articles

img

மதுரை... ஸ்மார்ட் சிட்டியா? சுமார் சிட்டியா?

அரசு முறை கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களை வாசலில் நின்று வரவேற்பது நடைமுறை. ஆனால் 19.1.2021 காலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்திற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்றது முதலே மாவட்ட ஆட்சியர் துவங்கி மற்ற முக்கியமான அதிகாரிகள் வரை ஒரு விதமான இறுக்கத்துடனே காணப்பட்டனர். வந்திருந்த ஆலோசனைக்குழு நிர்வாகிகளை வரவேற்றுப் பேசியது தவிர வேறு எந்த வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் ஆலோசனைக்குழு தலைவரான மாவட்ட ஆட்சியர். முதல் ஆலோசனைக்குழு கூட்டமே ஒவ்வொரு திட்டத்தையும் குறுக்கும் நெடுக்குமாக ஆராயவேண்டிய நிலையில் கூடியது.

2016 – 2017 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரை மாநகரம் சேர்க்கப்பட்டு இதுநாள்வரையில் அதிகாரிகள் கூறிய தகவல்களின்படி சுமார் 974. 86 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சுமார் 1000 கோடி ரூபாய் என்பது இந்தியாவின் 200 எம்.பி.க்களுக்கு, தங்களது தொகுதி வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் நிதிக்குச் சமமானது. ஒரே மாநகரில் இத்தனை கோடிகளுக்கு பணிகள் மேற்கொண்டதாய் மதுரை மாவட்ட, மாநகர ஆட்சியாளர்கள் கொடுத்திருக்கும் அறிக்கை வெறும் 14 பக்கங்கள் மட்டுமே கொண்டிருந்தது. இந்த திட்டத்தின்படி இதனை செயல்படுத்த முதன்மை செயல் அலுவலர் என்கிற பொறுப்பு உருவாக்கப்பட்டு அவரின் தலைமையில் தான் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ள விதி உள்ளது. ஆனால் மதுரையில் இது வரை அப்படியான ஒரு பணியிடம் உருவாக்கப்படவே இல்லை. மதுரை மட்டும் அல்ல, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகரங்களின் நிலையும் இதேதான். 2016 முதல் இன்று வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களோ, மேயரோ இல்லாத நிலையில் பல ஆயிரம் கோடிகள் புரளும் இந்த திட்டத்தில் முதன்மை செயல் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பது தமிழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம். இது தமிழக அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியை காட்டுகிறது.தமிழகம் முழுக்க இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 10 ஆயிரம் கோடியைத் தாண்டும். இதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பது மக்களின் வரிப்பணம் தமிழகத்தில் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்பதன் உதாரணம் ஆகும். 

மேலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு ஆலோசனையைக் கூட பெறாமல் மாவட்ட, மாநகர நிர்வாகமே தன்னிச்சையாக என்ன பணிகளை செய்யப் போகிறோம் என முடிவெடுத்து அதற்கென நிதிகளைப் பிரித்து ஒப்புதல் வாங்கி பணியைத் துவங்கியது அதனினும் உச்சம்.

மக்களின் பங்கேற்பு புறக்கணிப்பு 
‘ஸ்மார்ட் சிட்டி’ என்பதை பொறுத்தவரை மக்களின் பங்களிப்பு என்பதுதான் மிகமிக அவசியமான ஒன்று. தாங்கள் வாழும் நகரத்தை மக்கள் எப்படி மேம்படுத்த விரும்புகிறார்கள் என்பது தான் இதன் மைய நோக்கம். இதில் எந்த அளவு மக்களின் கருத்தை உள்வாங்கி திட்டத்தின் செயல்பாடுகளை உருவாக்குகிறார்கள் என்பதே அதன் இலக்கை தீர்மானிக்கும். மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளையே பெற விரும்பாத ஆட்சியாளர்கள், மக்களின் ஆலோசனைகளை எப்படி உள்வாங்கி இருப்பார்கள் என்பது கேள்விக்குறி.

