articles

img

வழங்கப்படாத ஏழைகளின் சிறப்பு உதவி நிதி: ரூ.1200 கோடி “ஏப்பம்” விடப்பட்டதா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரகாலமே உள்ளதால் தேர்தல் களம் கோடை வெயிலை காட்டிலும் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.தலைவர்களும் சூறாவளியாக சுழன்று வருகிறார்கள்.

மறுபுறம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை, குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அள்ளி தெளித்து வருகிறது ஆளும் கட்சி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அள்ளி வீசி வரும் இந்த வாக்குறுதிகள் ‘சீனி சக்கர சித்தப்பா ஏட்டிலே எழுதி வையப்பா’ என்ற கதையாக அமைந்திருக்கிறது.

எப்படி என்றால்? பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின்தாக்கத்தாலும், வறட்சி, பருவ மழை பொய்த்து போனதாலும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புறஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி,கைத்தறி, கட்டுமானம், சலவை, மரம் ஏறுவோர், உப்பளம், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு,துப்புரவு,மண்பாண்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார் முதல்வர்.

இந்த அறிவிப்பின் மூலம், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி.முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பட்டிதொட்டிகளில் துவங்கி மாநகரங்கள் வரைக்கும் வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு அனைத்தும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதனையடுத்து, மார்ச் மாதம் (2019) சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்குவதன் அடையாளமாக 32 தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.படிப்படியாக அந்தந்த மாவட்டங்களில் 2000 ரூபாய்வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் 2000 ரூபாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அத்துடன்  திட்டம் ‘அதோ’ கதியானது.

கடந்த ஆண்டின் இறுதியில், மீண்டும் தூசி தட்டி  விண்ணப்பங்களை கொண்டுவந்த மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள் வங்கி பாஸ் புக் ஜெராக்ஸ், ஆதார் அட்டை ஜெராக்ஸ் ஆகியவற்றை திரும்பவும் வாங்கிச் சென்றனர். ஒரு வார காலத்திற்குள்  வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் வந்து சேரும் என்றனர். இப்போது சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. ஆனால், காத்திருந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது!வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து ஒதுக்கப்பட்ட ரூ.1200 கோடியை இரண்டு ஆண்டு காலம் முடிவடைந்த நிலையிலும் பயனாளிகள் ஒருவருக்கும் வழங்காமல் ‘ஏப்பம்’ விட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, இந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களை ஏமாற்ற குறிப்பாக பெண்களின் கவனத்தை திசை திருப்பவே இலவச அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தொடர்ந்து ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால்  மக்களவைத் தேர்தலைப் போன்று படுதோல்வி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுக்கு ஏற்படுவது உறுதி!

தொகுப்பாளர் : சி.ஸ்ரீராமுலு

;