articles

img

தோழர் மைதிலிக்கு செவ்வணக்கம்...

தோழர் மைதிலி சிவராமனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஜூன் 14 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு துவங்கி இரவு பத்து மணி வரைக்கும் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார்.கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், திமுக மகளிரணித் தலைவர் கவிஞர் கனிமொழிஎம்.பி., விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்து குழுமத் தலைவர் என்.ராம், பேரா.வே. வசந்தி தேவி, சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் வ.கீதா, கவிதா கிருஷ்ணன், அ.மங்கை, ஜான்சிராணி, கல்பனா கருணாகரன், நாகை மாலி, தாவூத்மியாகான், பேரா.அ.மார்க்ஸ், பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் உரையாற்றினர்.

அவரது புகழ் நிலைத்து நிற்கும்!

“அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தோழர் மைதிலி சிவராமன், இந்து என்.ராம்- மற்றவர்களுடன் இணைந்து சென்னையில் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டது மட்டுமல்ல தலைவராகவும் பணியாற்றினார்.தமிழ்நாட்டில் தோழர்கள் கே.பி.ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத் போன்றவர்களுடன் இணைந்து மகத்தான மாதர் இயக்கத்தை தோற்றுவித்தவர். தோழர் ஜானகி அம்மாள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் மட்டுமல்லாமல் விவசாய சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். அதேபோல்தான், மைதிலி சிவராமன் மாதர் சங்க தலைவராக மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இந்தியாவிலும் நிலச்சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்து பல விவாதங்களை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த நிலச்சீர்திருத்த சட்டங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.விவசாயக் கூலி பெண் தொழிலாளர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளை வர்க்க ரீதியில் வெளிக்கொண்டு வருவதற்கு தஞ்சை மாவட்டத்தில் தோழர் பாரதிமோகன் துணைவியார் குஞ்சிதம் பாரதிமோகனுடன் இணைந்து மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று மகத்தான பணியை செய்து முடித்தார்.தோழர் மைதிலி சிவராமனின் எளிய வாழ்க்கையும், மாதர் சங்கம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள், தொழிலாளர்கள் என்று பல தரப்பில் இருந்தும் கட்சிக்கு ஏராளமான புது தோழர்களை கொண்டுவந்த அவரது பணி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

என்.சங்கரய்யா, முதுபெரும் தலைவர்

                                      *********************

சமரசமற்ற போராளி!

“அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த மைதிலி சிவராமனின் எண்ண ஓட்டங்கள், போராட்ட உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவரது உறவினர்கள் பலரும் பிராட்வேயில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தோழர்கள் கல்யாணசுந்தரம்,  காத்தமுத்து உள்ளிட்ட பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு நாட்டு நடப்புகளை கேட்டுத் தெரிந்து கொள்வார்.இந்த சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக சர்வதேச பிரச்சனைகள் முதல் உள்ளூர் விவகாரங்கள் வரைக்கும் தினசரி கட்டுரைகளை எழுதிக் கொடுப்பார். அதிலும் குறிப்பாக அவர் தென்னமெரிக்க போராட்டங்கள், கியூபா மக்களின் எழுச்சி, தோழர் பிடல் காஸ்ட்ரோவுடன் சந்தித்த நிகழ்வுகள் என ஏராளமான கட்டுரைகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர் என்பதால் அவரது கட்டுரையை தமிழாக்கம் செய்து தினசரி வெளியிட்டு வந்தோம்.மைதிலி சிவராமன் எழுத்துப் பணியோடு நின்றுவிடவில்லை. தொடர்ந்து ஏராளமான போராட்டங்களிலும் கலந்து கொண்டு வழி நடத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமன், மிகவும் எளிமையானவர். எப்போதும் சுறுசுறுப்பாக போராட்டக் களங்களில் முன் நிற்பார். சிறந்த பெண் போராளியான அவர், எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பார். சமரசமற்ற போராட்டத்தில் பல வெற்றிகளையும் கண்டவர். என்னுடன் பலகாலம் நட்பு கொண்டிருந்தார்..

ஆர்.நல்லகண்ணு, முதுபெரும் தலைவர்

                                      *********************

புதிய பாதையில் பயணம்!

