articles

img

நூற்றாண்டு வரலாற்றை அசைபோடும் மக்கள் மன்றம்... (இரண்டாம் பத்தி)

மாகாணப் பட்டியலில் வரும் பொருள் குறித்தும் பொதுப்பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்தும் மாகாண சட்டமன்றங்கள் சட்டம் இயற்றலாம். எனினும், பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாகாண சட்ட மன்றம் சட்டம் இயற்றினாலும், அதே பொருள் குறித்து மத்திய சட்டமன்றம் சட்டம் இயற்றினால் அச்சட்டமே மேலாண்மை பொருள்.

                                 $$$$$$$$$$$$

இந்திய அரசு சட்டத்தின் 71 ஆவது பிரிவின்படி உறுப்பினர்களுக்கு சில சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன. அதன்படி சட்டமன்றத்தில் பேச்சு சுதந்திரம், சட்டமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு சட்டமன்ற நடவடிக்கைகளிலிருந்து காப்புரிமை அளிக்கப்பட்டன.

                                 $$$$$$$$$$$$

பிரிவு 93 இப்படி அவசர காலங்களில் அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து நிர்வாகத்தையும் சட்டமியற்றும் பணியையும் மேற்கொள்ள ஆளுநருக்கு உரிமை வழங்கப்பட்டது.  இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னரின் சார்பாக செயல்படும் ஆளுநரின் பெயரில் அனைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டன.

                                 $$$$$$$$$$$$

இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கேட்காமலேயே நாட்டை போரில் ஈடுபடுத்தியதை அடுத்து 1939 அக்டோபரில் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது.

                                 $$$$$$$$$$$$

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது பிறகு, அரசமைப்பின் படி, ஆளுநர் மாநிலத்தின் தலைவரானார். அவரிடமிருந்த சட்டமியற்றும் அதிகாரம் நீக்கப்பட்டது. சட்டமன்றம் கூடாது நாட்களில் மட்டும் அவசர சட்டம் இயற்றலாம். ஒன்றியத்திலிருந்து ஃபெடரல் சட்டமன்றத்தின் பொறுப்புகளை அரசமைப்பு அவை ஏற்றுக் கொண்டது.

                                 $$$$$$$$$$$$

இந்திய அரசுச் சட்டம் 1947-ன் படி பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரங்கள் மறைந்தன என்றாலும், இந்திய அரசுச் சட்டம் 1935-ன் அடிப்படையில் உருவான மாகாண சட்டசபைகள் தொடர்ந்து செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

பின்னர், இந்திய அரசமைப்பு சட்டத்தை வடித்தளித்தது. 26.1.950 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டம், நாட்டின் பாதுகாப்பு, நிதித் தன்னிறைவு, பொது அமைதி ஆகியவற்றுக்குட்பட்டு, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்களும், இறையாண்மை பெற்ற சட்டமன்றங்களும் உருவாக்க வழிகோலியது. இச்சட்டம் அமலுக்கு வந்த போது இருந்த சட்டமன்றப் பேரவை 1952 வரை நீடித்தது.

                                 $$$$$$$$$$$$

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி 1952ஆம் ஆண்டு முதல் பேரவை, மேலவை என இரு அவைகளும் கொண்ட சட்டமன்றம் அமைந்தது. பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். சட்டமன்ற மேலவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் ஆங்கிலோ-இந்தியர் ஒருவரும் இல்லை எனில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 333-ன் படி ஒருவரை ஆளுநர் நியமித்துக் கொள்ளலாம்.

                                 $$$$$$$$$$$$

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வயதுவந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. சென்னை, ஆந்திரா, கன்னடா, கேரளா பகுதிகளை உள்ளடக்கி சென்னையில் அமைந்த மாகாண சட்டமன்றப் பேரவைக்கு 309 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 375 உறுப்பினர்கள் என வரையறுக்கப்பட்டது. 243 தொகுதிகளில் ஓர் உறுப்பினர் கொண்டவை என்றும் 62 தொகுதிகள் என்றும் இரு உறுப்பினர்கள் கொண்டவை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஓர் உறுப்பினர் தொகுதியில் ஆதிதிராவிடருக்கு ஒரு இடம், நான்கு தொகுதிகள் இரு உறுப்பினர்கள் கொண்ட ஒரு இடம் பழங்குடியினருக்கு இன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

அதேபோல், மேலவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 72 என்றும் அதில் உள்ளாட்சி தொகுதியை சார்ந்தவர்கள் 24 பேர். சட்டமன்றப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் 24 பேர். பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் இரண்டும் முறையே 6, மீதமுள்ள 12 பேர் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

                                 $$$$$$$$$$$$

ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தனியாக பிரிக்கப்பட்டது. இதனால் முந்தைய பெல்லாரி மாவட்டத்தில் கன்னடர்கள் வாழும் பகுதி மைசூரோடு இணைக்கப்பட்டது. இதனால், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 231 ஆக குறைக்கப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

