articles

img

தாயின் கருவறையாய்....

நாங்கள் 1977 - 78ல் பழனிஅருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் அடியெடுத்து வைத்தபோது கல்வியைக் காட்டிலும்இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ)தான் எங்களை வெகுவாக ஆகர்சித் தது. உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தினோம். மாணவர் நலன் சார்ந்த இயக்கங்களை முன்னெடுத்தோம். தோழர்கள் செல்வகுமார், கவிஞர் ராஜன், ராஜேந்திரன், வேலாயுதம், ரத்தினம், நாகேந்திரன், அன்பழகன், கண்ணன், ஜீவானந்தம், ரமேஷ், ரவி, சுப்பிரமணி என எண்ணற்ற தோழர்களுடன் மாணவர்சங்கத்தை கட்டுவதில் முனைப்பு காட்டினோம். மாணவர் சங்கத்தின் அதிவேக வளர்ச்சியில் மற்ற அரசியல் சார்ந்தமாணவர் சங்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. கல்லூரிவாசலில் கொடி மட்டும் பறந்த காலம்அது.

இடையில் கர்நாடக முதலமைச்சர்குண்டுராவ் ஏற்றி வைத்த காங்கிரஸ் கொடியைக் கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை, இரவோடு இரவாக அகற்றி விட்டனர். எஸ்எப்ஐ சார்பில் “ஜனனம்” என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தி வந்தோம்.எஸ்எப்ஐ எங் களை பரந்த அளவில் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. ஆக்கப்பூர்வமாக செயல்பட வைத்தது. மனதளவிலும் கனவுகிலும் நாங்கள் சேகுவேரா, காஸ்ட்ரோவாக மாற முயன்றோம். எங்களின் இளமைக் காலத்திலேயே இந்தியமண்ணில் புரட்சியை கொண்டு வரஆசைப்பட்டோம். எஸ்எப்ஐ -ன் மாநிலமாநாட்டை பழனியில் நடத்திக் காட்டினோம். எங்களுக்கு வழிகாட்டியாக மாநிலத் தலைவர் இராமலிங்கமும்,தோழர்.பி.மோகனும் திகழ்ந்தனர்.

1978 - 79 மதுரையில் எஸ்எப்ஐ மாநிலசிறப்பு மாநாடு நடைபெற்றது. தோழர்சங்கரய்யா சங்கநாதமாக முழங்கினார். எங்களுக்கு புது உற்சாகமும் உத்வேகமும் ஏற்பட்டது. அப்போது தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் கட்சியின் மாநிலக் குழு செயலாளராக இருந்தார். மாநாட்டுமண்டபத்துக்கு வெளியே வைத்து அவரை முதன்முதலாக பார்த்தோம்.1980 - 81, கல்லூரி மாணவர் சங்கத்தேர்தலில் எஸ்எப்ஐ  என்னை தலைவராகவும் செபாஸ்டின், ரத்தினம் ஆகியோரை செயலாளர் மற்றும் இணைச் செயலாளராகவும் போட்டியிடச் செய்தது. அதுகாலம் வரை கல்லூரியில் தேங்கி இருந்த சாதிய கட்டமைப்பையும் ஆளும்கட்சி அரசியலையும் உடைத்து நாங்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கல்லூரி மாணவர் சங்கத்தைக் கைப்பற்றினோம். நாங்கள் பொறுப்பில் இருந்த காலத்தில்கல்லூரியை 90சதவீதம் பொறுப்பாக நடத்தினோம். கல்லூரியிலோ விடுதியிலோ எந்த ஒரு கலவரமும் வராமல்ஒற்றுமையுடன் செயல்பட்டோம். திறந்தவெளி நூலகத்தை நடத்தினோம்.

மாதம்இருமுறை கல்லூரி அரங்கத்தில் கலைஇலக்கிய விழாக்களையும் தோழர் பி.ராமமூர்த்தி, குன்றக்குடி அடிகளார் உரையாற்றியது உட்பட அரசியல் பொருளாதார கூட்டங்களை, கருத்தரங்குகளையும் நடத்தினோம். வரலாற்றுசிறப்புமிக்க மூட்டாவின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தோம். தோழர் மைதிலி சிவராமன் கல்லூரிஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தை திறந்து வைத்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.இக்காலத்தில் தான் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி எஸ்எப்ஐதலைவர்களான சோமசுந்தரம், செம்புலிங்கம் ஆகியோர் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. ஆவேசமுற்ற நாங்கள் கல்லூரியை புறக்கணித்து வீதியில் இறங்கி போராடியதும் ஞாபகத்திற்கு வருகிறது. நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எஸ்எப்ஐ  எங்களை கருவில் சுமந்த தாயாய் இன்றளவும் தாங்கிப் பிடித்துள்ளது. அன்று ஏதுமறியாத மாணவர் களாக இருந்த எங்களை நல்ல குடிமகன்களாகவும் இடதுசாரி இயக்கத் தலைவர்களாகவும் உருவாக்கி உள்ளது. இந்த பொன்விழா பொழுதில் இந்திய மாணவர் சங்கம் மாணவர்களுக்கு விதையாய், வேராய், விழுதாய் வளர்ந்த பெரும் ஆலமரமாய் நிலைத்து நிற்கிறது என பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.

வ.இராஜமாணிக்கம், பழநி

;