articles

img

பள்ளி வளாகங்களா? பாலியல் வளாகங்களா?

கொரோனா கோரத்தாண்டவத்தால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இணைய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.குழந்தைகள் வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என மக்கள் நம்பிக் கொண்டிருந்த போது வன்முறையாளர்கள் இணையத்தையும் தங்கள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தது சென்னை பிஎஸ்பிபி பள்ளி மூலமாக வெளி வந்தது. அத்துடன் கடந்த பத்தாண்டுகளாக அப்பள்ளியில் நடந்து வந்த பாலியல் கொடுமைகளும் வெளிச்சத்திற்கு வந்து பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்கிற பாலியல் வன்முறையாளன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குறித்து வெளியாகும் தகவல்கள் பெற்றோர் உள்ளிட்ட பொது சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. தொடர்ந்து தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

உலக அளவில் முதலிடம்
கடந்த அதிமுக அரசு பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்கு பொள்ளாச்சி வழக்குக் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுவதே சாட்சி. முந்தைய அரசின் இந்த பெண்கள்விரோதப்போக்கு பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் புகார் அளிப்பதில் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போதைய தமிழக அரசின் மேற்கண்ட கைது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான  பாலியல் வன்முறை நிகழும் நாடுகளின் பட்டியலில்  முதல் இடத்தில் இந்தியா உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி    2019ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 885  பதிவாகியுள்ளன.  2018 மற்றும்  19 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை  24சதவீதம் அதிகரித்துள்ளது 2019 ஆம் ஆண்டில்  சென்னையில் மட்டும் போக்சோ சட்டத்தில் 2358 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசியக் கல்விக் கொள்கை
தேசம் முழுவதும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ள சூழலில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பான கல்விச் சூழல் குறித்தும் அதற்கான சமூகக் கல்வி குறித்தும் ஆக்கபூர்வமான தீர்வுகளையோ வழிகாட்டல்களையோ சொல்லவில்லை. மாறாக   பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு காவலரை நியமிப்போம் என சாத்தியமற்ற அறிவியலுக்குப் புறம்பான ஒரு வெற்று வாக்குறுதியை முன் வைத்துள்ளது.  

அதிகாரச் சமமின்மை 
பொதுவாக கல்விநிலைய வளாகங்களில்  நிர்வாகம் மற்றும்  ஆசிரியர்கள் படிநிலையில் மேலானவர்களாகவும் மாணவர்கள் கீழ் படி நிலையில் உள்ளவர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆசிரியர்கள் அதிகாரமிக்கவர்கள் என்கிற நிலையில், அவர்கள் மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பது இயல்பு என்பது போலவும் வகுப்பறை ஜனநாயகம் என்பது கற்பனைக் கருத்தாகவும் இருந்து வரும் சூழலில் இத்தகு பாலியல் வன்முறைகள் மாணவிகள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.  அதிலும் வர்க்க ரீதியாக பின் தங்கியுள்ள, சாதி, மத, மொழி சிறுபான்மையினராக உள்ள மற்றும் வாழ்நிலை காரணமாக பாதுகாப்பற்றவர்களாக குறிப்பாக ஒற்றைப் பெற்றோர், தனித்து வாழும்பெண்களின்  குழந்தைகளை இந்தக் கொடூரர்கள்குறிவைத்துத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் களைச் செய்கின்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி பள்ளிக்கு வரும்பெண் குழந்தைகள் பிரச்சனையை வெளியே சொன்னால் ஆசிரியரால் மதிப்பெண் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளாவோம் என்கிற அச்சத்திலும், பெற்றோரிடம் சொன்னால் பள்ளிக்கு பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள் என எண்ணியும்  வெளியேசொல்லாமல்  மிகப்பெரிய மனப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்குழந்தை களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மீண்டும் பாது காப்பு குறித்த காரணங்களுக்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் அபாயம் உருவாகிறது.  

ஆசிரியர்-மாணவர் உறவு
 கல்வி தனியார்மயம் ஆனதால் ஆசிரியர் - மாணவர் உறவில் மிகப்பெரிய விரிசல்  ஏற்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடு  என்பதே முற்றிலும் வணிகமயம் ஆகி இருக்கிறது. இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் மதிப்பெண்ணை நோக்கி ஓடும்  பந்தயக்  குதிரைகளாக மாற்றப்பட்டுள்ளனர்.  ஆகவே ஆசிரியர்களிடம் தார்மீக பொறுப்பு உணர்வு குறைந்து இயந்திரகதியானதாக ஆசிரியர் -மாணவர் உறவு கல்வி வியாபாரிகளால் மாற்றப்பட்டுவிட்டது.இதனுடன் ஆணாதிக்கப் பின்புலம், மதிப்பெண் என்கிற பெயரில் மாணவர் மீதான கல்வி நிறுவனங்களின் அதிகாரம் ஆகியவை மாணவிகளை எளிதாக இக்குற்றங்களுக்கு இலக்கானவர்களாக ஏதிலிகளாக்கி விட்டிருக்கிறது என்பதே நம் கல்வி முறையின் அவலம். 

