articles

img

மே தினம் வலியுறுத்தும் தொழிலாளி - விவசாயி ஒற்றுமை....

நிலத்தில் உழன்று சுரண்டப்பட்ட போது, மேல் சட்டையும், சமூக உரிமையும் கோரிக்கைகள். ஆலைகளில் சுரண்டப்படும் போது, கூலி உயர்வு ஒருபுறமும்,வேலை நேர குறைப்பு மறுபுறமும் கோரிக்கைகள். சுரண்டலை கட்டுப்படுத்தும் மிக முக்கிய கோரிக்கை, உழைக்கும் நேரத்தை குறைப்பதாகும். 135 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை நேரம்என்பது கோரிக்கை என்றால், இன்று ஒரு நாளைக்கு  6 மணி நேரம் என்பது கோரிக்கை. வாரம் ஒரு நாள் விடுமுறைஎன்பதை இருநாள் விடுமுறையாக மாற்ற வேண்டும் என்பதும் கோரிக்கை. இவை எல்லாம், உழைப்பு நேரத்தைகுறைப்பது, அதன் மூலமான தனி நபர் லாபத்தை, பரவலாக பகிர்ந்தளிக்கும் சூழலை உருவாக்குவது ஆகும்.  

இந்த கண்ணோட்டத்தில் மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதே இன்றைய தேவை. தோழர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், அடால்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டது ஏதோஒரு குற்றத்திற்கான தண்டனை அல்ல. லாபத்தின் அடிமடியில் கை வைத்த காரணத்தால், முதலாளித்துவ நீதிமன்றம்வழங்கிய தீர்ப்பு என்பதை நினைவில் கொள்வது அவசியம்.சிக்காகோ வீதிகளில் ஓடிய குருதி, கலவரம் காரணமாக அல்ல. மூலதனத்திற்கு கடிவாளம் இட, தொழிலாளி முயற்சிப்பதா? என்ற, மேலாதிக்கம் காரணமாகும். ஆனாலும் முதலாளித்துவ மூலதனத்தின் வளர்ச்சி, வேறு வடிவங்களில் மேலோங்கி வருகிறது. 

இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது. தனி நபர்களான முதலாளிகளுக்கு பெரும் லாபம் தரும் தொழிலாக மாற்றி அமைக்கும் பணியை, மத்திய பாஜக அரசு தீவிரமாக செய்து வருகிறது. 10 ஆண்டுகளில் 52  இந்தியர்கள் மட்டுமே 100 கோடி அமெரிக்க டாலர் (7300 கோடி ரூபாய்) சொத்து மதிப்பை கொண்டிருந்தனர். இன்று 140 இந்தியர்கள் 100 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை கொண்டவர்களாக உயர்ந்துள்ளனர். கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கு அளித்து வரும் சலுகைகளின் விளைவே, இது போன்ற சொத்து குவிப்பிற்கான முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. 

இப்படியான 100 அல்லது 140 பேருக்கான சலுகைகள் ஊடகங்களால், பொது விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் என சொல்லப்படும், தொழிலாளருக்கு அல்லது சிறு, குறு விவசாயிகளுக்கு அளிக்கும் குறைந்த பட்ச உரிமைகளை, சலுகை,இலவசம் என பகடி பேசும் நிலைக்கு, மக்களின் பொதுபுத்திகட்டமைக்கப்படுவது, முதலாளித்துவ அரசு தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தும் மேலும் ஒரு தாக்குதல் ஆகும். தாக்குதலுக்கு உள்ளாகும் அமைப்பு சார்ந்த தொழில்உழைப்பு நேரம் கணக்கிட்டு வேலை செய்யும் ஊழியர்கள் நிரம்பிய துறை அமைப்பு சார்ந்த துறை ஆகும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேலை நேரம் மற்றும் இதர சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் இல்லை, என்பதே யதார்த்தம். முதலாளித்துவம் தனதுலாப விகிதத்தை உயர்த்த, தொடர்ந்து அமைப்பு சார்ந்ததொழில்துறையையும், தொழிலாளர்களையும் பலவீனப்படுத்தி வருகிறது. அமைப்பு சார்ந்த துறைகளில் நிரந்தரப்பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, காண்ட்ராக்ட்தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உலகம் முழுவதும் பற்றிப் பரவும் இந்த தொற்று நோயை,மத்திய பாஜக அரசும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. 

முதலில் அமர்த்து பின் துரத்து என கொள்கை அறிவிப்புசெய்தவர்கள் தற்போது, ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச கூலி என்ற புதிய பகட்டுத் தனத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதில் தொழிலாளிக்கு உடனடி லாபம் இருந்தாலும், நீண்ட கால பலன் வெட்டப்படுவது மறைக்கப்படுகிறது. ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடைபோன்றவை ஒழிக்கப்படுகிறது. இதை வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் அரங்கேற்றுகிறது.  நீம் (NEEM), பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட் என்று வேறுபெயர்களில் அமலாக்குவது, பெரும் கொடுமை. 

