articles

img

தொழிலாளர் இல்லையேல் திருப்பூர் இல்லை....

கடந்த மே 21ஆம் தேதி வெள்ளியன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், துணைத் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, மைக்கோ வேலுசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராஜா எம்.சண்முகம்:

“மஞ்சள் கலந்து உப்புநீரில் வாய் கொப்பளிப்பதும், மூக்கு துவாரங்களில் தேங்காய் எண்ணெய் பூசிக் கொள்வதும் கொரோனா வைரஸ் கிருமியை நமக்குள் போகாமல் தடுக்கும். தனிநபர்கள் சரியாக இருந்தால் இந்த நோயை ஒழித்து விடலாம், இதற்காக ஊரடங்கு என்பது வீணானது, ஒவ்வொரு பனியன் நிறுவனத்திலும் மஞ்சள் உப்புத் தண்ணீர் கரைசலை தொழிலாளர்களுக்கு கொடுத்து வாய் கொப்பளிக்கச் செய்து, தேங்காய் எண்ணெய்யை மூக்கு நாசியில் பூசிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். பின்னலாடை தொழில் தொடர்ந்து இயங்கினால்தான் திருப்பூரைக் காப்பாற்ற முடியும்” என்று கூறி இருந்தார்.மேலும், “ஊரடங்கு  தொடர்ந்தால் அது  பின்னலாடைத் துறையின்  தற்கொலைக்கு ஒப்பான பாதை. மாதம் ரூ.2500 கோடி வர்த்தகம் பாதிக்கும். பின்னலாடை நிறுவனங்களை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு வணிகர்கள் ஊரடங்கால் அச்சம் அடைகின்றனர். இதனால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் பிற நாடுகளுக்கு சென்றால் இந்திய பின்னலாடை தொழில் முடங்கி விடும்” என்றும் கூறினார்.கொரோனா தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மிக மோசமான முறையில் பரவி மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி என்று கூறி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர் சங்கத்தினர் வற்புறுத்துகின்றனர். ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகத்தின் இந்த கருத்துக்கு ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் சொல்லவும், தவறான கண்ணோட்டத்தை சுட்டிக் காட்டவும் கடமைப்பட்டுள்ளது.

உதவும் உள்ளங்கள்
ஒருபுறம் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் தொழில் துறையைச் சேர்ந்த பல நல்ல உள்ளத்தினர், தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா சிகிச்சைமையம் அமைக்க உதவி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கித் தருவது, ஆம்புலன்ஸ், படுக்கை வசதி, கபசுர குடிநீர் தருவது உள்ளிட்ட நிவாரணப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்ஏற்றுமதியாளர் சங்கத்தினர் இதைப் பற்றி கவலைப்படாமல் தொழிற்சாலைகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு மனு போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அறிவியலுக்கு புறம்பான கருத்து
பல லட்சம் தொழிலாளர்களின் உயிர் வாழ்வு, வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மௌனம் காக்க முடியாது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி ஏற்றுமதியாளர் சங்கத்தினர் பிரச்சனையை திசை திருப்புகின்றனர். நீராவி பிடிப்பதாலோ, கசாயம் குடிப்பதாலோ, மஞ்சள் உப்புநீரில் வாய் கொப்பளிப்பதாலோ நேரடியாக கொரோனா வைரஸ் கிருமியை கொல்ல முடியாது என்று அறிவியல் அறிஞர்களும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாரம்பரிய மருத்துவ, உணவுப் பழக்க வழக்கங்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடிந்தாலும், அது வைரஸ் கிருமியை நேரடியாக அழிக்க முடியாது என்பதை தேர்ந்த பாரம்பரிய மருத்துவர்களும் கூறுகின்றனர்.இந்த சூழ்நிலையில் நோயின் தன்மையையும், அதற்கான மருத்துவ முறையையும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மிகவும் மலினப்படுத்திக் கூறுவது தவறு. அறிவியல்பூர்வ புரிதல் இல்லாமல் பெரும்பான்மை மக்கள் பின்தங்கி இருக்கும் நிலையில், தொழிலாளர்களை வேலைக்கு வரச் செய்து, தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இதனால் நோய்த் தொற்று தற்போது இருப்பதை விட அதிகரித்து, மதிப்பு வாய்ந்த மனித உயிர்கள் இழக்கப்படுமானால் அதற்கு ஏற்றுமதியாளர் சங்கத்தினர் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ராஜா சண்முகம் “அரசு தரமுடியாத வேலை வாய்ப்பை நாங்கள் தருகிறோம். இஎஸ்ஐ போன்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன?” என்று  தனது பொறுப்பை தட்டிக் கழித்து பதில் கூறியிருக்கிறார். தொழிலாளர்களுக்கு என்ன ஏற்பட்டாலும் பரவாயில்லை; தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று நினைப்பது மிக மோசமான சுயநலம்.

