articles

img

பெண்களின் போர்க்குரல் தோழர் மைதிலி...

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் குரலாக, பெண்களின் குரலாக, பெண் விடுதலையின் ஒரு முக்கிய குரலாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களில், இன்னும் அதிகமாக ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் பெண்களின் குரலாக, அவர்களது போராட்டங்களை முன்னெடுத்து தன் வாழ்நாளெல்லாம் அதற்காக போராடிய ஒரு மகத்தான தலைவர் தான் தோழர் மைதிலி சிவராமன்.

அவரது போராட்டங்களில் மிக முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், தருமபுரியில் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு, ஆட்சியாளர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு, அநீதிகளுக்கு, வன்முறைகளுக்கு, பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்களுக்கு, அங்கு வாழ்ந்த குழந்தைகளுக்கு, மக்களுக்கு ஒரு நியாயம் கிடைப்பதற்காக தோழர் மைதிலி சிவராமன் நடத்திய போராட்டம் இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமானது.
அந்த போராட்டத்தின் வெற்றி என்பது சாமானிய மக்களும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி அதைப் பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கையை தைரியத்தை, ஒரு வலிமையை பெறக்கூடிய போராட்டமாக முன்னெடுத்துச் சென்றார்.
இத்தகைய போராட்டங்களுக்கு  நியாயம் கிடைக்க இந்த அளவிற்கு இதற்கு முன்பும் நாம் காணாத அளவுக்கு காவல்துறை அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு நியாயம் கிடைத்த ஒரு வரலாற்றை தோழர் மைதிலி சிவராமன் உருவாக்கினார் என்றால் நிச்சயமாக அது மிகையல்ல!

ஒரு பழமைவாத குடும்பத்தில் பிறந்து,  தனது வாழ்நாள் முழுவதும் தாயாருடைய போராட்டத்தில் தொடங்கி அதைத்தொடர்ந்து போராட்டமே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டவர் அருமை தோழர் மைதிலி.பழமைவாத குடும்பத்தில் பிறந்தாலும் அதில் சிக்கிக் கொள்ளாமல் அதிலிருந்து அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விடுவித்துக் கொண்டு, கல்வி, எழுத்து என்கின்ற விஷயத்தில் தன்னுடைய ஆயுதங்களாக மாற்றிக்கொண்டு இந்த சமூகத்திற்கு அவர் தொடர்ந்து பணியாற்றினார் என்பது இன்றைக்கு இருக்கக்கூடிய பல இளைஞர்களுக்கு பல போராளிகளுக்கு மிகப்பெரிய பலமாகும்.கட்சி தலைமை தனக்கு கொடுக்கும் பொறுப்பை செவ்வனவே நிறைவேற்றக்கூடியவர் என்பதை, நாட்டில் ஏற்பட்ட அவசரகால நிலை, மிசா போன்ற காலகட்டத்தில் என்.ராம் போன்றவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து நிரூபித்துக் காட்டியவர் தோழர் மைதிலி சிவராமன்.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், அதை வெறும் போராட்டமாக மட்டும் பார்க்காமல் நாம் சந்தித்துக் கொண்டு இருக்கக் கூடிய அரசியல் போராட்டத்திற்கு மத்தியில், தனக்கிருந்த மாற்றுக் கருத்துகளுடன் மற்றவர்கள் கூறும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு அதற்கும் மதிப்பளித்து மிகச் சிறந்த ஆலோசனைகளை எளிமையாக தனது எழுத்துக்களில் பிரதிபலித்த மிகச்சிறந்த தலைவரான தோழர் மைதிலி சிவராமனின் சிந்தனைகளை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பொது தளங்களில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய பெண்களுக்கான இடம் என்பது எந்த அளவுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது, எப்படி எல்லாம் நேருக்கு நேர் சந்திக்க வேண்டி உள்ளது என்பதைப் பார்க்கும் பொழுது, சோசியல் மீடியா என்று அழைக்கப்படுகிற சமூக ஊடகங்கள் வழியாக தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் பார்வை வளர்ச்சி பெற்றிருந்தாலும் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் அதிலும் குறிப்பாக இத்தகைய தளங்களில் பணியாற்றக் கூடிய பெண்கள் சுலபமாக தாக்கப்படக் கூடிய அடிப்படைத் தளமாக சமூக ஊடகங்கள் மாறிக்கொண்டு உள்ளன. இதை மிக முக்கிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வரிந்து கட்டி நிற்கின்றன. இது ஆரோக்கியமற்ற சூழலாகும். இதனால் திராவிட இயக்கங்கள், சோசலிச, கம்யூனிச இயக்கங்கள், தொழிலாளர்கள் உருவாக்கி வைத்திருக்கக் கூடிய கருத்துச் சுதந்திரத்திற்கான இடங்களை சமூக ஊடகங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம்.இத்தகைய தருணத்தில், நாம் அனைவரும் தோழர் மைதிலி சிவராமனுக்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதையாக நான் நினைப்பது, அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வேண்டும்; அவர் மேற்கொண்ட பணியை, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இடத்தை அதாவது, பெண்கள் எந்தக் கருத்தையும் வெளியிடலாம் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.அது மட்டுமல்ல, மாற்றுக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் இடமாக சமூக ஊடகங்கள் இருக்கட்டும், பொது மேடைகளாக அல்லது செய்தி ஊடகங்களாக, பத்திரிகை ஊடகங்களாக இருக்கட்டும் இவைகள் அனைத்தும் பொது தளத்தில் பெண்கள் விவாதிக்கும் இடமாக மாற வேண்டும். அதுதான் ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய ஒன்றாகும்.

தனது வாழ்நாள் முழுவதும் தனது எழுத்துக்களாலும் கருத்துக்களாலும் போராட்டத்தாலும் மைதிலி சிவராமன் இதைத்தான் முன்வைத்தார். தனது வாழ்க்கையை இதை நோக்கிய ஒரு பயணமாகத்தான் அவர் மாற்றினார். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் மீது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரம் சேர்ப்பது தான் தோழர் மைதிலிக்கு நாம் அனைவரும் செலுத்தும் அஞ்சலியாகும்.

(ஜூன் 13 அன்று சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு இணைய வழியில் நடத்திய ‘தோழர் மைதிலி சிவராமனுக்கு நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் இருந்து)

பத்திகள் முழுவதும் கொடுக்கப்பட்ட செய்தி தொகுப்பு...   

 

;