articles

img

மேகதாதுவா? இயற்கை மேகத்துக்குத் தடையா?

மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடை எண்ணற்ற ஆறுகள். அவை கிழக்கும் மேற்குமாகப் பாய்ந்து இந்திய தீபகற்பத்தை வளம் கொழிக்கச் செய்கின்றன. தென்னிந்தியாவின் 4ஆவது பெரிய ஆறு பொன்னி நதி என்றழைக்கப்படும் காவிரியாறு. 805 கி.மீ நீளம் கொண்டகாவிரி, மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மகிரி குன்றில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரியில் தோன்றி 320 கி.மீ கர்நாடகத்திலும், 416 கி.மீதமிழகத்திலும் பாய்ந்து டெல்டா மாவட்டங்களின் வழியாக பூம்புகாரில் கடலில் சேர்கிறது. காவிரியின் நீரால் பயன்பெறும் மாநிலங்கள் கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முதலியனவாகும்.

காவிரியின் துணை நதிகளாக கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, ஷிம்ஷா, அர்காவதி, கப்பானி மற்றும் சுரமாவதியும், தமிழ்நாட்டில் பவானி, அமராவதிமற்றும் நொய்யலும் அமைந்துள்ளன. காவிரி தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கும், 8 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. காவிரியால் கொண்டுவரப்படும் வண்டல்மண் டெல்டா மாவட்டங்களை வளம்மிகுந்ததாக ஆக்கியுள்ளது. இத்தகைய நதிப்படுகை உலகின் வேறு எங்கும் இல்லை. காவிரியில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிகப் பெரிய அணைக்கட்டான மேட்டூர் அணை, டெல்டா மாவட்டங்களின் நலனிற்காக கட்டப்பட்டது. ஆழமான குறுகிய ஆறாக தலைக்காவிரியில் தோன்றும் காவிரி துணை நதிகளின் சேர்க்கையால் பெரிதாகி, அகண்ட காவிரியாக டெல்டா மாவட்டங்களில் பாய்கிறது. காவிரியின் குறுக்கே கல்லணையில் 2ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட நீர் பகிர்மான அணை, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை பிரித்து வழங்கும் இடமாக உள்ளது. 19ஆம்நூற்றாண்டில் இரண்டு முறை டெல்டாவின் சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதற்காக கல்லணை திருத்தி அமைக்கப்பட்டது. கல்லணையின் கட்டுமானம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மை, நவீன பாசனமுறை, உயர்ந்த கட்டடத் தொழில்நுட்பம் என பண்டைத்தமிழர்களின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.  

காவிரிப் பிரச்சனையின் தோற்றம்
1932ல் மைசூர் மற்றும் மதராஸ் தனித் தனி மாகாணங்களாக இருந்தபோதே கிருஷ்ணராஜசாகர் அணை கட்டப்பட்டது. அப்போதே அந்த அணைகுறித்து இரண்டு மாகாணங்களுக்கு இடையே முரண்பாடு தோன்றியது. காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை சேகரிப்பதற்காக தமிழகத்தின் மிகப்பெரிய அணைக்கட்டான மேட்டூர் 1934 ஆம் ஆண்டுகட்டப்பட்டது. இது கிருஷ்ணராஜசாகரைவிட இரண்டுமடங்கு கூடுதல் கொள்ளளவைக் கொண்டது.காவிரி நீரை பகிர்ந்துகொள்வது குறித்து 1924ஆம்ஆண்டு இரு மாகாணங்களுக்கிடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் 1974ல் திடீரென காலாவதியானது. 1900ஆவது ஆண்டுகளில் காவிரியில் 900 டி.எம்.சிதண்ணீருக்குமேல் தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்தது. 1970-1986 காலகட்டத்தில் காவிரி நீர் பங்கீடுபேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த சூழலில் தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமலும், 1924ல் செய்துகொண்ட காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்திற்கு மாறாகவும், ஒன்றிய அரசின் திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு எதுவுமின்றி 1970ல் ஹேரங்கி, 1974ல் கபினி, 1979ல் ஹேமாவதி பின்னர் யாகாச்சி மற்றும் சுவர்ணவதி ஆகியஆறுகளின் குறுக்கே 5 அணைக்கட்டுகளை அதிவேகமாகக் கட்டி தமிழகத்தின் காவிரி நீரில் 70 டி.எம்.சியைகர்நாடகா நியாயத்திற்குப் புறம்பாகத் தேக்கியது. அதனால் காவிரியில் டெல்டாவுக்கு வரவேண்டிய நீரின்அளவு குறைந்தது. 

