articles

img

ஆசிரியர்கள் அதிகாரமற்றவர்கள்.... (தேர்தல் பணி தொடர்பான சிறப்புக்கட்டுரை)

தேர்தல் நாளன்று வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வரிசை எண்ணை அறிந்துகொள்ள நாலாபக்கமும் வாக்குச்சாவடி அலுவலரை மொய்த்துக் கொண்டிருப்பார்கள். நானும்வாக்குச்சாவடி அலுவலர் தான். இன்றைய நாள்முழுவதும் செல்போனில் மூழ்கியும் பழைய மாணவர்களோடு அவர்களின் கல்லூரி வாழ்க்கை, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளத் தயங்கும் அவர்களுக்கு ஒருநாள் பயிற்சி அரங்கினை ஏற்பாடு செய்வது குறித்த உரையாடல் எனப் பொழுதைப் போக்கி சலித்து அதற்குப்பின் சிங்கிஸ் ஐத்மாத்தாவின் உலக இலக்கிய வரிசைகளில் ஒன்றான “அன்னைவயல்” நாவலைப் படித்து முடித்தேன். இத்தனைக்கும் நடுவே வாக்களிக்க மட்டும் ஊர் திரும்பும் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டினை வழங்கிக் கொண்டிருந்தேன். வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர் களோடு மல்லுக்கட்டக் கூடாது என முன்கூட்டியேதிட்டமிட்டு இருந்த காரணத்தால் இரண்டு தினங்களுக்கு முன்பே காலை 7.30 முதல் இரவு 7.30 மணி வரை என இரண்டு நாட்களும் கூடுதலாக ஐந்து மணி நேரமும் செலவிட்டு எனது கையிருப்பில் இருந்த தகவல் சீட்டுகளில் 75 சதவீதசீட்டுகளை அவரவர்களின் வீடுகளுக்கே தவறின்றி அவர்களின் கைகளிலேயே கொடுத்து வந்தேன். (அப்படியும் இரண்டு சீட்டுகள் தவறுதலாக விடுபட்டு விட்டது) பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அறிகிறேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு நாட்கள்முடியும் தருவாயில் தகவல் சீட்டு விநியோகத்தில் 40 சதவீதத்தை கூட தாண்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். இந்த ஐந்து வருடங்களுக் குள்ளாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாக்காளர் பட்டியலை சரிவர கையாண்டு மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தி கொண்டதன் விளைவாக, அதே இரண்டு நாட்களில் 75 சதவீததகவல் சீட்டினை வழங்கும் அளவிற்கு இம்முறை என்னை நான் முன்னேற்றி இருக்கிறேன்.ஆனால் தேர்தல் நடத்தும் அரசு அலுவலர்கள் இன்னும் ஒரு தப்படி கூட நகராமல் அதே இடத்தில் கூடுதலான பிழைகளோடு இருந்துகொண்டு எங்களைப் போன்றவர்களை மிகவும் சோதனைக்கு உள்ளாக்குகிறார்கள். 

சென்ற தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலைஅலுவலர் என்கிற பதவியை சொல்லியும் கூட வாக்குச் சாவடியில் இருந்த காவலர்களால் 100 மீட்டர் எல்லைக்கு வெளியே துரத்தப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு எவ்வித வசதியும் இன்றி கோயில் வளாகத்தில் படிக்கட்டில் அமர்ந்து எனது பணியைத் தொடர்ந்தேன். இந்தமுறையும் எவ்வித மாற்றமுமின்றி அதே கோயில்; அதே திண்ணை; அதே குப்பைக்கூளம். இங்கிருந்து பணியாற்றும் எங்களுக்கு பெயர் மட்டும் “வாக்குச்சாவடி நிலை அலுவலர்”. எந்தவித தன்மான உணர்வும் இன்றி இப்படியான சூழலில் பணியாற்ற தேர்தல் பணியை ஏற்று நடத்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்மதிப்பார்களா என்றுதெரியவில்லை. ஆனால் ஆசிரியர்கள் அதிகாரமற்றவர்கள். அவர்களை எப்படியும் பயன்படுத்த லாம் என்கிற ஆணவப் போக்கும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையுமே எங்களை இந்த இழிநிலைக்கு காரணமாக்குகிறது.