“முதன்முதலாக நான் மைதிலியை சந்தித்தது அமெரிக்கநாட்டின் நியூயார்க் நகரில். அப்போது நான் ஹார்வர்டுபல்கலைக் கழகத்தில் படித்து வந்தேன். கோடை விடுமுறையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, ஐநா சபையில் பணியாற்றிக் கொண்டிருந்த மைதிலி சிவராமனின் அறிமுகம் இந்து என்.ராம் மூலம் கிடைத்தது.வாரத்தில் ஒரு நாள் நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அங்கு எங்களுக்குள் மிகப்பெரிய விவாதம் நடக்கும். அது சாதாரணமாக இருக்காது‌. சர்ச்சைகளும் சண்டைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.விடுதலை பெற்ற காலனி நாடுகளின் துன்பங்களையும் போராட்டங்களையும் ஆராயக்கூடிய ஒரு குழுவில் பணியாற்றி வந்ததால் காலனி நாடுகளின் நிலைமைகள் அனைத்தும் மைதிலிக்கு அத்துப்படி. இதனால் இந்த பிரச்சனைகள் குறித்தெல்லாம் நாங்கள் நீண்ட நேரம் மணிக்கணக்கில் விவாதம் நடத்தியிருக்கிறோம்.எனக்கு இடதுசாரிக் கொள்கை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், கம்யூனிச கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைக்கு நான் மாறவில்லை. அந்த விவாதங்களின்போது மைதிலி தன்னை எப்போதும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டது இல்லை. ஆனால் என்னுடைய பார்வையில் இருந்து விலகி இடதுசாரிப் பாதையை கொண்டிருந்தார் தோழர் மைதிலி.என்னைவிட ஆறு ஏழு வயது மூத்தவர் தோழர் மைதிலி சிவராமன். ஆனாலும், என்னுடன் மிகுந்த அன்போடு, பாசத்துடன் பழகி வந்தார். அவர் உடன் பிறந்த சகோதரனாகவே பாசத்தை காட்டி வந்தார். அவரும் நானும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தான் இந்தியாவுக்கு திரும்பி வந்தோம். ஆனால் பாதை வேறு வேறாக இருந்தது. நான் திருமணம் செய்து கொண்டு தொழில் நடத்த தொடங்கினேன். மைதிலியோ பல தேடல்களில் ஈடுபட்டார். வினோபாவை சந்தித்தார்.
கியூபா பயணம் அவரது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்காவில் நாங்கள் இருந்த காலத்தில் நடந்த வியட்நாம் போர் எல்லோருக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மாட்டின் லூதர் கிங், கென்னடி படுகொலை அன்றைக்கு மாணவர்களாக, இளைஞர்களாக இருந்த எங்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.அமெரிக்காவில் கருப்பின மக்கள் எழுந்து போராடியது மேலும் எங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. மைதிலிக்கும் அந்த தாக்கம் அதிகம் ஏற்பட்டது. இந்தியாவிற்கு திரும்பி வந்ததும் படிப்படியாக கம்யூனிச இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.இந்தியாவுக்குத் திரும்பி வந்த போது சில ஆண்டுகள் நெருங்கிய தொடர்பில் இருந்தோம். ‘ரேடிக்கல் ரிவ்யூ’ என்கிற காலாண்டு பத்திரிகை துவங்கினோம். இடதுசாரி, புரட்சிகரமான எண்ணங்கள், கருத்துக்கள் பற்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியது அது.பிறகு ஒவ்வொருவராக விலக வேண்டிய சூழல் வந்தது. அந்த காலாண்டு பத்திரிகையை மைதிலி தொடர்ந்து நடத்தி வந்தார். அந்த இதழ்கள் இருந்தால் பாதுகாத்து வைக்க வேண்டுமென்று அந்த குடும்பத்திற்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் அந்தப் பத்திரிகை இளைஞர்களின் மன எழுச்சி, அறிவு வளர்ச்சியை அது பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன்.எங்களுக்குள் பாதை வேறு; ஆனால் சமுதாய  பார்வையில் பல ஒற்றுமைகள் உண்டு. குறிப்பாக  பெண் விடுதலை, பெண் உரிமைகள், சாதிக் கொடுமை இவற்றிலெல்லாம் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பொருளாதாரக் கொள்கையில் வேறுபாடு இருந்தது.வறுமையை ஒழிப்பதற்கு மார்க்சியமும் கம்யூனிசமும் வழியல்ல என்று நான் நினைத்தேன். இல்லை அதுதான் வழி என்று மைதிலி நினைத்தார். மக்கள் போராட்டத்தின் மூலம்தான் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தர முடியும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். நம்பினார். அதிலிருந்து நாங்கள் வேறுபட்டோம். ஆனாலும் நட்பு மாறவில்லை. 

ப.சிதம்பரம் காங்கிரஸ் மூத்த தலைவர்

                                      *********************

பன்முகம் கொண்ட தலைவர்!