இப்படி காவிரியில் நீர் திறப்பது குறைந்ததால் தமிழ்நாடு அரசு 1971ல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு காவிரியின் துணை நதிகளில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அந்தப் பகுதியின் நீர்ப் பாசனத்திற்காகவும், 1956ல் ஈரோடு மாவட்டம்பவானிசாகரிலும், 1957ல் திருப்பூர் மாவட்டம் அமராவதியிலும் ஒன்றிய அரசின் முறையான அனுமதியைப் பெற்று இரண்டு அணைகளைக் கட்டியது.1991 ஜனவரியில் இடைக்கால நிவாரணம் கோரிய தமிழக அரசின் மனுவை காவிரி நீர் பிரச்சனைக்கான தீர்ப்பாயம் நிராகரித்தது. ஆனால் அதே ஆண்டில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், 1991 ஜூலையில் 205 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்குமாறு அதே தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த ஆணைக்கு எதிராக கர்நாடகா அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதனை ரத்துசெய்து தீர்ப்பாயத்தின் ஆணையைச் செயல்படுத்திட அறிவுறுத்தியது. மேலும் அந்த ஆணை 1991ஆம் ஆண்டு டிசம்பரில் அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பெரும் கலவரம் மூண்டது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து, 1998 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு காவிரிநீர் பிரச்சனைக்கான தீர்ப்பாயத்தின் ஆணையை நடைமுறைப்படுத்த காவிரி அதிகாரக் (ஒழுங்காற்று) குழுவை நியமித்தது. 

கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரை 10 தவணைகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 2018ல் அதே உச்சநீதிமன்றம் வெறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை மட்டுமேதமிழ் நாட்டுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இப்படிநீதிமன்றமே தமிழகத்தின் நலனுக்கு விரோதமாககாவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்துள்ளது. பெங்களூரிலும், காவிரியின் அருகமை மாவட்டங்களிலும் தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளதால் காவிரியில்திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்து விடுவது மற்றும்ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக பலமுறை கர்நாடகாவில் போராட்டங்களும் கலவரமும் நடந்துள்ளன. 2016ஆம் ஆண்டு கலவரத்தைத் தடுக்க போலீசார் முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். 2018 ஆம் ஆண்டில் பெங்களூரிலும், மற்ற பல மாவட்டங்களிலும் தொடர் கலவரங்கள் நடந்து கொண்டே இருந்தன. இப்படி தமிழகத்திற்கு எதிரான மனநிலை அங்கு தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும்
2018 ஆம் ஆண்டில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கஆணை பிறப்பிக்கப்பட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அணையிலுள்ள நீரின் அளவு, நீர் பகிர்வு,ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை மேற்பார்வையிடவும் காவிரி ஒழுங்காற்றுக் குழு தினசரி நீர் அளவு, நீர்வரத்து மற்றும் தேங்கியுள்ள நீர் முதலியவற்றை கண்காணிக்கவும் பணிக்கப்பட்டது.கர்நாடக அரசானது மேற்கண்ட ஏற்பாடுகளை மதித்து மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைகாவிரியில் திறந்து விட வேண்டும். ஆனால், காவிரியில் வெள்ளம் வரும்போதும், அதிக மழைப் பொழிவின்போதும், அணைகள் முழுவதும் நிரம்பிய பின்புதான் தண்ணீர் திறந்து விடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