இந்தப் பதிவை எழுதுவதற்கான மிக முக்கியமான காரணங்கள் எதுவும் மேலே சொன்னவை களில் இல்லை. அரசியல் அதிகாரம் பண பலத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் செயல்படாத்தன்மை என்னைப்போன்ற கடைநிலை ஊழியர்களை உள்ளூர் அரசியல் பிரமுகர் களின் அதிகாரங்களுக்கு அடிபணியச் செய்கிறது. எனது சொந்தக் காசை செலவு செய்து, அரசு அளித்த வாக்காளர் பட்டியலை தனித்தனியாக செம்மை செய்து எனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் இரண்டே நாட்களில் லட்சாதிபதி ஆகியிருப்பார்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று தகவல் சீட்டினை கொடுத்துவிட்டு வந்த பின்பு அதையே டோக்கனாக மாற்றி பண விநியோகத்தை செய்து வந்தார்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள். அவர்கள் எதை வேண்டு மானாலும் செய்துவிட்டுப் போகட்டும். அதை தடுப்பதற்கு எங்களால் இயலாது. ஆனாலும் தொலைபேசி வழியாக என்னை மிரட்டி அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட இடத்திற்கு முதலில் தகவல் சீட்டினை அளிக்க வற்புறுத்துவதும் எங்களிடம் பண ஆசை காட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதை மறுக்கும் சமயத்தில் எங்களின் பணிப் பாதுகாப்பை சந்தேகத்திற்கு உள்ளாக்கு கிறார்கள் மிரட்டல் தொனியில். இது நடந்தது சென்ற தேர்தலின்போது. இந்த முறை அவர்களின் செயல்பாட்டு வடிவத்தை மாற்றிக்கொண்டார்கள். வாக்காளர்களிடம் எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்ச்சியாக தொலைபேசியில் எங்களை அழைக்கச் சொல்லி பணிகளுக்கு இடையூறு செய்வதற்கு முனைந்தனர். அவர்களின் நோக்கம் அவர்களின் முன்னிலையில் அவர்கள் விரும்பும் நபர்களுக்கு எங்களை தகவல் சீட்டினை அளிக்க வைப்பதுதான். அதன்மூலம் அவர்களின் செல்வாக்கை அரசு செலவில் பெருக்கிக்கொள்வதும் தான்.

வாக்களிக்கும் தினத்திற்கு முந்தைய இரவு 9 மணி அளவில் தொலைபேசி அழைப்பு ஒன்றுவந்தது. “சார், எங்க இருக்கீங்க, இந்தத் தோட்டத்துக்கு இன்னும் நீங்க தகவல் சீட்டு கொடுக்கலயாமே, என்ன செய்யப் போறீங்க?” என்றது குரல். இந்த உரையாடலை பின்னிருந்து இயக்கும் உள்ளூர்பிரமுகரின் குரலும் எனக்கு கேட்கவே செய்கிறது. கேட்டால் கேட்கட்டுமே என்பது அவர் களின் திண்ணம். நான் ஏற்கனவே அந்தத் தோட்டத்திற்கு தகவல் சீட்டினை அளிக்கச் சென்று பல முறை அழைத்தும் யாரும் வராத காரணத்தால் திரும்பி வந்திருந்தேன். அதையெல்லாம் அவ்வேளையில் குறிப்பிட்டுச் சொல்லாமல் நாளை காலை வாங்கிக் கொள்ளலாம் என்று மட்டும் சொல்லி துண்டித்து விட்டேன். அவர்களின் நோக்கம் அந்த தோட்டத்து வாக்காளரிடம் தங்களை உயர்வாகக் காட்டிக் கொண்டு என்னை, எனது பணியை சிறுமைப்படுத்துவது தான்.அன்றைய இரவு உறக்கம் வராமல் படுத்துஇருந்த பொழுது என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி நான் யாருக்காக இப்பொழுது பணியாற்றி வருகிறேன் தேர்தல் ஆணையத்திற்கா? அல்லது உள்ளூர் அரசியல் பிரமுகருக்கா? இத்தோடு அவர்களின் மூர்க்கத்தனம் முடியவில்லை. வாக்களிக்கும் தினத்தன்று வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் உணவும், தேநீரும் வழங்கியஅவர்களால் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பணியாற்றி வந்த எனக்கு தண்ணீருக்குக் கூட வழி செய்யவில்லை அவர்கள். தேர்தல்ஆணையமும் அப்பணியை எந்த வாக்குச் சாவடிக்கும் செய்யவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்து எனக்கான உணவையும் தண்ணீரையும் எடுத்துச் செல்வதை எப்பொழுதோ நான் வழக்கமாக்கிக் கொண்டேன்.