“தமிழக அரசியலில் ஒரு முத்திரை பதித்த தலைவராக நம்முடன் வாழ்ந்த தோழர் மைதிலி, அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய அந்த ஒரு வார காலத்தில் தான், கீழ்வெண்மணியின் கோர சம்பவம், மனித நாகரிகத்தையே வெட்கி தலைகுனிய வைக்கக்கூடிய அந்த சம்பவம் நடைபெற்றது. அங்கு நடந்த கொடுமைகளைவெளி உலகுக்கு கொண்டு வந்ததில் மகத்தான பங்காற்றினார்.தமிழகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கே அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று போர்க் குரல் கொடுக்கிற போராளியாக திகழ்கிறார். ஆணாதிக்கம் நிறைந்திருக்கிற இந்த சமூகத்தில் பெண்களை அணிதிரட்ட வேண்டிய அந்த மகத்தான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.சமூக ரீதியாக பெண்களின் உரிமைகளுக்காக, அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்களுக்காக குரல் எழுப்புகிற ஒரு போராளியாக, தொழிற்சங்க தலைவராக, கம்யூனிஸ்டாக, பெண்ணுரிமை குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், பல்வேறு பரிமாணங்களில்பணியாற்றிய ஒரு மகத்தான தலைவர், சிறந்த போராளி, சிந்தனையாளர், சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும் பெண்ணுரிமைக்கு  ஆதரவாகவும் குரல் கொடுத்தவர், சிறந்த எழுத்தாளர்,  பத்திரிகையாளர் என்கிற பல பரிமாணத்தில் பலதளங்களில் பணி யாற்றிய மூத்த தலைவரை நாம் இழந்திருக்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

                                      *********************

”கம்யூனிஸ்டுகளுக்கு சிறந்த ரோல் மாடல்”

வெண்மணி சம்பவம் நடந்த போது, அதன் பின்னணி, அரசியல் பின்புலம், வர்க்க பின்னணி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார் மைதிலி. அடுத்த முறை தஞ்சை கீழ்வெண்மணி செல்வதற்கு முன்பாக தான் தோழர் வி.பி.சிந்தனை சந்திக்கிறார். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியது முதல் திருப்புமுனை என்றால், தோழர் வி.பி.சிந்தனை  சந்தித்தது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டாவது திருப்புமுனை!அதற்குப்பிறகுதான் 1969 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிறார். அது மட்டுமல்ல, கட்சியின் முழுநேர ஊழியராக பொறுப்பேற்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் என்றால் லெனின் கோட்பாடுபடி “முழுநேர புரட்சியாளர்” என்ற பொறுப்பை ஏற்கிறார் தோழர் மைதிலி. தனக்கு கட்சியிடமிருந்து அலவன்ஸ் எதுவும் வேண்டாம் என்று கூறியவர்.

பெண் உரிமைக்காக, பெண் விடுதலைக்கான மகத்தான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தத்துவார்த்த ரீதியில் அந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் தோழர்களும் எப்படி அணுகுவது என்பதற்கான ஒரு பாடக் குறிப்பை தயார் செய்யும் பொறுப்பை தோழர் மைதிலி சிவராமனிடம் கட்சி ஒப்படைத்தது. அவர் தயார் செய்து கொடுத்த பாடக்குறிப்பு கட்சியின் கல்விக்குழுவில் விவாதம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டு மகத்தான ஆவணமாக இருந்து வருகிறது

இன்றைக்கும் அது ஒரு ‘மாஸ்டர் பிளான்’!

கீழ்வெண்மணியின் கோர சம்பவங்கள் நடப்பதற்கு முன்பும் பின்பும் அங்கு நிலவி வந்த அரசியல் மற்றும் வர்க்க பின்னணி நிலவரங்களை முழுமையாக ஆய்வு செய்தார். இதற்காக கீழ்வெண்மணி கிராமத்தில் தலித் மக்கள் மட்டுமல்ல; பிற பகுதி மக்களையும், விவசாயத் தொழிலாளர்களையும், நிலச்சுவான்தார்களையும் கூட, நேரில் சந்தித்து உரையாடினார். அதன் பிறகுதான் அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். கீழ்வெண்மணியில் நடந்தது வெறும் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல. அது சாதி கொடுமை, சாதி ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ சுரண்டல் இவை இரண்டுக்கும் எதிரான போராட்டம் என்பதை சித்தாந்த ரீதியில் கொள்கை ரீதியில் ஆய்வு செய்து ‘ரேடிக்கல் ரிவ்யூ’ இதழில் விரிவாகவும் விளக்கமாகவும் கட்டுரையை எழுதுகிறார். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஆய்வு செய்வது மட்டுமல்ல மார்க்சிய பாதையில் பார்ப்பதும் விவாதம் செய்வதும் தோழர் மைதிலிக்கு நிகர் மைதிலியே!