இந்த வார புள்ளிவிவரங்களின் படி மதுரையில் கடந்த பல நாட்களாக இருக்கும் காற்றுமாசுபாடின் அளவு சென்னையை விட அதிகம். ஆறு அனல்மின் நிலையங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், மதுரையைவிட 70 சதவீதம் போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட சென்னையை விட மதுரையில் காற்று மாசுபாடு அதிகரித்து இருப்பதற்கு ஒரே காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தெளிவற்ற செயல்பாடுகளே. எந்த ஒரு திட்டமும் திட்டமிட்ட காலத்தில் நிறைவு பெறவில்லை என்பது மக்கள் பாதிக்கப்படுவதற்கான காரணங்களில் அடிப்படையான ஒன்றாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்விக்கு, மொத்தம் 14 பணிகளில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே நிறைவடைந்துள்ளது; மற்ற பணிகள் தேக்க நிலையில் உள்ளதாக பதில் வந்தது. இது இந்தியாவின் மற்ற ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகளின் சராசரியை விட மிகமிகக் குறைவு.இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில், அதை வற்புறுத்திய நடத்திய சு.வெங்கடேசன் எம்.பி., மையமான பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.

பெரியார் பேருந்து நிலையம் 
மதுரை பெரியார் பேருந்து நிலைய திட்டம் மக்களின் ஆலோசனைகளை எப்படி எல்லாம் சிதைத்திருக்கிறது என்பதற்கான உதாரணம். ஒடிசா தலைநகரான புவனேஸ்வர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முகநூல் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரம் பேர். மதுரை பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெறும் 5200 பேர். இதுதான் மதுரை மக்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குமான உறவு. ஸ்மார்ட் சிட்டி குறித்த கருத்துக் கேட்பின் போது மதுரையின் முக்கிய பிரச்சனையாக மக்கள் கூறியிருக்கும் கருத்துகளில் ஏறக்குறைய 50ரூ வாகன நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் தான். அந்த அடிப்படையில் பெரியார் பேருந்து நிலைய திட்டத்தை பார்த்தால் ஏற்கெனவே இருந்ததை விட பல மடங்கு வணிக பயன்பாட்டிற்கான பகுதியும் இருசக்கர, நான்கு சக்கர வாகனம் நிறுத்தப் பகுதியும் ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் பயன்பாட்டு சாலையின் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன் மூலம் பெரியார் பேருந்து பகுதியில் வழக்கத்தை விட நான்கு மடங்கு போக்குவரத்து நெரிசலை உருவாக்கக்கூடிடிய திட்டமாக இது மாறி நிற்கிறது. இது திட்ட நோக்கத்திற்கே நேரெதிரானதாக இருக்கிறது.

மாசி வீதிகள் 
மதுரையின் உயிரோட்டமான மாசி வீதிகளில் நடைபெறக்கூடிய பணிகள் குறித்து தெளிவான முடிவுகளுக்கு வர வேண்டிய உடனடித் தேவை நமக்கு முன் இருக்கும் தலையாய கடமையாக உள்ளது. புனரமைப்பு என்கிற பெயரில் இரண்டு பெரும் வீதிகளை முழுமையாக தோண்டி அப்பகுதி மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி சதுர வடிவிலான நகர அமைப்பில் இரண்டு பகுதியை முடக்குவது போக்குவரத்து சீர்குலைவிற்கான, அன்றாட வாழ்க்கை பாதிப்பை உருவாக்கியுள்ளது. “ நான் என் வாழ்வில் கண்ட மோசமான திட்ட நடைமுறை இதுதான்” என்றார் கூட்டத்தில் பேசிய மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இப்போது பெய்த மழைகளில் எல்லாம் மாசி வீதிகள் படகுவிடும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோக்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அழியாத ஆவணமாக மக்களிடம் உள்ளன.

