articles

img

பொன்மலை எழுச்சி 75...

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் பொருளாதார உரிமைகளுக்காகவும் என இரு தளங்களிலும் நடைபெற்ற உணர்வுமிக்க போராட்டங்களில் தென்னக ரயில்வே தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. எழுச்சியான அந்த போராட்டங்களின் வரலாறும், தொழிலாளி வர்க்கத்திற்கு அவை ஊட்டிய வர்க்க உணர்வுகளும் நினைக்கப்பட வேண்டிவை மட்டுமல்ல,  இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டப்பட வேண்டியவையும் கூட. இன்றைய நவீன தாராளமயச் சூழலில், அரசியல் நெருக்கடி முற்றுகிற இத்தருணத்தில், கொள்கைகள் என்ற பெயரால் நமது வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்தும், பறிக்கப்படும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வலுவாக போரிட வேண்டிய நமக்கு அந்த வீரவரலாறு நம்பிக்கையூட்டுவதோடு, நமது பாதைக்கான வெளிச்சத்தையும் காட்டுவதாகவும் உள்ளது. 

ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கையும் அரசின் அணுகுமுறையும்  
தேச விடுதலைக்கு முன்பாகவே அமைப்பு ரீதியாக வலுவாகதிரட்டப்பட்டிருந்த ரயில்வே தொழிலாளர்கள் ஊதிய மாற்றம், நிலுவையில் உள்ள பஞ்சப்படி, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் பொதுவிநியோக முறையில் பொருட்களை வழங்குவது, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தனர். அப்போது இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் பங்கேற்றிருந்ததால், போர் முடிந்தவுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் போர் முடிந்தவுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என அரசு கைவிரித்ததோடு, மூன்று லட்சம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும், ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்த பஞ்சப்படி உள்ளிட்ட உரிமைகளை பறிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத்  தொடர்ந்து வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் உடனடியாக போராட்டங்களில் ஈடுபட்டனர். 1946 ஆம் ஆண்டில் ஏப்ரல், மே, ஆகஸ்ட் என பல்வேறுதருணங்களில் நாட்டிலுள்ள பல பகுதி ரயில்வே தொழி
லாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காகவும், ஊதிய உயர்விற்காகவும் உயர்மட்ட குழுக்கள் அமைப்பதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்தது. அரசின் வாக்குறுதிகளை நம்பி, வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக சொன்ன சம்மேளனத்தின் முடிவு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அரசாங்கத்தின் அணுகுமுறையின் மீது ஒருவித ஐயத்தையும் உருவாக்கியது. தொழிலாளர்களின் ஐயத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் அணுகுமுறையும் இருந்தது. வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு பின்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக காவல்துறையின் மூலம் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதோடு, அன்றைய இடைக்கால காங்கிரஸ் அரசும், வெள்ளை நிர்வாகமும் இணைந்து தொழிற்சங்க அமைப்புகளை முடக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

அடக்குமுறையும்வெகுண்டெழுந்த தொழிலாளர்களும்
அப்போது சென்னை ராஜதானி பகுதியில் பணியாற்றிய தென்னக ரயில்வே தொழிலாளர்கள் மீது ஏராளமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடத்துவங்கியது சதர்ன் இந்தியன் ரயில்வே நிர்வாகம்.  பொன்மலை ரயில்வே பணிமனையில் சட்டவிரோதமாக கதவடைப்பை அறிவித்த நிர்வாகம், வேலை நீக்கம் செய்வது, பொய்வழக்குகள் புனைவது, பணியிட மாற்றல், பதவி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பழிவாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. நிர்வாகத்தின் இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் 1946 ஆகஸ்ட் 24 அன்று தங்களது ஆவேசமிக்க எதிர்ப்பியக்கங்களையும், வீரம் செறிந்த போராட்டத்தையும் துவக்கினர். 40,000 ற்கும்  அதிகமானோர் பங்கேற்ற அந்த வேலைநிறுத்தத்தின் விளைவாக 40,000 மைல் இருப்புப்பாதைகளில் ரயில்களின் இயக்கம் முற்றாக முடங்கியது. மொத்தமுள்ள 650 ரயில் நிலையங்களில் 300 ரயில் நிலையங்கள் முழுவதுமாக முடங்கியது. அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகளையும், காவலர்களின் கொடூரமான தாக்குதல்களையும் மீறி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் நீடித்த இந்த போராட்டத்திற்கு செங்கொடி சங்கம் தீரத்துடன் தலைமையேற்றது. 