தோழர் மைதிலி சிவராமன் சிறந்த அறிவுஜீவியாகவும் போராட்ட போராளியாகவும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரு ஒரு சிறந்த முன்மாதிரியாக - ரோல் மாடலாக வாழ்ந்திருக்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

                                      *********************

வழிகாட்டியாக திகழ்ந்தவர்

“தோழர் மைதிலியின் வாழ்க்கைப் பயணம் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வருக்கும் முன்னுதாரணமாகும். அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வும் போராட்ட குணமும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொண்டு வந்தது மட்டுமல்ல சிறந்த மார்க்சிய வாதியாகவும் வளர்த்தெடுத்தது. இந்த முதலாளித்துவ உலகில் தொழிலாளர் பிரச்சனையாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக இருந்தாலும், பெண் விடுதலை, கருத்துச் சுதந்திரம் என்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நுட்பமாக ஆராய்ந்து சோசலிசப் பாதையில் கட்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.சமூகத்தில் பெண்களுக்கான பிரச்சனையாக இருந்தாலும் வர்க்க ரீதியான போராட்டமாக இருந்தாலும் சாதியக் கொடுமையானாலும் மூலைமுடுக்கெல்லாம் சென்று நேரடியாக கள ஆய்வு நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததில் தோழர் மைதிலி சிவராமனின் பங்கு அளப்பரியது. அவரோடு நானும் ஏராளமான போராட்டங்களில் பங்கெடுத்தது மட்டுமன்றி பெண் உரிமைகளுக்கான ஆவணங்கள் தயாரிப்பதில் களப்பணியில் நின்றது இன்றும் பெருமையாக கருதுகிறேன்.

பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

                                      *********************

சிறந்த பத்திரிகையாளர்

சமூக மாற்றம், முன்னேற்றத்திற்காக உயர்ந்த நேர்மையோடு, அர்ப்பணிப்போடு கடுமையாக உழைப்பார். ஊசலாட்டமின்றி உறுதியாக முடிவெடுப்பார். உட்கட்சி ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மைதிலி, உயர்ந்த கட்சி ஒழுக்கத்தையும் கடைபிடித்தார். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலம் இதழ்களில் மட்டுமின்றி தமிழ் இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதிய  சிறந்த பத்திரிகையாளர் மைதிலி” 

என்.ராம், மூத்த பத்திரிகையாளர்

                                      *********************

அரசியல் வானில் செந்தாரகை

பெண் விடுதலை குறித்து கல்வி நிலையங்களில் கொண்டு செல்ல மைதிலி உத்வேகம் அளித்தார். விவசாய கூலிப் பெண்களின் விடுதலையில்தான் நடுத்தர பெண்களின் விடுதலையும் உள்ளது என உணரவைத்தவர். காவி கார்ப்பரேட் பாசிச ஆட்சியில் ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்படு கின்றன. இத்தகைய சூழலில் மைதிலியின் தனித்துவத்தை கைக்கொள்ள வேண்டும். இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை - ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும். பிரம்மாண்டமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களை முன்னிறுத்தி பரந்துபட்ட இயக்கத்தை நடத்த வேண்டும். நீலவானில் செந்தாரகையாக அவர் உள்ளார். மைதிலிக்கு மரணமில்லை.

வே.வசந்திதேவி கல்வியாளர்

                                      *********************

அடித்தளம் அமைப்போம்

“பெண்கள் அரசியலுக்கு வருவதே கடினம். அதிலும் கொள்கைகோட்பாட்டோடு உள்ள  முற்போக்கு இயக்கத்தில் வருவது அரிதிலும் அரிது. அவ்வாறு வந்து, இயக்கத்திற்கு வழிகாட்டுதலை தரக்கூடிய தலைவராக தன்னை வளர்த்துக் கொண்டார். பெண்கள் எந்தளவிற்கு அரசியலில் ஈடுபடுகிறார்களோ, அந்தளவிற்கு அரசியல் நேர்மையானதாக இருக்கும். அரசியலில் தன்னியல்பாகவே ஆணாதிக்கப் போக்கு நிலவுகிறது. பெண்கள் வரத் தயங்குவதும் ஒரு காரணம். பெண்கள் அரசியலுக்கு வரத்தயங்குவதை உடைக்க வேண்டும்.  அதற்கான களத்தை கட்டமைக்கவேண்டும்.ஆண்களின் இரக்கத்திற்கு உட்பட்டு பெண்கள் பதவி பெறுகிறவர்களாக இருக்கக்கூடாது. இவ்வாறு இருப்பதற்கு பெண்களின் பங்கேற்பு  குறைவாக இருப்பதுதான் காரணம். இதில் மாற்றம் காண்பதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். அதுவே நாம் தோழர் மைதிலிக்கு செலுத்தும் அஞ்சலி. பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தை அல்லது கணவரின் பெயரை இணைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதிலும் மாற்றம் வர வேண்டும்”.

தொல்.திருமாவளவன் எம்.பி.,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்

தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு, செ.கவாஸ்கர், வி.சாமிநாதன்

 

;