ஏற்கெனவே கடந்த மே 24ஆம் தேதிக்கு முன்பு வரை ஊரடங்கு சமயத்தில் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டபோது, முதலாளிகள் பலர் கம்பெனிக்கு வராமல் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். ஆனால் மேனேஜர், சூப்பர்வைசர் போன்றவர்களை வைத்து தொழிலாளர்களை வேலை செய்ய வைத்தனர். தொழிலாளர்களுக்கு ஒரு நீதி, முதலாளிகளுக்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது.

அத்தியாவசியத் தொழிலா?
அத்தியாவசியத் தொழில் என்பதால் பின்னலாடை நிறுவனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர் தரப்பில் கூறப்படுகிறது. பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த ஏப்ரல் மாதம் வரை அத்தியாவசியத் தொழில்கள் பட்டியலில் இல்லை. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 2ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்றுமதியாளர்கள் முயற்சி மேற்கொண்டு மாநில அரசு உயர்மட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு செல்வாக்கு செலுத்தி, பின்னலாடை ஏற்றுமதி தொழிலை அத்தியாவசியத் தொழில் பட்டியலில் சேர்த்துள்ளனர். உயிர் காக்கும் மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தி போன்று பின்னலாடைத் தொழில் அத்தியாவசியமானது அல்ல. எனவே மாநில அரசு அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து பின்னலாடைத் தொழிலை நீக்க வேண்டும்.கடந்த மே 24ஆம் தேதிக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் அத்தியாவசிய தொழில் பட்டியலில் இருப்பதை பயன்படுத்தி பின்னலாடை நிறுவனங்கள் இயக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் திருப்பூரில் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்தது. கடந்த மே 10 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் சுமார்  500 என்று இருந்த தொற்றாளர்கள் எண்ணிக்கை, அடுத்த ஒரு வார காலத்தில் 1000த்தை கடந்து 1500, 2000 என பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்தது. தற்போது பின்னலாடை நிறுவனங்களை மூடி முழு ஊரடங்கு அமலாகும் நிலையில்தான் தொற்றாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது சுமார் 1500 என்ற அளவுக்கு வந்துள்ளது. ஆலைகள் இயக்கப்பட்டதால் தான் தொற்று பரவல் இங்கு அதிகரித்தது என்பதற்கு இது நிரூபணம். இதையும் முழுமையாக குறைக்க வேண்டும்.மேலும் கடந்த 29ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆய்வுக்கு வந்திருந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “கோவையில் ஆட்டோமொபைல், திருப்பூரில் ஜவுளி ஆலைகள் இயக்கப்பட்டதால் தொற்று அதிகரித்திருக்கிறது” என்று அந்த கூட்டத்திலேயே தெரிவித்தார். ஆலைகளை இயக்காமல் கண்காணிக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