பன்முகச் சதிகளில் ஈடுபட்டஅரசும், நிர்வாகமும்
தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் கண்ட அரசும் ரயில்வே நிர்வாகமும் பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தத்தை உடைக்க பல்வேறு சதி வேலைகளிலும் ஈடுபட்டது. அதிகச் சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி ஒரு சில ஊழியர்களை பணிக்கு அழைத்து ரயில்களை இயக்க முயற்சித்தது. வழக்கம் போலவே மக்கள் மத்தியிலும் இதுவொரு சட்டவிரோத வேலை நிறுத்தம் என தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே நிர்வாகமே ஆள் வைத்து ரயில்வே சொத்துக்களுக்கு சேதங்களை உருவாக்கி பழியை தொழிலாளர்கள் மீது போட முயன்றது. 

அன்றைய  திரு.பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைஉடைக்க ரூ.30,000/- நிதி உதவி அளித்து, புதிய ஊழியர்களை பணிக்கு எடுக்குமாறு ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது. ரயில்வே நிர்வாகம் கிறித்தவ மத பாதிரியார்களை சந்தித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அடிப்படையில், பாதிரியார்களும் வேலைநிறுத்ததில் ஈடுபடும் தொழிலாளர்களை வழிபாட்டிற்காக சர்ச்சுகளுக்குள் அனுமதிக்க முடியாது என மிரட்டிப் பார்த்தார்கள். ஆனாலும் வேலை நிறுத்தத்தை உடைக்கவும், தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்கவும் அரசாங்கமும், நிர்வாகமும் மேற்கொண்ட அனைத்து சதிகளையும் தாண்டி தொழிலாளர்களின் வர்க்க உணர்வே மேலோங்கி நின்றது. ஏனெனில் சாதீய, மத அடையாளங்களையும், குறுகிய உணர்வுகளையும் கடந்து நின்ற தொழிலாளர்களால் தான் இவற்றையெல்லாம் எதிர்கொள்ள முடிந்தது.

 அன்றைக்கு தொழிலாளர்களில் கணிசமானோர் சாதி, மத மறுப்பு திருமணங் களை இயல்பாக ஏற்றுக் கொண்டிரு ந்தனர். சங்க மாநாடுகளின் நிகழ்வுகளும் கூட எம்.ஆர். ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோரின் சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய நாடகங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. தொழிற்சங்க அமைப்புகள் பொருளாதாரக் கோரிக்கைகளோடு, கருத்தியல் தலையீடுகளையும் மேற்கொள்கிற போதுதான் வர்க்க உணர்வு மேம்படும் என்பதை தங்களது பணிகளின் மூலம் வெளிப்படுத்திய ரயில்வே தொழிலாளர்களின் முயற்சிகள்  இன்றைக்கும் நமக்கு முன்னுதாரணமான ஒன்றாகவே உள்ளது. 

வரலாறு வியந்த ஆதரவு இயக்கம்
தென்னக ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டிலுள்ள இதர பகுதி ரயில்வே தொழிலாளர்களும் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருவிதாங்கூர் பகுதியில் உள்ள 70,000 தொழிலாளர்களும், கோவை மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள 40,000 மில் தொழிலாளர்களும், மதுரையில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகத் தொழிலாளர்களும், அலகாபாத் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள், ஸ்பென்ஸர் தொழிற்சாலையில் பணியாற்றிய 4,000 தொழிலாளர்கள், திண்டுக்கல்லில் நகர சுத்தித் தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரும் போராட்டங்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றனர். இத்தகைய வர்க்க ஒற்றுமையென்பது உண்மையில் மகத்தானதாகும்.