அதன் பிறகு 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பின்னர் தமிழகத்தின் சட்டமன்ற எண்ணிக்கை 190 ஆக குறைந்தது.  1956ஆம் ஆண்டு தொகுதி வரையறைக்குப் பின் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது. இவற்றில் ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதிகள் 129. இரு உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகள் 38. இவற்றில் 36 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும் ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

ஆந்திரா மற்றும் தமிழகத்தின் எல்லைகள் சீரமைக்கப்பட்ட பிறகு, 1961 ஆம் ஆண்டு இரு உறுப்பினர்கள் தொகுதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, 38 உறுப்பினர்கள் தொகுதிகள் ஒழிக்கப்பட்டன. அந்த தொகுதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒரு உறுப்பினர் தொகுதியாக ஒதுக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு தொகுதி வரையறைக்கு பின்னர் ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர் நீங்களாக தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் 234 ஆக உயர்ந்தது. அதில் 42 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

                                 $$$$$$$$$$$$

நாடு விடுதலைக்குப் பிறகு இந்திய அரசமைப்பின் படி, 1.3.1952 ஆம் ஆண்டு அமைந்த முதல் சட்டமன்றப் பேரவையில் தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 375 ஆக இருந்துள்ளது.

                                 $$$$$$$$$$$$

சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தற்காலிக பேரவைத் தலைவராக பி.டி.ராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தேர்தலில் ஜே.சிவசண்முகம் பிள்ளை, எஸ்.ஸ்வயம் பிரகாசம் ஆகியோர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்துள்ளது. 206 வாக்குகள் பெற்ற சிவசண்முகம் பிள்ளை பேரவைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

                                 $$$$$$$$$$$$

162 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ஸ்வயம் பிரகாசம் தோல்வி அடைந்துள்ளார். துணைத் தலைவருக்கும் தேர்தல் நடந்துள்ளது. இதில் 198 வாக்குகள் பெற்ற எம்.பக்தவத்சல நாயுடு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஆர்.விஸ்வநாதனுக்கு 164 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

                                 $$$$$$$$$$$$

பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசண்முகம் பிள்ளை 1901 ஆம் ஆண்டு  ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர். காந்தி மீது தீவிர பக்தி கொண்டவர். சென்னை லயோலா மற்றும் மாநில கல்லூரிகளில் பட்டப் படிப்புகளை முடித்த அவர் 31 வயதிலேயே சென்னை மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 1937-ல் மாநகராட்சியின் முதல் ஆதிதிராவிட மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                 $$$$$$$$$$$$

அவரைத் தொடர்ந்து என்.கோபால மேனன், டாக்டர் கிருஷ்ணராவ், எஸ்.செல்லப்பாண்டியன், சி‌.பா.ஆதித்தனார், புலவர் கா.கோவிந்தன், கே.ஏ.மதியழகன், முனுஆதி.பி.எச்.பாண்டியன், முனைவர் மு.தமிழ்குடிமகன், இரா.முத்தையா, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், டாக்டர் கா.காளிமுத்து, இரா.ஆவுடையப்பன், டி.ஜெயக்குமார், ப.தனபால், தற்போதைய மு‌.அப்பாவு வரை பேரவைத் தலைவர் இருக்கையை அலங்கரித்து வருகின்றனர்.

                                 $$$$$$$$$$$$

பேரவைத் தலைவர் பதவிக்கு ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த சிவசண்முகம் பிள்ளைக்கு பிறகு, அரை நூற்றாண்டுகளைக் கடந்து அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ப.தனபால் போட்டியிட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ பிரகாசா, ஏ.ஜே.ஜான் பிஷ்ணுராம் மேதி, மகாராஜா ஜெயசாமராஜ உடையார் பகதூர், சர்தார் உஜ்ஜல் சிங், கோதார் தாஸ் காளிதாஸ், மோகன்லால் சுகாதியா, பிரபுதாஸ் பட்வாரி, சாதிக் அலி, சுந்தர்லால் குரானா, டாக்டர் பி.சி.அலெக்சாண்டர், சுர்ஜித் சிங் பர்னாலா, பீஷ்ம நாராயண் சிங், டாக்டர் எம். சென்னாரெட்டி, கிருஷ்ணகாந்த், எம் பாத்திமா பீவி, டாக்டர் ரங்கராஜன், பி.எஸ்.ராம மோகன் ராவ், கே ரோசையா, சி.வித்யாசாகர் ராவ் ஆகியோரைத் தொடர்ந்து பன்வாரிலால் புரோகித் ஆளுநராக உள்ளார்.

                                 $$$$$$$$$$$$

சென்னை மாகாணத்திற்கு சுப்பராயலு ரெட்டியார், பனகல் ராஜா, டாக்டர் பி.சுப்புராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராசன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு, சி.இராஜகோபாலச்சாரி, டி.பிரகாசம் ஆகியோர் முதல் அமைச்சர்களாக 1921 முதல் 47 வரை நாடு விடுதலைக்கு முன்பு முதலமைச்சராக இருந்தனர்.

