articles

img

போராட்டங்களே வர்க்க நீதியை தீர்மானிக்கின்றன....

தமிழகத்தின் எல்லா சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. எல்லா கடைகளும் மூடிக் கிடக்கின் றன. சிறியவர்களின் விளையாட்டு முதல் பாரம்பரிய தொழில்கள் வரை உறைந்து போயிருக்கிறது. வீதிகள் அடக்கி வாசிக்கின்றன. திருவிழாக்கள் முதல் அரசியல், பொதுநிகழ்வுகள் அனைத்துக்கும் கட்டாய தடை.ஆலயக் கதவுகள் அனைத்தும் மூடி கிடக்கின்றன. உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரத்தை பரவாமல் தடுப்பதற்கு கொடூர வைரஸ் தாக்குதலிலிருந்து மனித உயிரைக் காப்பதற்காக தமிழகம் ஊரடங்கு உத்தரவு என்கிற ஆயுதத்தின் மூலம் ஓரளவு அடக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஊரடங்கு உத்தரவின் நோக்கமே மனிதர்கள் கூட்டமாக சேரவிடாமல் இருப்பதற்கும் அதன் மூலம் நோய் பரவல் சங்கிலித் தொடரை அறுத்து எறிவதற்குமான முயற்சிதான்.

தமிழகமே உரடங்கில் முடங்கியபோது, பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் ஊரடங்கை மதிக்கவில்லை. அரசுப்பேருந்து முதல் தனியார் பேருந்துகள் வரை எல்லாம் சிலையாக நின்று கிடக்க பெரும் ஆலைகளின் பேருந்துகள் மட்டும் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை கூட்டம் கூட்டமாக தொழிலாளிகளை ஒரு பேருந்தில் தனிமனித இடைவெளி இல்லாமல் அழைத்துச் செல்கின்றன. தேவாலயம், மசூதிகள், கடவுளின் ஆலய கதவுகள் மூடிக்கிடக்கின்றன. ஆனால் பன்னாட்டு ஆலைகளின் கதவுகள்  இரவும் பகலும் திறந்தே கிடக்கின்றன. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்கள் எப்போதும்போல் தடையின்றி செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் தினசரி உற்பத்திக்காக பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஷிப்ட்டுக்கு குறைந்தபட்சம் 500 முதல், ஹூண்டாய் போன்ற ஆலைகளில் 4800 பேர் வரை பணிபுரிகின்றனர். 

இந்தபின்னணியில் சென்னையை சுற்றியுள்ள மண்டலங்களில் நோய் பரவல் தடுக்க முடியாத  நிலைக்குதள்ளப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பொருந்தும்.கோவை, திருப்பூர், கடலூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஆலைகள் தடை இன்றி இயங்கின. தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் உற்பத்திக்காக வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இதன் விளைவு,  வேலைக்குப் போன தொழிலாளிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். 
குக்கிராமங்கள் முதல் நகரங்கள்வரை பேருந்துகளில் செல்லும் ஒரு பெரும் சங்கிலித் தொடர் இந்த ஆலைகள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இருக்கிறது. இந்த பின்னணியில் நோய் பரவல் கிராமங்களை நோக்கிச் சென்றது. ஒரு தொழிலாளிக்கு பரவும் நோய் அவர் குடும்பம் முழுவதும் பாதித்தது. ஒவ்வொரு தொழிற்சாலையும் இந்த நோயின் தன்மை அதிகரித்த போது ஒவ்வொரு ஆலையிலேயும் குறைந்தபட்சம் 10 சதமான தொழிலாளிகளுக்கு இந்த காலகட்டத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

உதாரணத்திற்கு ஹூண்டாய் ஆலையில் 750 பேர்,  நிசான் 240 பேர், அப்பல்லோ 280 பேர், ரெனால்டு நிசான் 603,  போர்டு 120 பேர் -   இப்படி அனைத்து ஆலைகளிலும் நோய் தொற்றுக்கு தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதுவரையிலும் ஹூண்டாய் உள்பட 10க்கும்மேற்பட்ட ஆலைகளில் மட்டும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என 40 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்த மரணங்களின் எண்ணிக்கை என்பது மிகப்பெரும் அச்சத்தை தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை. மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் தமிழகஅரசிற்கு சிஐடியு, ஊரடங்கு காலத்தில் எப்படி அனைத்து தொழிலும்  தடை செய்யப்பட்டதோ இந்த ஆலைகளையும், ஊரடங்கு காலத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. 