“ தற்போது மாசி வீதிகளை பயன்படுத்தும் மக்கள் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை கேட்டு நிவர்த்தி செய்வதற்கான எந்த ஏற்பாடும் இங்கே இல்லை. தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி பணிகளை இன்னும் 10 நாட்களில் முடித்து விடுவதாக சொல்கின்றனர். அடுத்து இருக்கக்கூடிய வடக்கு மாசிவீதி, கீழமாசி வீதிகளில் பணிகள் துவங்கப்படும் போது அந்தப் பகுதியின் வணிகர்கள், அமைப்புகளின் கருத்தைக் கேட்காமல் பணிகள் துவங்கப்படக்கூடாது. மேலும் 50 மீட்டருக்கு மேல் எந்தக் குழியும் தோண்டப்படக்கூடாது. 50 மீட்டருக்கான பணியை முடித்துவிட்டு தான் அடுத்த 50 மீட்டருக்கான பணிகளைத் துவங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் பின்பற்றக்கூடிய இந்த நடைமுறைதான் இங்கும் செய்யப்பட வேண்டும். மேலும் இப்பொழுது தோண்டியுள்ள பகுதி பணிகள் நிறைவு பெறாமல் வேறு பணிகளை தொடவே கூடாது என்பது மிகமிக அவசியமானது. தற்போது முடியும் நிலையில் உள்ள வீதிகளில் நான் ஆய்வுக்கு வந்த போது மழைநீர் செல்வதற்கு 50 பைசா அளவினை சிறிய துளை போடப்பட்டால் எப்படி மழைநீர் வெளியேறும் என கேட்டதற்கு 25 மீட்டருக்கு ஒரு துளை போட்டிருக்கிறோம் என சொன்னார் நகர பொறியாளர். அது எப்படி சாத்தியம்? மீண்டும் தண்ணீர் தெப்பம் போல தேங்கினால் அதற்கு பதில் சொல்வீர்களா என சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அது அப்படி மாறாது என்றனர் மாநகராட்சி அதிகாரிகள். அப்போது தலையிட்ட சு.வெங்கடேசன் எம்.பி., “ஆய்வின் போதே இந்த முறை சரிவராது. இதை உடனே மாற்ற வேண்டுமென சொன்னேன். அதை மாற்றுவதில் என்ன பிரச்சனை” எனக் கேட்க, “ இதை ஒரு மாதிரிக்காகத்தான் செய்தோம்” என பல்டி அடித்தார் நகரப் பொறியாளர். 

அதே போல இந்த மாசிவீதி புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களை நடுவதற்கான ஏற்பாடு ஏதாவது இருக்கிறதா என சு.வெங்கடேசன் கேட்டதற்கு, “ ஆமாம், ஏற்கனவே இருந்த 20 மரங்களை தேர் திருப்புவதற்கு இடையூறு இல்லாமல் வைப்போம்” என்றனர் மிகவும் ‘தாராள’ மனதோடு. மதுரை மாநகரின் சுற்றுச்சூழல் உள்ளடக்கம் குறித்த இவர்களின் பார்வை இவ்வளவுதான். கடைசியாக வெட்டும் போது இருந்த 20 மரங்கள் மட்டுமல்ல, சித்திரை திருவிழா தேர் திரும்புவதற்கு ஏற்ற இடைவெளியை ஏற்படுத்தி விட்டு மீதமுள்ள அனைத்து வாய்ப்புள்ள இடங்களையும் கணக்கிட்டால் நமது மாசிவீதிகளில் 150 முதல் 200 மரங்களை நிச்சயம் உருவாக்கி வளர்க்க முடியும்; மரங்களை வளர்ப்பது என்றால் அது ஊன்றப்படும் இடம், பராமரிப்பிற்கான ஏற்பாடு என அனைத்தையும் இந்த குழுவின் ஆலோசனைப்படி நகரப்பொறியாளர் உடனே தயார் செய்ய வேண்டுமென சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.