நம்பத்தகுந்ததல்ல
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் மேகதாட்டு என்னும் அமைதியான, இயற்கை எழில் சூழ்ந்தஇடத்தில், காவிரியின் குறுக்கே தமிழக எல்லைக்கருகில் ரூ.9000 கோடி செலவில் மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 66 டி.எம்.சிகாவிரி நீரைத் தடுத்து கர்நாடகத்தில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியின் அருகமை மாவட்டங்களுக்கும், பெங்களூருக்கும் குடிநீர் வழங்கவும், 400 மெ.வா. மின்சாரம் தயாரிக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த முழுமையான திட்ட அறிக்கையான டி.பி.ஆர் 2018ல் கர்நாடகஅரசால் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே தமிழ்நாடு இதனைக் கடுமையாக எதிர்த்துவந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட கீழ் பயன்பாட்டு மாநில அரசுகளின் கருத்துக்களையும், ஒப்புதலையும் பெறாமல் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. காவிரியில் வரும் நீரில் ஒரு டி.எம்,சியை தடுத்தால்கூட அதுதமிழகத்தையும் புதுச்சேரியையும் பெரிதும் பாதிக்கும்.தமிழ்நாட்டுக்கு உரிமையான நீரை 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடகம் வழங்கியதாக வரலாறே இல்லை.

இந்தச் சமயத்தில் மேகதாது அணை கட்டியபிறகும், தமிழ்நாட்டுக்கு உரிமையான நீரைத் தருவோம் என்று கர்நாடகம் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை.
2018ல் கீழ் பயன்பாட்டு மாநிலங்களின் உரிமை என்று அறிவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, ஒன்றிய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கூறி மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை 12 அன்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றியதோடு ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். தமிழக முதலமைச்சரும் குடியரசுத் தலைவர் மற்றும்பிரதமரைச் சந்தித்து முறையிட்டுள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர் ஆதாரமாக இருக்கின்றகாவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதே உண்மை.எனவே தான் தமிழ்நாடு அரசும், விவசாயிகளும் மேகதாதுவில் அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கின்றன.

இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் தமிழகத்தின்நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் காவிரி டெல்டாவில் சாகுபடிக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். காவிரி பாய்ந்து வளப்படுத்தும் 8 மாவட்டங்களிலும் அதன் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் காவிரி எங்களின் உரிமை என்றும் தமிழகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், தென்பெண்ணை ஆற்றின் முக்கியகிளை நதியான மார்க்கண்டேய நதியிலும் பெரிய அணை ஒன்றைக் கட்டி நீரைத் தேக்கியுள்ளது கர்நாடகா. இதனால் தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர்உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். தமிழகத்தின் அனுமதியையோ, ஒன்றிய அரசின் அனுமதியையோ பெறாமல் சட்ட விரோதமாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இப்படி தமிழகத்தின் நீராதாரங்களை முழுமையாக கபளீகரம் செய்யும் கர்நாடகஅரசுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இயற்கைக்கே எதிராக கர்நாடகம்
கடலுக்குச் சென்று சேரும் நீரைத் தடுப்பதற்காகத்தான் மேகதாதுவில் அணைகட்டுவதாக கர்நாடகம்கூறுவது நியாயமற்றது. மிகையான வெள்ளத்தால் ஏற்படும் பெரு வெள்ளத்தையும் பயிர் இழப்புக்களையும் கட்டுப்படுத்தவே இந்தத் திட்டம் என்று கூறுவதும்வெறும் வார்த்தைஜாலம்தான்.அறிவியல்பூர்வமாக, கடல்சார் சுற்றுச் சூழலின்நலனை மனதில் கொண்டு பார்த்தால், நன்னீர் கடலில் சென்று சேர்வதால், கடலின் கழிமுகப்பகுதிகளில்தேங்கியுள்ள கழிவுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு கழிமுகங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஆற்று நீர் சேருமிடத்தில் நீரின் உவர்ப்புத் தன்மை நிலைநிறுத்தப்பட்டு, மீன்கள் உள்ளிட்ட உவர்நீர் வாழ் உயிரினங்கள் நன்கு பெருகுகின்றன. மீன்வள பாதுகாப்புக்கு நன்னீர் கடலில் சென்று சேர்வது அவசியமான இயற்கை நிகழ்வாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் எண்ணற்ற நதிகள் அரபிக் கடலில் கலப்பதால் அங்கு மீன் வளமும், உயிரின பல்வகைமையும் வளமாக இருப்பதை நாம் காண்கிறோம். அந்த வகையில் நன்னீர் கடலில் சேர்வதை தடுப்பது என்பது இயற்கைக்கு எதிரான, கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான, ஒட்டுமொத்த கடல் சூழலியலுக்கு எதிரான செயலேயாகும்.எல்லாவற்றிற்கும் மேலாக “நீரியல் சுழற்சி” என்றழைக்கப்படும் கடல் நீர் ஆவியாகி மலை மற்றும் வனப் பிரதேசங்களுக்குச் சென்று மழையாகப் பொழிந்துஆறுகள் வழியாக நீர் கடலுக்கு வரும் இயற்கைச் செயல்பாட்டையே அதாவது வான் மேகத்தையே தடுக்க கர்நாடகா முயல்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

