articles

img

சுவரெழுத்துக்கள் நிஜமாகும் காலமிது...

விடியற்காலையில் வந்த இறப்பு செய்தி, நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  பள்ளி விழா ஒன்றிற்கு அரசுமுறைப் பயணமாக திமுக தலைவர் கலைஞர் வருகிறார். அவரை வரவேற்று சிறப்பிப்பதற்கு பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்படி கலைஞரை ஓவியமாக வரைகிறான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அச்சிறுவனையே அந்நினைவு பரிசினை கலைஞரிடம் ஒப்புவிக்க தலைமையாசிரியர் அறிவுறுத்த, அந்த ஓவியத்தை பார்த்து பரவசமடைந்த கலைஞர் அதை வரைந்த சிறுவனை உச்சிமுகர்ந்து மடியில் அமர்த்திக் கொள்கிறார். 

கால ஓட்டத்தில் வறுமையும் குடும்ப சுமையும் வாட்ட, அச்சிறுவன் சென்னை நகரத்தில் குடிபெயர்ந்து வளர்கிறான். இறுதியில் தனக்கு தெரிந்த ஓவியக் கலையே வாழ்க்கைத் தொழிலாக மாறி, நகரத்துச் சுவர்களின் விளம்பர எழுத்தாளராக மாறி விடுகிறார். தனது விளம்பரஎழுத்துக்களுக்கு அருகிலேயே ‘டங்கல் திட்டம் ஒழிக’, ‘உலக வங்கியிடம் இந்தியாவை அடகு வைக்காதே’, ‘இந்தியாவை காலனிமயப்படுத்தாதே’, ‘புதிய பொருளாதாரக் கொள்கை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ - இப்படியான முழக்கங்களை பார்த்திருக்க, ஒரு கட்டத்தில் அந்த முழக்கங்களே நிஜத்தில் நாட்டில் நடக்க ஆரம்பிக்கிறது. 

இப்படி இந்திய நாட்டின் பொருளாதார கட்டமைப்பு மாற்றத்திற்குள்ளாக, ஓவியரின் சிந்தனையும் இடதுசாரி அரசியலை நோக்கி நகர்ந்தது. காசி தியேட்டருக்கு பின்புறம் உள்ள சூளைப்பள்ளம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளராக மாறுகிறார், அந்த ஓவியர் நவாஸ்கான். அவரது மறைவுச் செய்தி, மேற்கண்ட நினைவுகளை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, நாட்டின் அரசியல் நிகழ்வுப் போக்குகளையும், நிகழ்கால நிலைமைகளையும் வெளிச்சமிட்டு காட்டியது. 

தமிழ் நிலப்பரப்பின் நூற்றாண்டு கால சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தொடர்பை அறுத்தெறிந்து அல்லலுக்குள்ளாக்கும் அராஜகக் கொள்கைகள் அரங்கேற்றப்படும் காலமிது. இது நபர்களின் பிரச்சனை மட்டுமல்ல. நபர்கள் உருக்கொண்டுள்ள இயக்கங்கள் மேற்கொள்ளும் கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படை விளைவு. விடுதலையடைந்த இந்தியாவின் அடிப்படைக்கட்டுமானங்களை பலப்படுத்துவதற்கு மேற்கொண்டு வந்தநிகழ்வுப் போக்குகளை மடைமாற்றி, தாராளமயமாக்கல் கொள்கைகள் அமலாக்கப்பட்டவுடன், அரசின் தன்மையும்போக்கும் தடம்மாற துவங்கிவிட்டன. இதன் விளைவுகள் வடஇந்தியாவை வாட்டி வதக்கி கொண்டிருந்த வேளையில், தமிழகம் சமூக-பொருளாதார தளத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களிலும் அரவணைப்பிலும் ஓரளவுபாதுகாப்பாக இருந்தது. ஆனால், அதுவும் ஒன்றிய அரசின் சட்டாம்பிள்ளைத்தன செயல்பாடுகளால் ஆட்டம்காண ஆரம்பித்தது. உரிமை முழக்கங்கள், போராட்டங்கள் செங்கொடி இயக்கங்களாலும், முற்போக்கு அமைப்புகளாலும் வலுவாக முன்னெடுக்கப்பட்டன. விளைவு, ஒன்றிய அரசின் கேடுகளுக்கு எதிராக முதுகெலும்புள்ள தலைவர்கள் முரண்டுபிடித்தனர். 

