articles

img

தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது....

அரசு தங்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.2 முதல் தமிழ்நாடு முழுவதும், ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டம் நடத்தி கைது ஆகி வருகின்றனர். ஆங்காங்கு காத்திருப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். போராட்டம் துவங்குவதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாகவும் அறிவித்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தமிழகம் முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டும் ஓய்வு பெற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஏதும் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். சிவகங்கை, விருதுநகர், தர்மபுரி போன்ற மாவட்ட நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இரண்டு ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த தமிழ்நாடு அரசு மறியல் போராட்டம் துவங்கவுள்ளதைத் தொடர்ந்து வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. எப்படி இருப்பினும் இது வரவேற்கத் தக்க நடவடிக்கையே. ஆனால் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை - ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேச முதல்வர் தயாராக இல்லை. 

ஜெயலலிதா 2003 இல் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டங்களும், அதன் விளைவுகள் குறித்தும் அவரின் வாரிசுகள் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இருப்பினும் நினைவூட்ட வேண்டியது நமது கடமையாக உள்ளது.

முதல்வர் விட்ட தூது 
2003 இல் இரண்டு லட்சத்திற்கும் மேலானஅரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த ஜெயலலிதா,சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், தனது ஆட்சிக்காலத்திலேயே அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தினார். சிறையில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மாதக் கணக்கில் இருந்த காலத்தைபணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிட்டார். வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கினார். தேர்தலுக்கு முன்னதாக தன்னை அழைத்து, தனது செலவில், மாநாடு நடத்த வேண்டும் என்று அரசு ஊழியர் தலைவர்களுக்கு தூது விட்டார். அரசு ஊழியர் தலைவர்கள் அதை புறக்கணித்தனர். வந்தேறிகளை கொண்டு ஒரு மாநாட்டை கோயம்பேட்டில் அவர் நடத்தினார். அது தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் அரசு ஊழியர் சங்கம் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து மதுரையில் ஒரு மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டின்மையக்குரல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான குரலாக அமையவில்லை. மாறாக அரசுஊழியர்களை - ஆசிரியர்களை தமிழ்நாட்டு மக்களை துன்புறுத்தி வந்த அரசினை அகற்றுவதற்கான உறுதியை வெளிப்படுத்தியது. அரசு ஊழியர் தலைவர்கள் களத்தில் இறங்கினர். விளைவு ஆளுங்கட்சியான அதிமுக, ஜெயலலிதா தலைமையிலான அரசு படுதோல்வியை சந்தித்தது. இது வரலாறு.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைந்தஅதிமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட அரசுஊழியர் ஆசிரியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு பெற முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும், பணி ஓய்வு பெற்றும் பலன்கள் கிடைக்கப் பெறாமலும், தமிழக அரசு போட்ட பொய் வழக்குகளில் சிக்கி காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களின் வாசல்களிலும் தவம் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெற அரசு தயக்கம் காட்டி வந்தது.மத்திய அரசின் ஊதுகுழலாக  செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் முடிவின்படி, தமிழ்நாடு அரசுஊழியர் ஆசிரியர்களுக்கு மூன்றுதவணை அகவிலைப்படியை முடக்கி  வைத்துள்ளது. சுமார் 6000 கோடி ரூபாய் இதனால் ஊழியர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்கள் இறந்துபோனால் அவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தஎடப்பாடி அரசு தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. இதனால் சுகாதாரத்துறை, காவல் துறையில் பணியாற்றி பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், காவலர்கள் இந்த அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பேச நேரம் கிடைக்கவில்லை? 
இந்நிலையில் அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்துஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் பயனில்லை. தானடித்த மூப்பாக இன்று ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர்களை அழைத்துப்பேசத் தயராக இல்லை.  அரசுப் பணியில் மாவட்டம்தோறும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வருக்கு சங்க நிர்வாகிகளுடன் பேச நேரம் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதும் ஜெயலலிதா,  கலைஞர் ஆகியோர் முதல்வராக இருந்தபோதும்,  அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன. கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த நான்கு வருடங்களில் முதல்வர் சங்கத் தலைவர்களை சந்தித்துப் பேச முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது. 

 போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களின் தலைவர்களை அழைத்து 1978ல் முதலமைச்சர்  எம்ஜி.ஆர் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.அப்பனை பார்த்து எம்.ஜி.ஆர். என்.ஜி.ஓ. யூனியனை உடைத்து புது சங்கத்தை உருவாக்கினால் தனது அரசு அச்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிப்பதாக தெரிவித்தார். அதற்கு அவர் உடன்படவில்லை என்பதும் போராட்டக் களத்தில் ஒற்றுமையை உயர்த்திப்பிடித்தார் என்பதும் வரலாறு. மத்திய அரசு ஊழியர்களுக்கிணையான ஊதியம் கேட்டு 1988 ல் அரசு ஊழியர்கள் போராட்டம்நடைபெறும்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில் ஆளுநர்அலெக்சாண்டர் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டார்.

தானே விலக்கிக்கொண்டார்
1988 போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசிற்கிணையான ஊதியத்தை வழங்கிய அரசு அமைச்சுப்பணியாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கவில்லை என்பதற்காக 1992 ல் அரசு ஊழியர் சங்கம்மற்றும் அரசு அலுவலர் ஒன்றியம் ஆகிய சங்கங்கள்ஒன்றிணைந்து போராடியபோது முதலமைச்சர் ஜெயலலிதா போராட்டக்குழுவினரை அழைத்துப் பேசி சில பிரிவினருக்கு 5 சதவீத மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்கினார் என்பது வரலாறு. 2002 ல் நடைபெற்ற அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டக்குழுவினரை முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நேரமே பணியில் சேர்ந்ததாக கருதப்படும் என்றும் அறிவித்தார். அப்பேச்சுவார்த்தைகளில் அவர் அறிவித்தபடி அரசு ஊழியர் - ஆசிரியர்களின் உரிமைகளை மீள தராதகாரணத்தினால் உருவானதே 2003 வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சங்கத்தின் தலைவர்கள் செல்வதாக முடிவு செய்தபின் அவர்களை பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்ததும் போராட்டக்குழுவினர் அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை நிலைநிறுத்தியதும் வரலாறு. தனது அடக்குமுறை நடவடிக்கைகளை தானே விலக்கிக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரின் வாரிசுகள் இவையாவையும் அறியாதவர்கள் இல்லை.கருணாநிதி முதல்வராக இருந்த போதும் போராட்டங்கள் நடந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. துறைவாரியான போராட்டங்கள் நடைபெறும்போதும் முதலமைச்சர் கருணாநிதி அவர்களை அழைத்துப்பேசி முடித்துவைத்த வரலாறும் உண்டு. 

ஏற்புடையதல்ல

இன்று ஆட்சியில் இருக்கும் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இவை யாவற்றையும் முழுமையாக அறிந்துள்ளவர். ஆனால்  கடந்த நான்கு ஆண்டுகாலமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது மட்டுமல்ல, அவர்களை வாட்டி வதைத்து அலட்சியப்படுத்தி வரும் நிலையை  அவர் மேற்கொண்டுள்ளது ஏற்புடையதல்ல.மக்களை ஆட்சியாளர்கள் சந்திக்கும் தருணம்(தேர்தல்) வரும்போதெல்லாம் தங்களின் தவறுகளுக்கு பரிகாரம் காண முயல்வது வழக்கம். ஆனால் இன்று ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் தவறுகளையே சாதனையாக நினைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.  அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை அழைத்துப்பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை.அசைய மறுக்கும் அரசை அசைத்து பார்த்த அனுபவங்கள் பல கொண்ட அரசு ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டம் எடப்பாடி அரசிற்கு சரியான பாடத்தை புகட்டும்.

கட்டுரையாளர் : ஈரோடு க.ராஜ்குமார், முன்னாள் மாநிலத்தலைவர் அரசு ஊழியர் சங்கம்
 

;