articles

img

பப்ஜி மதன்கள் விதைக்கும் வக்கிரம்....

இந்த பப்ஜி மதன் வீடியோக்கள் ஆபாசமானவை என செய்திகள் வந்ததைப்பார்த்தேன். இதில்அவர் கிடைக்காததால் அவரின் மனைவி மற்றும்குழந்தையை கைது செய்துள்ள செய்தியைப்பார்த்தவுடன் காவல் துறை மீது கோபமே வந்தது. மதனை கைது செய்வதற்கு அவரின் மனைவியை தூண்டுகோலாக கைது செய்துள்ளார்கள் என நினைத்தேன். சரி.. அப்படி என்னதான் மதன் வீடியோவில் இருக்கிறது என யூ ட்யூப்பில் சென்று பார்த்தேன். அதில் என்ன இருக்கிறது!

சிறுவர்களை கவரும் வீடியோ கேம் ஆக கார் ரேஸ், தீவிரவாதிகளை கைது செய்ய துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு செல்லும் வீரன் என ஆக்ரோசமான விளையாட்டு... இது மட்டும் இருந்தால் கூட பிரச்சனை ஆகியிருக்காது.. அதில் மதனும், சில வீடியோக்களில் அவரதுமனைவியும் மிக ஆபாசமாக , பெற்ற தாயினை கெட்டவார்த்தைகளால் .... ஆபாசமாக பேசும் வீடியோக்கள்.. சில இந்த மதன் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது சக மாணவிகளிடம் எப்படி பாலியல் அத்துமீறல் செய்தது பற்றிய உரையாடல், பின் உயர் நிலை பள்ளியில், கல்லூரிகளில் படிக்கும் போது சக மாணவிகளை பாலியல் ரீதியாகஎப்படி வசப்படுத்தினான் என பலரும் உரையாடுதல் மூலம்இந்த கேமினை கொண்டு செல்கிறார்.இதற்கு இவர் மனைவியும் உடந்தையாக, அவருடன் சேர்ந்து அவரும் கெட்டவார்த்தையை பேசி உசுப்பேற்றிவிடுகிறார். 

இந்த வீடியோக்களில் பின் ஊட்டமாக இதனை பார்த்த பலரும், இந்த ஆபாச வார்த்தைகளை பாராட்டி எழுதியுள்ளதைப்பார்க்கும் போது இளைஞர்கள் சமுதாயத்தை ஒரு வக்கிரமான மன நிலைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான சிறுவர்களை, இளைஞர்களை தங்கள் அம்மாவை கெட்டவார்த்தைகளால் திட்டுவதை சாதாரணமாக வாடா, போடாஎன பேசுவது போல பெற்ற தாயினை ஆபாசவார்த்தைகளால் பேசுவதற்கு தூண்டிவிட்டுள்ளார்.கண்டிப்பாக இதனை தொடர்ந்து காணும் சிறுவர்கள், பள்ளி, கல்லூரி, வீடுகளில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாகப்பார்த்து, பாலியல் குற்றங்களை இழைக்க தூண்டும் என்பது இந்த பப்ஜி மதனின் வீடியோவைப்பார்த்த எனக்கு ஏற்பட்ட கருத்தாகும். கந்த சஷ்டி கவசத்தில் வரும் ஒரு சில வார்த்தைகளுக்கு ஆபாச விளக்கம் கொடுத்ததாக கருப்பர் கூட்டத்தினரை கைது செய்து, அவர்களின் வீடியோக்களையும் யூட்யூப்பில் இருந்து நீக்கிய தமிழக காவல்துறை, மதனைமட்டுமில்லாமல் அவருடன் வீடியோக்களில் உடன் ஆபாசமாக பேசி உரையாடிய அவரின் நண்பர்களையும் கைது செய்து, அவரின் அனைத்து பப்ஜி வீடியோக்களையும் யூ ட்யூப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு புறம் நடந்தாலும், பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளிடம் இருந்து ஆக்ரோசமான செயல்பாடுகள், சர்வசாதா ரணமாக எந்த விதமான கூச்சமும் இல்லாமல், அர்த்தமும் தெரியாமலேயே,ஆபாசமான கெட்டவார்த்தைகளை கூறினால் குழந்தை மதனின் பப்ஜி வீடியோ கேம்களை தொடர்ந்து பார்த்து வருகிறது என நம்பலாம். இதிலிருந்து நம் குழந்தைகள் என்ன வீடியோ பார்க்கிறார்கள், எத்தனை மணி நேரம் பார்க்கிறார்கள் என்பதைமட்டுமல்ல, அவர்கள் இந்த வீடியோக்களை பார்ப்பதையும் நாம் தடுக்கமுடியும். அதற்கு கூகுள் பேமிலி லிங்க் (GOOGLE FAMILY LING)  என்ற செயலியை  உங்கள் போனில் டவுன்லோடு செய்து நிறுவிக்கொண்டு, அதன்படி செயல்பட்டால் நம் குழந்தைகளின் அதிகப்படியான இணையவழி வீடியோ காணல்களை கட்டுப்படுத்த முடியும்.

கட்டுரையாளர் : ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர்

;