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டு அடுத்த கட்ட தேர்தலை உண்மையாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் நடத்த வேண்டும்.

அலைக்கழிப்பு...
சிறு-குறு விவசாயிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் கடன் பெற உதவியாக இருந்து வருவது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களாகும். அதனை எளிமைப்படுத்துகிறோம், கணினிமயமாக்குகிறோம் என கடந்த காலத்தில் கிஷான் கிரிடிட்கார்டு (கேசிசி)  கடன் அட்டைகள் வழங்கி ‘மிரர்’ கணக்குதுவக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி விவசாயிகளை அலைக்கழித்தனர். இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

மூன்றடுக்கு முறையே சிறந்தது!
தற்போது கூட்டுறவில் மாநிலம், மாவட்டம், கிராமம்என்ற மூன்றடுக்கு முறை உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டுமென்பது ஏற்கத்தக்கதல்ல. இது கிராம அளவில் உள்ள கூட்டுறவுகளை செயலிழக்கச் செய்து விடும். பல்லாயிரக்கணக்கான ஏழை-எளிய, கிராமப்புற விவசாயிகளை வேளாண்மையிலிருந்து வெளியேற்றி விடும். தமிழகத்தில் வேளாண்மை துறையை பாதுகாக்க தனி நிதிநிலை தாக்கல் செய்துள்ள நிலையில் மூன்றடுக்கு முறையை தொடர
வேண்டும்.

திவாலாகும் வங்கிகள்
2021 ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு ரூ. 2,500 குடும்பஅட்டை தாரர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து கொடுத்துள்ளனர். அத்தகைய நடவடிக்கையாலும், நிதி ஒதுக்கீடு செய்யாததாலும் நவம்பர் மற்றும்டிசம்பர் மாதம் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடன் கொடுக்க பணம் இல்லை என தெரிவித்தனர். உரம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டன.இத்தகைய நடைமுறைகள் வேளாண்மை தொழிலை பாதுகாக்க பயனளிக்காது என கருதுகிறோம். உடனடியாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தஅனைவருக்கும் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு என்பதுமிக மிக அவசியமாகும்.கடந்த ஆட்சியில் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததாக அறிவிப்பு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கீடு செய்தது ரூ. 5,000 கோடி மட்டுமே. இதனால் கூட்டுறவு வங்கிகள் நிதியின்றி விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் முடியவில்லை, ஊழியர்களுக்கு மாத ஊதியம் கூட வழங்க முடியாமல் கூட்டுறவு வங்கிகளே திவலாகிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கூட்டுறவு சங்கங்களின் நலனை கணக்கில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு நிவாரணம்
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெல் பயிரிடுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கிவிட்டன. விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயிர் கடன் வழங்குவதற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழை, நெல், மரவள்ளி, மஞ்சள், பருத்தி  உள்ளிட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பல பொருட்களுக்கு உரியவிலை இல்லாமலும், அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்த பொருட்களை விற்பனை செய்யமுடியாமலும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கடன் தள்ளுபடி
நடப்பு பசலியில் பயிரிடப்போகும் விபரம் குறித்து சிட்டா, அடங்கல் வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது நடைமுறைக்கு முரணானது. ஆகையால் பயிர்க்கடன் பெறுவதற்கு எளிமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு தவணை தவறாமல் கடனை செலுத்தும் உழவர்களுக்கு குறைந்த பட்சம் 10 விழுக்காடு மானியம் வழங்கவேண்டும்.கடந்த ஆட்சியில் கடன் வழங்கியுள்ளதை முழுமையாக ஆய்வு செய்து வருவது சிறப்பம்சமாகும். நகைக் கடன், பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்திருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதியின்றி தடுமாறும் கூட்டுறவு சங்கங்களை புனரமைக்க காலம் தாழ்த்தாது நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாக்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை போல அனைத்து விவசாயிகளும் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா கால நெருக்கடியை கருத்தில் கொண்டு பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பல்பொருள் அங்காடி
விவசாயிகளின் நலன் காக்க துவக்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு நில வள வங்கி, ஊரக வளர்ச்சிவங்கி (180 வங்கிகள்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளுக்கு டிராக்டர், போர்வெல், வாட்டர் பைப் லைன், பம்பு செட், உழவுஎந்திரம், நடவு எந்திரம் உள்ளிட்டு நீண்ட கால கடன்வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.தற்போது நகைக் கடன் வழங்கும் பணி மட்டுமேநடைபெறுகிறது. கிட்டத்தட்ட வங்கிகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இவ்வங்கிகளை பாதுகாக்க வேண்டும். அதேபோன்று, கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் (மார்க்கெட்டிங்சொசைட்டி) ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை தவிர  நியாயவிலைக் கடைகளாகவே செயல்படும் நிறுவனங்களாக உள்ளன. இதனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

நுகர்வோருக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டுமென உயர்ந்த நோக்குடன் துவக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவுகள் மெல்ல, மெல்ல செயலழிக்கச் செய்யப்படுகிறது. அத்தகையநுகர்வோர் கூட்டுறவை மேம்படுத்தி காய்கறி அங்காடிகள், பெட்ரோல், டீசல் நிலையங்கள், சமையல் எரிவாயு விநியோக சேவை மையங்கள் என பன்முக பணிகளை செய்திடும் பல்பொருள் அங்காடியாக மாற்றம்செய்ய வேண்டும்.

                                        **************

களவுபோன நகையும்-பரிதவிக்கும் மக்களும்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1790 சவரன் நகை களவு போனதாக தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு மேலாகியும் அத்தகைய நகைகள் மீட்கப்பட்டதா? என்ற விபரம் இன்றளவும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரிவிக்கவில்லை. நகைகளை இழந்துள்ள விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூட்டுறவு வங்கியின் மீது நம்பிக்கை வைத்து அடமானம் வைத்தவர்களுக்கு நகையோ அல்லது அதற்கு ஈடான இழப்பீட்டுத் தொகையோ வழங்கி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது புதனன்று(ஆக25) விவாதம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதிலிருந்து)

;