இந்த வேலைநிறுத்த காலத்தில் ஊதியம் முடக்கப்பட்டதால் சதர்ன் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றிய கேங்மேன் தொழிலாளர்கள் கிராமப்பகுதிகளில் விவசாயக் கூலி வேலைகளில் ஈடுபட்டனர். கிராமங்களில் இருந்த விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்ததோடு, போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நிதி உதவியும் அளித்தனர். கிராமங்களில் இருந்த ரயில்வே தொழிலாளர்களை தேடி காவல்துறையினர் வந்த போது அவர்களை அக்கிராமங்களில் இருந்த பெண்களும் உறுதியோடு எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றனர்.வேலை நிறுத்தத்திற்கு எதிராக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை அரசும், நிர்வாகமும் கட்டவிழ்த்து விட்ட போதும் மக்கள் போராட்டத்தையும், தொழிலாளர்களையுமே ஆதரித்து களத்தில் நின்றனர். அனைத்துப் பகுதியினரும் ஆதரித்து நின்ற இந்த மகத்தான போராட்ட வரலாறு காலமெனும் புத்தகத்தின் பக்கங்களில் உயிர்ப்போடு பதிவாகியிருக்கிறது.  அந்தப் பக்கத்தை எப்போது புரட்டினாலும் உணர்வும் உற்சாகமுமேமேலிடுகிறது.

சிந்திய ரத்தமும் முகிழ்த்த தியாகமும்
தீரத்தோடு தொடர்ந்த போராட்டத்தை ஒடுக்க மிக மூர்க்கமான பலப்பிரயோகத்தை கையிலெடுத்தது அரசு. மலபார் ஸ்டேட் போலிஸ் எனும் காவல் படை களத்தில் இறக்கப்பட்டது. சுழன்ற காவல் துறையின் லத்திக்கம்புகளையும் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளையும் தொழிலாளர்கள் எதிர் கொள்ள நேர்ந்தது. முதற்கட்டமாக 200 தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, 160 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொழிற்சங்க தலைவர்கள் குறிவைத்து வேட்டையாடப் பட்டனர். பொன்மலை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் புகுந்து தொழிலாளர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் நரவேட்டையாடியது மலபார்
 சிறப்பு காவல்படை. தொழிற்சங்க அலுவலகங்கள் தகர்க்கப்பட்டு சுமார் ஐம்பதாயிரம் மதிப்பிலான பொருட்கள் சூறையாடப்பட்டன. தொழிலரசு மாத இதழ் உட்பட அனைத்து ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 1946 செப்டம்பர் 5 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

 இத்தகைய மோசமான அடக்குமுறை தாக்குதலால் குடியிருப்பு வளாகங்களும், தொழிற்சங்க அலுவலகங்களும் ரத்தத்தால் சிவந்தன. ரயில்வே தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய கே.அனந்த நம்பியார் உள்ளிட்ட தலைவர்கள் மீது மிக மூர்க்கமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அவர் மீதான தாக்குதலின் போது அவர் மயக்கமுற்று கீழே விழுந்த கோலத்தை பார்த்து அவர் உயிரிழந்து விட்டார் என நினைத்து அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். அவரது தாயார், மனைவி, மகன்கள் உட்பட குடும்பத்தினரும் தாக்கப்பட்டனர்.

அன்றைக்கு பொன்மலை பாப்பா என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பாப்பா உமாநாத் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானார். தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பங்களை பாதுகாத்தும், தொழிலரசு பத்திரிகையை நடத்தியும், தொழிற்சங்க அலுவலகத்தை பராமரித்தும், வேலைநிறுத்தத்திற்கான நிதியை திரட்டியும்  தோழர் பாப்பா உமாநாத் மேற்கொண்ட பணிகள் மிக மிக முக்கியமானதாகும். இத்துடன் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சம் என்னவெனில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கிருஷ்ணமூர்த்தி எனும் தொழிலாளியின் தாயான பங்காரு அம்மாள் (எல்லோரும் அவரை அத்தையம்மாள் என அழைப்பர்) அவர்கள், தனது கணவர் வேலைநிறுத்தத்தை உடைக்கும் வகையில் வேலைக்குச் சென்றார் என்ற காரணத்திற்காக கணவர் முகத்தில் எறிந்து விட்டு சென்றுவிட்டார். பிறகு இறுதிக் காலம் வரையிலும் சங்கத்திடலிலேயே வாழ்ந்தும் மறைந்தார்.