அரசிடமிருந்து இந்த பிரச்சனையில் எந்த பதிலையும் எதிர்பார்க்க முடியவில்லை இந்நிலையில் அதிகபாதிப்பு உள்ள தொழிற்சாலைகளில் அச்சமுடன் தொழிலாளிகள் யாரும் வேலைக்கு போக வேண்டாம்; விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் உயிர்தான் முக்கியம் என்கிற முறையில் சிஐடியு அனைத்து ஆலைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அறைகூவல் விடுத்தது.தொழிலாளிகள் அச்சத்தில் இருந்து விடுபட அவர்களாகவே முடிவுக்கு வந்தார்கள். கப்போரோவில் இது வேலைநிறுத்தமாக வடிவெடுத்து, ஹூண்டாய் ஆலைக்கும் இந்தவேலை நிறுத்தம் பரவியது. நிசான் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது. ஜேகே டயர் வேலை நிறுத்தத்திற்குச் சென்றது.இந்த போராட்டங்களின் எதிர்வினையாக ஹூண்டாய் -நிசான் -போர்டு -ராயல் என்பீல்டு- எல் அன்டு/டி நிறுவனங்கள், அப்பல்லோ உள்பட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தன.அரசு மூலம் செய்யமுடியாததை தொழிற்சங்க இயக்கம், தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் இதை சாதித்தது.இந்தப் போராட்டங்கள் வெறும் விடுமுறையை மட்டும் பெறவில்லை; கோவிட் பாசிட்டிவ் நோயில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான அதிகபட்ச மருத்துவ சிகிச்சை முழுவதையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்ற முடிவுக்கு வந்தனர்.

நோயால் பாதிக்கப்படும் காலத்தில் அத்தனை நாட்களையும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மருத்துவ சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு அதிகபட்ச தொகை தருவதற்கு ஒவ்வொரு ஆலையும் ஒவ்வொரு விதமாக ஒப்புக்கொண்டுள்ளன. உதாரணமாக, அப்பல்லோ இரண்டு வருட காலத்திற்கான மொத்த சம்பளத்தை கூடுதல் பலனாக வழங்கவும் மரணமடைந்த தொழிலாளி  குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்கவும் அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கான உயர்படிப்புக்கு அனைத்து செலவுகளையும்  ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. இதேபோல் மற்றதொழிற்சாலைகளும் அறிவித்திருக்கின்றன. இவையெல்லாம் தொழிற்சங்கத்தோடு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இப்படிபல்வேறு ஆலைகளில் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெற முடிந்திருக்கிறது; சமூக இடைவெளியுடன் பயணிக்கவும் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கும் வருங்காலங்களில் இந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. 

இதுவரையிலும் தொழிற்சாலைக்கும் தொழிற்சங்கத்திற்கும்  இடையிலான ஒப்பந்தத்தில் இல்லாத கூடுதல் பாதுகாப்பினை இந்த போராட்டங்கள் பெற்றுத் தந்துள்ளன.கொடூர நோய் தொற்றி ஒட்டுமொத்த சமூகமே பாதிக்கப்பட்டாலும் சமூகத்தின் சீரழிவு பற்றி கொஞ்சமும் கவலை இல்லை; உற்பத்தியும் லாபமும் தான் எங்களுக்கு முக்கியம்;மரணங்களின் எண்ணிக்கையும் மனிதர் படும் சித்ரவதைகளும் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று பன்னாட்டுநிறுவனங்களின் முதலாளித்துவ லாப வெறி சொல்கிறது. இதை கண்முன்னே பார்க்கிற தொழிலாளிகள், அரசைவிடவும் மேலான அதிகாரம் கொண்ட வர்க்கமாக கார்ப்பரேட் நிறுனங்கள் இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்ததைப் போல அதிகபட்ச ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படக் கூடிய - அதிகபட்ச தொழிலாளர்கள் எண்ணிக்கை செயல்படக்கூடிய -  பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கிற,  சென்னையை ஒட்டி இருக்கிற இந்த மண்டலங்களில் இந்த தடையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இது விடுமுறை அல்ல; நோய் தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பதற்கு அரசு எடுத்திருக்கும் முயற்சிக்கு மேலும் பலம் வாய்ந்த முடிவாக அமையும். தமிழக அரசு இதைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களில் நடக்கக்கூடிய இந்தபோராட்டங்கள் ஒரு செய்தியை பகிரங்கமாக அறிவிக்கின்றன; தனக்கான பாதுகாப்பை, தனக்கான முடிவுகளை தனக்கான நீதிகளை, போராட்டங்களே தீர்மானிக்கின்றன. ஒன்றுபட்ட துணிச்சல் மிக்க போராட்டங்களே நிறுவனங்களை பணிய வைக்கிறது என்பதுதான் தொழிலாளர்கள் இந்த போராட்டங்களின் மூலம் உணர்ந்து இருக்கும்செய்தி.இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது இது. தமிழகத்தில் இப்போது இளம் தொழிலாளி வர்க்கம் தனக்கான முடிவுகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது. இந்த பயணம் தொடரவே செய்யும்.

கட்டுரையாளர் :இ.முத்துக்குமார், மாநிலச் செயலாளர், சிஐடியு

;