articles

img

மறக்க முடியாத வாச்சாத்தி...

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 ஜூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து  பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர்  அவர்களை  சரமாரியாக அடித்தனர்.  18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.கிராம மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அண்ணாமலை 1992-ஆம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார். ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து  1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி  17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளரும் அடக்கம்.  வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்துவிட்டனர்.

19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டம்பர் 29 அன்று  தீர்ப்பளிக்கப்பட்டது .வாச்சாத்தி  வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.  17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டனர்.

பெரணமல்லூர் சேகரன்

;