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் ஒன்றிய அரசிற்கு அடங்கிப் போக, அத்தனை இன்னல்களையும் மக்கள் சுமக்க தொடங்கி விட்டனர். விளைவு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டவதாக, அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மூன்றாவதாக, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அள்ளிக் கொடுப்பது. நான்காவது, சமூகபாதுகாப்பு திட்டங்களை வெட்டிச் சுருக்கி சின்னாபின்னமாக்குவது. ஐந்தாவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நாசமாக்குவது. இத்தகைய கேடுகள் இந்திய நாடு முழுக்க பரவி, தமிழகத்தையும் ஆட்கொண்டுமக்களின் சொல்லொணா துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

உண்மையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை என்பது கணிசமாக குறைந்திருந்த நிலையிலும், இன்னும் சொல்லப் போனால், கச்சா எண்ணெய்யிலிருந்து சுத்திகரித்த ஒரு லிட்டர் பெட்ரோலின் உள்ளடக்க விலை வெறும் இருபத்தியாறு ரூபாய் என்றிருக்க, மக்களோ தொண்ணூற்றி ஏழு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை. தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 80 சதவிகிதம். எஞ்சியவை கார், லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள். இருசக்கர வாகனம் பயன்படுத்துவோரின் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் உழைப்பாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இத்தகையவர்களை பெட்ரோலியப் பொருட்களின் விலையுயர்வு கடுமையாகதாக்க, தமிழகமே போர்க்கோலம் காண, ஆட்சியிலிருக்கும் அதிமுகவோ, ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு காவடி தூக்குகிறது. 

தமிழக பொருளாதாரக் கட்டமைப்பிற்கு முன்மாதிரியாக செயலாற்றிக் கொண்டிருக்கும் சிறு-குறு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக, சிறு-குறு தொழிலை சீரழிக்கும் மத்திய அரசின் கொள்கைகளையே நடைமுறைப்படுத்த தொடங்கியதால், தமிழகத்தின் பொருளாதாரமும், சிறு-குறு தொழில்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் நாசமாக்கியிருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கில் சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஆனால் தொழில் வளத்தைபெருக்கவோ, மூடப்பட்டுள்ள சிறு-குறு தொழிற்சாலைகளை திறப்பதற்கோ ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் எதுவுமில்லை. 
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு உரத்து குரலெழுப்பிய அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி நடைபெறும் இன்றைய ஆட்சியோ, மத்திய அரசிடம் சரணாகதி அடைந்தது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை ஏற்றுக் கொண்டது  மட்டுமில்லாமல், தமிழகத்திற்கு வரவேண்டிய வருவாயை வாங்குவதற்கு கூட வக்கற்ற நிலையில் அதிமுக அரசு உள்ளது.

2017-18 ஆம் ஆண்டுக்கான ஐ.ஜி.எஸ்.டி வருவாய் ரூ.4,073 கோடி பாக்கி உள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் மாநில அரசுக்கு வரவேண்டிய ரூ.3,201 கோடி பாக்கி ஆகும். உள்ளாட்சி அமைப்புக்கான அடிப்படை மானியங்கள் மத்திய அரசிடமிருந்து ரூ.6,374கோடி பாக்கி உள்ளது மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரவேண்டிய தொகை ரூ.3,500 கோடி பாக்கி உள்ளது.நாட்டின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, கல்வித்துறையில் கேரள மாநிலத்தை போன்று முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டத்தின் விருப்பத்திற்கிணங்க, தமிழகத்தின் கல்வி கட்டமைப்பை சிதைக்க புதிய கல்விக் கொள்கையை அமலாக்கிவருகிறது, அதிமுக அரசு. மாநில உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை, தாய்மொழிவழி கல்வி, பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றுக்கு பேர் போன தமிழகத்தின் விழுமியங்களை தங்களின் சுயஅரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு, அழித்துவரும் அதிமுக அரசிற்கெதிராக ஒட்டுமொத்த தமிழகமே அணிதிரள வேண்டிய காலமிது. 