மக்களின் நலனே முக்கியம்
கர்நாடகாவில் சாகுபடிப் பரப்பு பல லட்சம் ஏக்கர்அதிகரித்துள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டாலும், இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதாலும், இறால் பண்ணைப் பெருக்கத்தாலும், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தாலும், ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டங்களாலும்சாகுபடிப் பரப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.உலகின் தலைசிறந்த டெல்டாவாக, வளம் நிறைந்தவண்டல்மண் கொண்ட பகுதியாக, விவசாயத்திற்கு மட்டுமே உகந்த இயற்கை வளம் கொண்ட நிலப்பகுதியாக உள்ள காவிரி டெல்டாவை, தமிழ்நாடு அரசுபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து.

இந்தப் பகுதியில் வேறு எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படாது என உறுதியளித்து விவசாயத்தைக் காக்க முயன்று வருகிறது.இந்த நிலையில், ஒன்றிய அரசு கர்நாடக அரசிடம்மேகதாது அணைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தஅறிக்கையும், டிபிஆர்- (DPR) ஐயும் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்அச்சத்தை ஏற்படுத்தியது. 900 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் வந்த காவிரியில் தற்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்படியும், ஒன்றிய அரசின் பாரபட்சங்களாலும் 177.25 டி.எம்.சி யாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதையும் கபளீகரம் செய்ய திட்டமிட்டு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதோ, அதற்கு உடந்தையாக ஒன்றிய அரசு செயல்படுவதோ நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படும். மேகதாதுவை வேண்டாம் என்றால் காவிரி-குண்டாறு திட்டத்தை எதிர்ப்போம் என்று கர்நாடகா எரிந்த கட்சி, எரியாத கட்சி விளையாட்டு விளையாடுகிறது.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் கீழ் பயன்பாட்டு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு கட்டுமானத்தையும் காவிரியில் ஏற்படுத்த முடியாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய நீர்ப்பாசன அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக கொள்ளைப்புறமாக ஏதேனும் முயற்சிகள் நடக்குமேயானால் அதுஇந்தியாவின் கூட்டாட்சி மற்றும் இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்கும்.எனவே, ஒன்றிய அரசு உலகளவிலும், தேசிய அளவிலும் பல பெரிய நதிகளின் பிரச்சனைகளுக்குக் காணப்பட்ட தீர்வுகளைப் போல, காவிரியாறு சம்பந்தப்பட்ட மாநில மக்களின் நலனை மனதில் கொண்டுசரியான தீர்வைக் கண்டிட வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற திட்டங்களைக் கூறி மக்களை ஏமாற்றி காவிரியைவற்றச் செய்யும் பணியில் இறங்கிடக் கூடாது என்பதேதமிழக மக்களின் விருப்பம்.

கட்டுரையாளர் : பேரா.முனைவர்  வெ.சுகுமாரன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர், மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

;