பாலின சமத்துவமின்மை 
இந்த உலகமய நுகர்வுச் சூழல் பாலினப் பாகுபாட்டை மென்மேலும் அதிகரித்திருக்கிறது. பெண் உடல் நுகர்வுப் பண்டமாக சந்தைப்படுத்தப்படுகிறது. இது ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிப்போன மனித மனங்களில் வக்கிரத்தை அதிகப்படுத்துகிறது. நுகர்வுமயச் சூழல் ஏராளமான போலிச் சாமியார்களையும் கல்வியாளர்களாக  உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்கள் தத்தமது வக்கிரங்களுக்கு குழந்தைகளை குறிப்பாகப் பெண்குழந்தைகளை இலக்காக்கிக் கொள்கின்றனர்.

சட்டங்கள் இல்லையா?
பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை 2012 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போக்சோ சட்டம் விதித்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக 1997ல்  விசாகா வழக்கில் உச்சநீதிமன்றத் தின் பரிந்துரை பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வழிகாட்டியுள்ளது. அதனையொட்டி 2013 பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புசட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அரசுப் பணியிடங்களில் கூட இந்தச் சட்டம் சொல்கிற உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்படுவதில்லை. ஏனெனில்இந்த சட்டங்களின் அமலாக்கம் குறித்த கண்காணி ப்பு அரசின் எந்தத் துறையின் கீழும் இல்லை.  

கடந்த ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தில்ஒரு மாணவி, பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த போது விசாரிக்க அங்கே உள்ளகப் புகார் குழு இல்லை என்பது தெரிய வந்து, இந்திய மாணவர் சங்கம் சட்டப்படி அக்குழுவை அமைக்கக் கோரி போராட்டம் நடத்தினோம். பணியிடம் என்பதில் கல்வி நிலையங்கள் உள்ளடக்கம் என்றாலும் கல்வி நிலையங்கள் பிரத்யேகச் சூழலைக்கருத்தில் கொண்டு, அதன் கல்விநிலையங்களில் பாலியல் குற்றங்களைத் தடுக்கப் பிரத்யேகமான சட்டவழிமுறைகளைக் அரசு கையாள வேண்டியிருக்கிறது. மேலும் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். அதனை ஒரு குடும்பமோ அல்லது கல்வி நிறுவனமோ மட்டும் செய்து விட முடியாது. அதே போலவே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சமூகமாக சேர்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அதில் அரசின் பங்கு மிகப் பிரதானமானது. சமூகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது என்கிற நீண்ட நெடிய இலக்கிற்கான அடிகளை நாம் முன்னெடுப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். அதனைக் கல்வியின் வழி அரசு செய்ய வேண்டும் . 

செய்ய வேண்டியவை 

தமிழக அரசு, 

*    குழந்தைகளின் உடல்சார் மாற்றங்கள், உள இயல்புகள், வளர்நிலைகள் அறிவியல்பூர்வமாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழியாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

*    பாலின சமத்துவம் குறித்த அடிப்படைப் புரிதல்கள்பள்ளிகளில் கற்பிக்கப்படுவதோடு ஆசிரியர்களுக்கும் இக்கல்வி வழங்கப்பட வேண்டும். 

*    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக் கான உள்ளகப் புகார்க் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதில் பெற்றோர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், அரசு அதிகாரிகள், சமூக செயல்பாட்டாளர்கள்                                                    உறுப்பினர்களாக்கப்பட வேண்டும். 

*    தனியார் பள்ளிகளில் இக்குழு அரசின் கண் காணிப்பிற்குள் செயல்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். 

*    கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புச்  செயல்பாடுகள் குறித்துக் கண்காணிப்புக் குழுக்கள் தாலுகா அளவில் அமைக்கப்பட வேண்டும்.

*    கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இக்குற்றங்களைத் தடுக்கவும் விசாரிக்கவும் “கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைத் தடுப்பு சட்டம்” இயற்றப்பட்டு மாணவிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்திட நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : வீ. மாரியப்பன், மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்.

;