வாழ்வாதாரம் மட்டுமின்றி வாழ்வுரிமையும் பறிபோகிறது.ஆற்றின் கரையோரம் குடியிருந்தவர்கள், அரசு அங்கீகரிக்காத இடங்களில் குடியிருந்தவர்கள் போன்றோரை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் மக்களின் விருப்பத்திற்கும், எதிர்ப்பிற்கும் மத்தியில் நகரை விட்டு அவர்களைவெளியேற்றும் கொள்கை அதிமுக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக பல ஆண்டுகளாக நகரின் அருகாமையில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் பெற்ற மக்கள், அதை இழக்க வேண்டிய சூழல் உருவானது. 

 சென்னை மாநகரத்தில் இருந்து பெரும்பாக்கத்திற்கு குடியமர்த்த மக்களின் வாழ்வாதார நிலைமை பற்றி ஒரு தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் 2017-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுவரை சென்னையின் பல பகுதிகளிலிருந்து பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களில் 48 சதவிகிதம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது. அங்கிருக்கும் 1,300 குடும்பங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில், இந்தக் குடியிருப்பிற்கு வருவதற்கு முன் அம்மக்கள் 38 வகையான பணிகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது. மேற்கண்ட விபரங்களிலிருந்து அரசின் மறுகுடியமர்வு கொள்கை கடும் தோல்வியை சந்தித்துள்ளது என்பதைக்காண முடிகிறது. அதைவிட மக்கள் அதிக துயரத்தை சந்தித்துக் கொண்டே வருகின்றனர் என்பதே புலப்படுகிறது. 

தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசாங்கத்தின் விருப்பத்திற்கிணங்க அடக்குமுறைச் சட்டங்கள் அடுக்கடுக்காய் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் பெரும் எதிர்ப்புக்கிடையில் அமல்படுத்த ஊபா எனும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. 2019இல் தமிழகத்தைச் சேர்ந்த 279 நபர்கள் மீது இச்சட்டம் பதியப்பட்டிருந்தது. இப்போது, இந்த எண்ணிக்கை முந்நூறையும் தாண்டும் என மனிதஉரிமைப் போராளிகள் பட்டியலிடுகின்றனர். அதுமட்டுமா, மத்திய புலனாய்வு நிறுவனமாக உருப்பெற்றுள்ள என்.ஐ.ஏ. மாநில உரிமைகளை பறிக்கும்நிறுவனமாக மாறியுள்ளது. இதற்கு இதுகாறும், தமிழகத்தில் அலுவலகம் அமைக்க ஆட்சியில் இருந்த அரசுகள்மறுத்து வந்த நிலையில், தற்போதைய அதிமுக அரசுஅலுவலகம் அமைக்க ஒத்துழைத்துள்ளது வெட்கக்கேடானது. 

தோழர் நவாஸ்கான் பார்த்த சுவரெழுத்து இன்று நிதர்சனமாக மாறிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்லா கட்ட நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தை சீரழிக்கும்திட்டங்களை - நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை முழுமையாக செயலாக்க தொடங்கிவிட்டனர். உலக வங்கியிடம் நாட்டை, நாட்டு மக்களை முழுமையாக அடகு வைக்கும் கேடுகெட்ட பணியை வேலெடுத்து, காவடி சுமந்து நிகழ்த்தி வருகின்றனர் பாஜக - அதிமுக சக்திகள். இதை தடுப்பதும், தகர்ப்பதும் தமிழகத்தின், தமிழ் மக்களின் அரும்பணி. அதைப்பதிவு செய்யும் நாள்தான் ஏப்ரல் 6. 

கட்டுரையாளர் : ஜி.செல்வா, மாவட்டச் செயலாளர், சிபிஐ (எம்), மத்திய சென்னை

;