தொழிலாளர் நலனில்  அக்கறை உண்டா?
தற்போது பின்னலாடை தொழிலை இயக்காவிட்டால் இந்த தொழில், நமது போட்டி நாடுகளுக்குப் போய்விடும்,எனவே திருப்பூர் பின்னலாடைத் தொழில் முடங்கி விடும் என்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். பல்வேறு ஏற்றுமதி நாடுகளும் கொரோனா பெருந்தொற்றை சந்தித்து முழு ஊரடங்கைப் பிறப்பித்து மீண்டுள்ளன. இதுபோன்ற சமயங்களில் ஒட்டுமொத்தமாக தொழில், வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பைச் சந்தித்தது உண்மைதான். எனினும் பொது முடக்கம் முடிந்து இயல்புநிலை திரும்பும்போது அங்கு தொழில், வர்த்தக நடவடிக்கைகள் மீட்சி பெறத் தொடங்கியுள்ளன. மேலும் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும் உற்பத்தி மையங்களை நாடிவருவார்கள் என்பதும், அதன்படி திருப்பூருக்கு வர வேண்டிய வர்த்தகர்கள் இங்கு நாடி வருவார்கள் என்பதும்தான் எதார்த்தம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், “மக்கள் உயிரோடு இருந்தால்தான் தொழில் நடக்க முடியும், முதலில்உயிரைக் காப்பதற்கு முழு முடக்கம் அவசியம். இதுதான்நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் நடந்தது. நம் நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். எனவே தற்போது நிறுவனங்களைத் திறந்து நடத்துவது நியாயமல்ல. முழு முடக்கம் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சம்பள ஒப்பந்தம் என்னாச்சு?
இரண்டாவதாக, கடந்த 2020 மார்ச் மாதம் 24ஆம் தேதி பொது முடக்கத்தின்போது பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு சுமார் 40 நாட்களுக்குப் பின்னர்2020 மே 6ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. அப்போதிருந்து 2021 மே 10ஆம் தேதி வரை ஓராண்டு காலம் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்த காலத்தில் தொழிலாளர் நலனில் இவர்கள் அக்கறை செலுத்தினார்களா? குறிப்பாக ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு போடப்பட்ட பனியன் தொழிலாளர்களுக்கான முத்தரப்பு சம்பள ஒப்பந்தம் 2020 மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தொழிற்சங்கங்கள் புதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றேகால் ஆண்டு ஆகியும் இப்போது வரை தொழிலாளர்களுக்கு உரிய புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உற்பத்தியாளர் அமைப்புகள், குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வரவில்லை. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தராதது மட்டுமின்றி, கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி பல நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை அளவையும், ஊதியத்தையும் குறைத்தனர் என்பதே அனுபவமாக உள்ளது.

பொது முடக்க காலத்தில் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும்என்று அப்போது மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் பல நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு தொழிலாளர் நலனைப் பற்றி அக்கறை இல்லாமல், தங்கள் லாப நோக்கம் பாதிப்பதை மட்டுமே ஏற்றுமதியாளர் சங்கம் சிந்திக்கிறது. இது ஆரோக்கியமான தொழில் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல.

கவனமாக முடிவு செய்க!
தற்போது தமிழகத்தில் அதிக பரவல் உள்ள 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி தொழிலை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பூரில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் இன்னும் வெகுவாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மாநில அரசு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி இவ்விசயத்தில் கவனமாக முடிவு செய்ய வேண்டும்.மாறாக, ஏற்றுமதியாளர் சங்கத்தின் வற்புறுத்தலுக்கு செவி சாய்த்து தொற்றுப் பரவல், உயிரிழப்பைக் குறைப்பதற்கு முன்பாகவே, பின்னலாடை நிறுவனங்களை இயக்க அனுமதி அளித்துவிடக் கூடாது. அது விபரீதமான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

உலகம் முழுவதும் நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து, அதை நோக்கி அனைவரும் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிவியலுக்குப் புறம்பான, பொருத்தமற்ற, பிற்போக்கான கருத்துகளை முன்மொழிவதை நிறுத்த வேண்டும்.பல லட்சம் தொழிலாளர் உழைப்பின் மூலமே திருப்பூர்இன்றைய நிலையை எட்டியுள்ளது. எனவே தொழிலாளர்கள் இல்லாமல் திருப்பூர் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாதது. அவர்களது உயிரையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கான கடமையை தொழில் துறையினரும், அரசும் நிறைவேற்ற வேண்டும்.மேலும் பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரம் என்ற முறையில் திருப்பூரில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை முன்னுரிமைப் பணியாக செயல்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.இத்தகைய தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகே ஆலைகளை இயக்குவது பற்றி மாநில அரசுகவனமாக முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறது.

கட்டுரையாளர் : கே.காமராஜ்மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;