இத்தகைய மகத்தான போராட்டத்தை சங்கத்தலைவராக இருந்த தோழர். எம்.கல்யாணசுந்தரம் தலைமையேற்று வழிநடத்தினார். ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும், போராட்டங்களிலும் பொதுவுடைமை இயக்க தலைவர்களான தோழர்கள் ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், ஆர்.உமாநாத்,  சி.கோவிந்தராஜன் ஆகியோரது பாத்திரமும் மிக முக்கியமானதாகும். இப்படி ஏராளமானோரின் தியாகமும் உழைப்பும் அளவிடற்கரியதாகும். 

வழிகாட்டும் வீர வரலாறு
இத்தகைய வீரம் செறிந்த ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களை தொடர்ந்து அரசும், நிர்வாகமும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை தீர்ப்பதாகவும், பழிவாங்குதல்கள் கைவிடப்படும் என அளித்த உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் முழுமையாக கோரிக்கைகளை தீர்க்காமல் அரசு தனது வர்க்க நலனை பாதுகாத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்தது. ஆயினும் தென்னக ரயில்வே ஊழியர்களின் போராட்டம் மகத்துவமானது என்பதோடு இன்றளவிலும் தொழிலாளர்களுக்கு பல்வேறு போதனைகளை முன்வைக்கிற வீர வரலாறாகவும் விளங்குகிறது.

                                             ****************

 தலைமை தாங்கியவர்கள், போராட்டத்திற்கு வழிகாட்டியவர்கள், நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள்

1)    தியாகி பரமசிவம் - தலைமை தாங்கியவர்

2)    எம்.கல்யாணசுந்தரம் (தலைவர்) நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர்

3)    கே.அனந்தநம்பியார்(பொதுச்செயலாளர)

4)    ஆர்.உமாநாத் (கட்சியிலிருந்து வழிகாட்டியவர்)

5)    சி.கோவிந்தராஜன் 

6)    எஸ்.கே.நம்பியார்

7)    நெல்லை சு.பாலவிநாயகம்

8)    கே.டி.ராஜூ

9)    குளித்தலை ஆர்.கருப்பையா

10)    பொன்மலை பாப்பா (உமாநாத்)

11)    கோலம்பாளையம் வேலுச்சாமி (ஈரோடு)

12)    பி.எம்.சுப்ரமணியம் (ஈரோடு)

13)    முத்துமாறப்பன்  (ஈரோடு)

14)    பொன்னப்பன் (ஈரோடு)

15)     புருஷோத்தம்மன் (ஈரோடு)

16)    வெங்கடாசலம் (ஈரோடு)

17)    லிங்கப்பன் (ஈரோடு)

18)  மாணிக்கவாசகம் (திருச்சி)

19)    காத்தமுத்து (தஞ்சை)

20)  டி.ஆறுமுகம் (மன்னார்குடி)

21)    முருகேசன் (விழுப்புரம்)

22)     பானுபாய் (விழுப்புரம்)

23)     சோட்டு  என்கிற வாசுதேவன் (விழுப்புரம்)

24)     பாஷாஜான் (கள்ளக்குறிச்சி)

                                             ****************

தென்னக ரயில்வே - 1946 போராட்டத்தில்செப்டம்பர் 5 துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த தியாகிகள்

1) ராஜூ (28)

2) ராமச்சந்திரன் (26)

3) தியாகராஜன் (24)

4) தங்கவேலு (24)

5) கிருஷ்ணமூர்த்தி (22)

கட்டுரையாளர் : டி.கே.ரங்கராஜன், உதவித் தலைவர், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு - சிஐடியு)

;