இப்போது சரியாக மாலை 6.30 மணி. நான் வாசித்துக் கொண்டிருந்த அன்னைவயல் நாவலின் இறுதிக்கட்டம். பாசிச ஜெர்மானிய படைக்கு எதிரான ரஷ்யர்களின் படைப்பிரிவில் இருந்த தனது கணவன் மற்றும் மூன்று மகன்களையும் போரில் பலி கொடுத்துவிட்ட மூதாட்டி தல்கேனை தனது மருமகளின் பிரசவத்திற்காக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்குச் செல்கிறாள். வழியிலேயே மருமகள் உயிரை விட்டுவிட அங்கு புதிய உயிர் ஒன்று பிறக்கிறது. அந்த பச்சிளம் குழந்தையை எடுத்து தனது சட்டைக்குள் பத்திரப்படுத்தியபடி இதுவரைதனது கிராமத்தின் தலைவியாக கூட்டுப் பண்ணைவயல் உணவு உற்பத்தியிலும் குடும்பத் தலைவியாக வீரமும் பொறுப்பும் மிக்க மூன்று மகன்களை பெற்று வளர்த்த முறையிலும் தான் வாழ்ந்த பெருவாழ்வை எண்ணியபடி நடக்கத் தொடங்குகிறாள் அம்மூதாட்டி தல்கேனை. எதிர்வரும் காலத்தின் சவால்களை எண்ணி மருகியபடி திரும்பிச் செல்லும் மூதாட்டியின் மனவலிகளை நம்முள் கிளர்த்தும் அப்பக்கங்களில் மனம் நிறைந்து நிமிர்ந்து பார்க்கிறேன்.

வாக்குப்பதிவுக் கூடம் கூட்டமேதுமின்றி இருந்தது. அவசர அவசரமாக ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார். இதற்கு முன் அவரிடம் எனக்கு எவ்வித பழக்கமும் இல்லை என்றபோதும் அவரைப் பார்த்ததும் நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர் தனது சொந்த வீட்டை விற்று விட்டு வேறொரு ஊரில் குடியிருந்து வருகிறார். இருந்தாலும் பழைய வீட்டு முகவரியிலேயே தனது குடும்பத்தின் ஓட்டை வைத்துக் கொண்டு வாக்களித்து வருகிறார். இதைஅறிந்திருந்த நான் அவரது தகவல் சீட்டினைஏற்கனவே அவரது சகோதரரின் குடும்பத்தின ரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அக்குடும்பமும் கொடுத்துவிடுவதாக உறுதிகூறி வாங்கிக்கொண்டனர். ஊரிலேயே இல்லையென்றாலும் நம்மைத் தேடி தகவல் சீட்டு வருகிறதே என்றெ ண்ணி மகிழ்ச்சியடைவார் என்றிருந்தேன். 

அவர் என்னை நெருங்கி வந்ததும் விபரங்களை அவரிடம் சொல்லத் தொடங்கினேன். சட்டென்று அவரின் முகம் சிறுத்துப்போய் கண்கள் சிவக்க திட்டத் தொடங்கிவிட்டார். தெருவிலேயே நின்றபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே கோபத்தின் உச்சத்தில் நின்று கத்தத் தொடங்கினார். எதிர்புறமிருந்த வாசலிலும் வீட்டு சன்னலிலும் இருந்து பொதுமக்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். உள்ளூர் அரசியல் பிரமுகரும் உடனுறையும் மனிதர்களும் சில மணித்துளிகள் கல்லாய் மாறிப் போனார்கள். காவலர்களும் எட்டி நின்று கொண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் தேர்தல் அதிகாரி அல்ல. 

வாக்குச் செலுத்த வந்த அந்நபர் கைகளை நீட்டி நீட்டி பேசிக் கொண்டிருந்தார். “உன்ன சும்மா விட மாட்டேன். இதுக்கு என்ன செக்சன் இருக்குதோ அதுல உன்னப் பிடிச்சுக் கொடுக்காம இருக்கமாட்டேன்” என சபதமிட்டுக் கொண்டிருந்தார். பின் அவரின் வரிசை எண்ணை அறிந்து கொண்டு வாக்களித்துத் திரும்பினார். வந்தவரை மறித்து நான் சில விளக்கங்களை சொல்ல முற்பட்டேன். பதற்றமும் கோபமும் ஆற்றாமையும் ஒன்று சேர்ந்து என்னை நடுக்கமுறச் செய்தது. என் குரல் வெளிவர மறுப்பதை அறிந்த கண்கள் கண்ணீரால் பேசத் தொடங்கியது. அதன்பின் அங்கு யாரையும் பார்க்க விருப்பாமல் வண்டியை கிளப்பிக் கொண்டு வந்துவிட்டேன். கோவை செல்லும் புறவழிச்சாலையில் கிழக்கும் மேற்குமாக அலைந்து பின் வீடு சேர்ந்தேன். வாசலில் நுழையும் முன்பே வாலை ஆட்டிக் கொண்டு வாஞ்சையோடு என்னை முகர்ந்து பார்த்த என் வீட்டு நாய் நினைத்திருக்கலாம் … “நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு?”

பதிவு: திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராகப் பணியாற்றிய ஓர் ஆசிரியர்.

;