articles

img

யாரோ மவராசன் டெய்லியும் சாப்பிடக்கொடுக்கிறாங்க...இடதுகை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் உணவுச் சேவையாற்றும் செங்கொடி இயக்கம்.....

காலை 6.45 மணிக்கு கோவை ரயில்நிலையம் பின்புறம் உள்ள கீதா கேன்டினில் உணவு பொட்டலங்களை ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவ மனை முன்பு 7.20 மணிக்கு ஆட்டோ வருகிறது. மருத்துவமனை வாயிலில் நிற்கிற காவலர் முக மலர்ச்சியோடு ஆட்டோ ஓட்டுனருக்கு வணக்கம் வைத்துஉள்ளே அனுப்புகிறார். இருப்பிட மருத்துவ அதிகாரியின் அறையின்முன்பு ஆட்டோ நிற்கிறது. மருத்துவ மனையின் தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள் ஆட்டோவில் வந்த உணவுப் பொட்டலங்களை இறக்கி வைக்கின்றனர். இந்த உணவுப் பொட்டலங்களை கொடுத்தது யார் என்கிற எந்த விபரமும் இல்லை. அவ்வளவுதான் ஆட்டோ சென்று விடுகிறது.

உணவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தின் அருகே கையில் குப்பை கூடை மற்றும் துடைப்பத்துடன்  வந்த தூய்மைப்பணியாளர் பெண் ஒரேஒரு பொட்டலத்தை மட்டும் எடுத்துச்செல்கிறார். அருகே இருந்த மருத்துவ மனையின் படிக்கட்டில் அமர்ந்து பொட்டலத்தை பிரிக்கிறார். அதில் இட்லி, வடை, சட்னி, சாம்பார் உள்ளது. அகமும்,முகமும் மலர நிதானமாக உண்கிறார்.அவரிடம் யாரும்மா இதை கொடுக் கிறாங்க என்றேன். ‘’தெரியல சாமி யாரோ மவராசன் டெய்லியும் காலையில எங்களுக்கு இட்லி,வடை, பொங்கல், வடை, கிச்சடி, உப்புமா, சேவான்னு கொண்டு வந்து வச்சுட்டு போறாங்க. ஆஸ்பத்திரிய கூட்டுர பெண்கள் ஆளுக்கு ஒன்னு எடுத்து சாப்பிடுரோம். நாங்க காலையில 5 மணிக்கே வேலைக்கு வந்துர்ரோம். லாக் டவுன்கிறதால ஒருடீத்தண்ணி குடிக்க கூட கடை இல்லை. இதை புரிஞ்சுகிட்டு எங்களுக்கு சாப்பிடக்கொடுக்கிறாங்க’’ என்றார் நெகிழ்ச்சி யோடு.

இப்படியாக தூய்மைப்பணியாள ர்கள், காவலாளிகள், லேப் டெக்னீசியன், ஒரு சில மருத்துவ ஊழியர்கள் எனவரிசையாக ஒவ்வொருவராக வந்துஉணவுப் பொட்டலங்களை எடுத்துச் ச்செல்கின்றனர். இவர்கள் யாருக்கும் யார் இந்த உணவு பொட்டலங்களை வழங்குவது என்கிற தகவல் தெரிய வில்லை. தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த கடந்த 10 ஆம்தேதி முதல் இடதுகை கொடுப்பது வலதுகைக்கு தெரியாமல் இந்த உணவுச்சேவை நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் 175 பேருக்கு தினமும் காலையில் இந்த உணவை வழங்குவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி இயக்கம்தான் என்பதை விசாரித்த பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது.

இதுகுறித்து கோவை மாவட்டக்குழு வின் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் களிடம் கேட்கையில், சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என ஒவ்வொரு அமைப்புகளும் அவர்களின் சக்திக்கேற்ப இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நம்முடைய இந்த உணவுச்சேவைக்கு பல்வேறு நல்ல மனிதர்கள் உதவி செய்து வருகிறார்கள். மருத்துவ சேவையில் உள்ள குறைபாடுகளை மாவட்டநிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதும், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவ மனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதும், மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று மருத்துவ தேவைகளை முடுக்கிவிடும் பணிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மேற்கொண்டு வருகிறார். வீதிகள் தோறும் கபசுர குடிநீர் வழங்கு வது, விழிப்புணர்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட நிவாரணப்பணிகளை வழங்குவது என கட்சியின் கிளைகள், ஊழியர்கள் பங்காற்றி வருகின்றனர். கோவை மட்டுமல்லாது, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவையில் சிகிச்சை பெருபவர்கள் நமது கட்சியின் உதவியை நாடுகிறார் கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்கிறோம். இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்கிற ஒற்றைக்குறிக்கோள் மட்டுமே நமது இலக்கு. நிச்சயம் நாம் வெல்வோம். மக்கள் வெல்வார்கள் என்றனர்.

===அ.ர.பாபு===

;