                                 $$$$$$$$$$$$

தமிழ்நாடு முதலமைச்சர்களாக ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசுவாமிராஜா, சி.ராஜகோபாலச்சாரி, கே.காமராஜ், டி.பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை,மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜானகி இராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரைத் தொடர்ந்து, முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இன்றைய முதலமைச்சராக பொறுப்பில் உள்ளார்.

                                 $$$$$$$$$$$$

சுதந்திரத்திற்கு பிறகு, 1952-57 ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்த மாகாண முதல் சட்டமன்ற பேரவைக்கு தமிழகத்திலிருந்து ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ராமமூர்த்தி மதுரை வடக்கு, டி.எஸ்.அர்த்தனாரி திருச்செங்கோடு (பொது), பி.ஜீவானந்தம் (ஜீவா) சென்னை வண்ணாரப்பேட்டை, கே.வி.ராமசாமி நாமக்கல் (பொது), எஸ்.ராமலிங்கம் தஞ்சாவூர் (பொது), எம்.கல்யாணசுந்தரம் திருச்சி வடக்கு, கந்தசாமி மன்னார்குடி (பொது), மருத்துவர் ஜி.சிற்றம்பலம் ஸ்ரீரங்கம், என்.சிவராஜ் நாகப்பட்டினம் (பொது), ஏ.கே.சுப்பையா மன்னார்குடி (தனி), வி.மதனகோபால் வேடசந்தூர், கே.டி.ராஜூ ஈரோடு, வடிவேலு நாகப்பட்டினம் (தனி), பி.வெங்கடேச ஷோலகர் ஆகிய 14 பேர் வெற்றி பெற்றனர். நாடு விடுதலைக்கு முன்பு 1946 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தோழர் கே.அனந்த நம்பியார் வெற்றி பெற்றுள்ளார்.

                                 $$$$$$$$$$$$

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலரான பிரான்சிஸ் டே என்பவர் தனது சொந்த செலவில், 1640 ஆம் ஆண்டு கோட்டையை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறார். புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23 ஆம் தேதி கோட்டை கட்டி முடித்து அதற்கு ‘புனித ஜார்ஜ் கோட்டை’ என்று பெயர் வைத்துள்ளார். இதன் மொத்தப் பரப்பளவு 107 ஏக்கராகும். தற்போது தலைமைச் செயலகம் செயல்படும் பிரதான கட்டடம் 1781 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு ஆளுநரின் இல்லமாகவும், அரசு விழாக்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

1910 ஆம் ஆண்டில் கோட்டை வளாகத்திற்குள் சட்டமன்ற மண்டபம் கட்டப்பட்டது. மக்கள் தொகை, பேரவை உறுப்பினர்கள் துறைகளின் எண்ணிக்கை விரிவடைந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத் துறைகள் இட நெருக்கடி இன்றி செயல்பட ஏதுவாக தரை தளம் மற்றும் 10 தளங்கள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை 1975 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

1687 ஆம் ஆண்டில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட தேக்கு மரத்தாலான கம்பம் கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இக்கொடிக்கம்பம் தான் நாட்டிலேயே உயரமானதாகும். தேக்கு மரம் பழுதடைந்ததால் எஃகில் ஆன புதிய கொடிக்கம்பம் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

                                 $$$$$$$$$$$$

1974 ஆம் ஆண்டு வரைக்கும் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை ஆளுநர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதை மாற்றி முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் புதிய சகாப்தத்தை முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார்.

                                 $$$$$$$$$$$$

பண்டைய தமிழகத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு ஆண்டு வந்த பெருநில, குறுநில மன்னர்களின் காலத்தில் பொருளீட்டுவது மட்டுமன்றி, ஆலோசனைகள் பெற  மற்றும் அரசு அலுவல்களை மேற்கொள்வதற்கான ஐம்பெரும் குழு, எண் பேராயம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களும், வாரியங்களும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அவற்றின் உறுப்பினர்களின் பணிகளும், நிருவாக விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டு செயல்முறைகளும் சீர்திருத்தங்களும் அமல்படுத்தப்பட்டன.

                                 $$$$$$$$$$$$

இத்தகைய பின்னணியில், வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நமது நாட்டில் அவர்களது ஆளுமையை நிறுவினர். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் மாநிலங்களை மதராஸ், பம்பாய், கல்கத்தா என மூன்று மாகாணங்களாகப் நிர்வாக வசதிக்காக பிடித்துக் கொண்டனர். ஆளுநர்களை நியமித்து செலுத்திய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைந்த சட்டப்பேரவை இப்பொழுது 69 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில், 1921 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவையாக உருவான தமிழ்நாடு சட்டப்பேரவையின் 100 ஆண்டுகளை நிறைவு செய்வதை மக்கள் மன்றம் என்றென்றும் நினைந்து போற்றும்.

இந்த கட்டுரைத் தொகுப்பு 4 மற்றும் 5-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பத்தி மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பத்தி 4-ஆம் பக்கம் பார்க்கவும்....    

ஆதாரம் : புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலகம் திறப்பு விழா சிறப்பு மலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா மலர், தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூலகம், தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்புகள்...

தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு

;