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கம், மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த உரிமைப்பறிப்பிற்கு இலக்காக மாறுவோர், விவசாயக் குடும்பங்களில் இருந்து ஆலை வேலைவாய்ப்பை பெறும் புதியதலைமுறை இளைஞர்கள் ஆவர். ஏற்கனவே அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓரளவு சமூக பாதுகாப்பை அனுபவித்த குடும்பங்களின் வாரிசுகள் சற்று முன்னேறிய நிலையில், முதல் தலைமுறை ஆலை தொழிலாளர்கள், தங்களின் வாழ்க்கை தேவைக்காக, எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கப்படுகின்றனர். 

சட்டத் திருத்தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்தும்
ஏற்கனவே மூலதன வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப வளர்ச்சி, காண்ட்ராக்ட் போன்ற நடைமுறை மூலம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு வேலை நேரத்தை12 மணி நேரமாக உயர்த்த எடுத்திருக்கும் நடவடிக்கை, மேலும் சுரண்டலை அதிகரிக்கவே செய்யும். கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதத்தில், மத்திய பாஜக ஆட்சி, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சட்டத்தை திருத்தியது. அதில் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என்பதையும், மிகைப்பணி மூலம் செய்யும் வேலை நேரத்தை வாரத்திற்கு 54 என இருந்ததையும் திருத்தி, முறையே 48 மற்றும்72 மணி நேரமாக உயர்த்தி உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். தொழிலாளி தனக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்பதை, திணிக்கிறது. இது முதலாளிகள் மீது அரசின் கட்டுப்பாடு மற்றும் சேமநல நடவடிக்கைகளைஅப்பட்டமாக கைவிடும் போக்கு ஆகும். 

அதேபோல் மற்றும் ஒரு சட்ட திருத்தம் விவசாயிகள் மீதானது. கொள்முதல் சட்ட திருத்தம், ஒப்பந்த சாகுபடி சட்ட திருத்தம் மற்றும் குறைந்த பட்ச ஆதாரவிலை சட்டம்ஆகியவை ஆகும். இது கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சாதகமானது. இது குறித்து பல கோணங்களில் விவாதம் நடந்துள்ளது. புதிய கோணமாக பார்க்க வேண்டியது, மேற்படி மூன்று சட்ட திருத்தங்களும், சிறு, குறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடம் கூடுதல் நேர உழைப்பை வலியுறுத்துகிறது. ஒரு காலத்தில், நேரம் பார்க்காமல் வேலை செய்த விவசாயத் தொழிலாளர்கள் மீண்டும் அதை நோக்கி தள்ளப்படும் அபாயம் நிறைந்ததே சட்டத் திருத்தங்கள். 

150 வது நாளை நோக்கி பயணிக்கும், விவசாயிகளின் தில்லி முற்றுகை போராட்டம் இந்திய வரலாற்றில் புதிய மைல்கல். ஒரு பக்கம் சுரண்டல் தீவிரமாகும் நிலையில், அதை எதிர்க்கும் போராட்டங்களும் தீவிரமாகிறது, என்பதை உணரமுடிகிறது. சுரண்டல் திணிப்புகள் அமைதியாக ஏற்கப்படுவதில்லை. வஞ்சகம் நிறைந்ததாக அரசு மற்றும் முதலாளித்துவ கொள்கைகள் இருந்தாலும், எதிர்க்கும் போராட்டங்களுக்கு குறைவில்லை என்பதை கடந்த ஓராண்டு கால, பொது முடக்க கால போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. 

ஆனாலும் ஒன்றுபட்ட போராட்டம் இன்னும் கூடுதலாக வலுப்பட வேண்டியுள்ளது. வேலை நேர குறைப்பிற்கான கோரிக்கை தீவிரம் பெற வேண்டியுள்ளது. சிஐடியு  அகிலஇந்திய மாநாடு சென்னையில், ஜனவரி 23-27 தேதிகளில் நடத்திய போது, வாரம் 35 மணிநேரம் மற்றும் நாளைக்கு 7 மணிநேரம் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியது. இதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்தது. வேலையில் இருப்போருக்கான ஆரோக்கியம் சார்ந்ததாக மேற்படி கோரிக்கை இருந்தாலும், மற்றொருபுறம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் செயலாக இது அமையும். 

வேலை நேர குறைப்புக்கான கோரிக்கை சோம்பி இருத்தலை வலியுறுத்துவதல்ல. மாறாக வேலை வாய்ப்பைபெருக்குவதற்கானது. மூலதன வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை சமூகம் முழுமையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதாகும். எனவே மே தின தியாகிகளின் வரலாறும் போராட்டமும் தொடர் பயணமாக வேண்டிய அவசியம் கொண்டதாகும். அந்த பயணத்தின் இலக்கை தொழிலாளி- விவசாயி ஒற்றுமை கொண்ட வலுவான போராட்டம் மூலமே அடைய முடியும். மே தின தியாகிகள் புகழ் ஓங்கட்டும். 

கட்டுரையாளர்: எஸ்.கண்ணன் செயலாளர், சிஐடியு

;