articles

img

இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கிறார்கள்....

‘பிதாவே இவர்களை மன்னியும்; இவர்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்’ என்பது விவிலியத்தின் புகழ்பெற்ற வரிகள். ஆனால் இவர்களோ என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கிறார்கள் என்பதை நன்கு திட்டமிட்டே செய்கிறார்கள். 

சிலரைக் கொலை செய்து உயிரைப் பறிக்கிறார்கள். சிலரை உயிருடன் வைத்திருந்து கொலை செய்கிறார்கள். சாதி துவேசத்தின் காரணமாக தங்களை படையில் சேர்த்துக்கொள்ள மறுத்த பேஷ்வாக்களை போரில் மகர்கள் பழிதீர்த்தார்கள். 200 ஆண்டுகள் கழித்து மகர்களோடு நின்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பேஷ்வாக்களின் வாரிசுகள். மராட்டியத்தின் பீமா கோரேகானில் பேஷ்வாக்களை வெற்றி கொண்டதன் 200 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு எல்கர் பரிஷத் என்ற பெயரில் 2017 டிசம்பர் 31ல் பலர் கூடினார்கள். இது இரகசிய அறையில் நடைபெற்ற கூட்டம் அல்ல. லட்சக்கணக்கான மக்களுடன் பொது இடத்தில் தான் கூடினார்கள். மறுநாள் - 2018 ஜனவரி 1ல் - பீமா கோரேகானில் கூடிய பிரம்மாண்டமான கூட்டத்தை சகிக்க முடியாமல்தான் இவ்வழக்கு. சாதாரண வழக்கல்ல. ‘ஊபா’ சட்டம் என்று சொல்லப்படுகிற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities (Prevention) Act) வழக்கு. 

ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி, வெர்னான் கன்சால்வேஸ், வரவர ராவ், சுதிர் தாவ்லே, சுரேந்திர காட்லிங், கௌதம் நௌலகா, ரோனா வில்சன், ஜோதி ரகோபா ஜக்தாப், ரமேஷ் முரளிதர் கெய்சோர், ஷோமா சென், அருண் பெரைரா, சாகர் டாட்யாராம் கோர்க்கே,  ஹனி பாபு, மகேஷ் ராவத் என 16 பேர் மீது  வழக்கு புனைந்து சிறையில் அடைக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு பிணை இன்று வரை மறுக்கப்படுகிறது.நாட்டிற்குள்ளும், உலகத்தின் பல நாடுகளிலும் எழுந்த எந்த எதிர்ப்பையும் இந்திய ஒன்றிய அரசும் கண்டு கொள்ளவில்லை, சிறப்பு நீதிமன்றமும் பொருட்படுத்தவில்லை. மரணம் தான் விடுதலை என கிறித்துவர்கள் நம்புவதைப் போலவே ஸ்டான் சுவாமியை மரணம் தான் விடுதலை செய்திருக்கிறது.
1950களின் இறுதி ஆண்டுகளில் பொதுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஏசு சபை பாதிரியார் ஸ்டான் சுவாமி அவர்கள், எளியவர்களின் சேவைக்காக சமூக நிறுவனம் ஒன்றைத் துவங்கி அதன் இயக்குநராக செயல்படுகிறார். ஏதுமற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்கிற அவரின் உறுதிப்பாடு தான் அவரை ஜார்க்கண்ட் பழங்குடி மக்களிடம் இழுத்துச் சென்றது.

இந்திய அரசுக்கு எதிராக சதி செய்கிறார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் உண்மையில் கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.  கடந்த 20 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் வளங்கள் கொள்ளை போகின்றன. 2014ல் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கார்ப்பரேட் கொள்ளையின் வேகம் அசுர வேகத்தில் அதிகரித்தது. இதற்கு எதிராகப் போராடுகிற ஜார்க்கண்ட் பழங்குடி மக்களின் போர் வாளாக ஸ்டான் சுவாமி செயல்பட்டார். இதற்கென்றே தனித்த ஆய்வு நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். மாவோயிஸ்ட்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 98 சதவீதம் பேர் சாதாரண பொதுமக்கள். வளங்களைப் பாதுகாக்க போராடியவர்கள். கார்ப்பரேட்டுகளைப் பாதுகாக்க மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டவர்கள். மாவோயிஸ்ட் என கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி அரசால் சித்தரிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கப் போராடிய ஸ்டான் சுவாமியே மாவோயிஸ்ட் என்கிறது அரசு.

ஸ்டான் சுவாமி 2020 அக்டோபரில் கைது செய்யப்படுகிறார். கை, கால் நடுங்கும் பார்க்கின்சன் நோயாளி அவர். கை நடுங்குவதால் உணவை உறிஞ்சிக் குடிக்க ஒரு ஸ்டிரா கேட்டார். இதனை முடிவு செய்ய 20 தினங்கள் அவகாசம் கேட்டது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ).  இதனைக் கண்டித்து நாடு முழுவதும் இருந்து மும்பை என்ஐஏ  அலுவலகத்துக்கும் அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கும் லட்சக்கணக்கான ஸ்டிராக்கள் அனுப்பப்பட்டன. இப்படி ஒரு போராட்டம் உலகில் எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை. வறுமையில் வாடியவர்களுக்காக உழைத்தவர், குளிரில் வாடும்படியானது. இப்போது உயிரிழந்துவிட்டார். மற்றவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் இப்போதும் சிறையில் இருக்கிறார்கள். 

சிறையில் இருப்பவர்கள் மீதான வழக்குக்கு முக்கிய முகாந்திரம், சாட்சியம் எதுவென்றால் அவர்களின் கம்ப்யூட்டரில் இருந்த சில கடிதங்கள். அவை மாவோயிஸ்ட்களுடனான தொடர்பு குறித்த கடிதங்கள்.  குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் அமெரிக்க பார் கவுன்சில் உதவியுடன் அக்கடிதங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் புகழ் பெற்ற ஆர்சனல் கன்சல்டிங் – Arsenal Consulting என்கிற அமெரிக்க நிறுவனம் அந்த ஆய்வை மேற்கொண்டது. 2021 பிப்ரவரியில் ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. குற்ற ஆவணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் அதனைக் கையாள்பவர் இல்லாமல் வெளியில் இருந்து கடிதங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை ஆர்சனல் நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கிறார்கள். திட்டமிட்டே செய்கிறார்கள்.

கட்டுரையாளர் : கே.சாமுவேல்ராஜ்

;