சித்திரை வீதிகள் 
 மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள் புனரமைப்பு என்பது தான் ஸ்மார்ட்சிட்டியின் முதல் பணியாக அதிகாரிகள் துவக்கியது. வேடிக்கை என்னவென்றால் சித்திரை வீதிகளில் ஏற்கனவே பதிக்கப்பட்டிந்த பேவர்பிளாக் கற்களை அகற்றி விட்டு புதிய ரக பாறைகள் போன்ற கற்களை பெரிய செலவில் பதித்திருக்கிறார்கள். மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த திட்டத்தை தரமதிப்பீடு செய்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரிடம், இந்த கற்கள் பேவர்பிளாக் கற்களை விட எந்த விதத்தில் சிறப்பாக மழைநீரை கடத்தும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் எதுவும் உள்ளதா எனக் கேட்டார். அப்படியெதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இந்த கற்கள் பதிக்கப்பட்டது, மழைநீர் கோவிலைச் சுற்றி தேங்கி நின்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்விக்கு, அப்படியெதுவும் நடக்காது என்ற வெற்று வார்த்தைகளையே பதிலாக தந்தனர் அதிகாரிகள்.

அதே போல நகரத்திற்குள் இருக்கக்கூடிய தொல்லியல் பகுதிகளை இணைக்கக்கூடிய விதத்தில் ஒரு நடைபாதையை அலங்கார மின் விளக்குகளோடு சேர்த்து உருவாக்குகிறோம் எனக் கூறி அதற்கு தனியாக பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகின்றனர். “ மின்விளக்குகளுக்கு என மட்டும் இவ்வளவு ரூபாய் எப்படி செலவு செய்கிறீர்கள், சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு முன்பாக விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்” என சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விடுத்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

அரசு நிறுவனங்களின் பயன்பாடு 
 மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருக்கும் 14 பணிகளில் பெரும்பாலான பணிகளை 20 பொறியாளர்கள் கொண்ட ஒரு குழுவே வேலைகளை பிரித்து பிரித்து செய்து வருகிறது. அந்த பணிகளில் தரமதிப்பீட்டை யார் செய்கிறார்கள் எனக் கேட்டால் ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்தை சொல்கிறார்கள். இதில் இன்டாக் போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை எனக் கேட்டால் அவர்கள் ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கவில்லை என சொல்கிறார்கள். அரசு நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளி கோர வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தான் மொத்த செயல்பாடும் நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல குடிநீர் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் வாப்காஸ் போன்ற அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு அரசு திட்டம் நடைமுறையில் இருக்கும் போது ஏன் அதிகாரிகளால் அரசு நிறுவனத்தின் மூலம் இது போன்ற தரக்கட்டுபாடுகளுக்கு பயன்படுத்தாமல் தனியாரை நம்புகிறீர்கள் -இது மிகவும் தவறான நடைமுறை என சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன் எம்.பி., மத்திய- மாநில அரசின் நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஸ்மார்ட்சிட்டி குழுவில் பேசி அடுத்த கூட்டத்திற்குள் எழுத்துப் பூர்வமான அறிக்கை தர வேண்டும் என வலியுறுத்தினார்.
 அதே போல வைகைக் கரையில் அமைக்கப்படும் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சொல்லக்கூடிய தகவல்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் சொல்லக்கூடிய தகவல்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே அந்த பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தினை உடனடியாக நடத்தி அதை அடுத்த கூட்டத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிப்பது என்ற முடிவையும் வலியுறுத்தினார்.

சேமிப்பு பணம் எங்கே?
பொதுவாக ஒரு திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியிலிருந்து திட்டம் முடிவுற்ற பிறகு வரக்கூடிய மதிப்பீட்டிற்கு பணம் கொடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மீதம் ஏதாவது பணம் இருந்தால் அது சேமிப்பு பணமாக கருதப்பட்டு வைக்கப்படும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றனர். மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 4 ஙூ ஆண்டுகளில் நடைபெற்ற 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளில் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாயை சேமிப்பு பணமாக மாற்றியுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். எனவே இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ஏதாவது சேமிப்பு பணம் உருவாக்கி இருக்கிறதா என சு.வெங்கடேசன் அவர்கள் கேட்க நீண்ட குழப்பத்திற்கு பின்பு ஒரு பைசா கூட இல்லை என்ற பதிலை அதிகாரிகள் தந்தனர். அதற்கு சு.வெங்கடேசன் தமிழகத்திலேயே ஒரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மொத்த மதிப்பீட்டில் 8 சதவீதம் சேமிப்பு உருவாகியிருக்கிறது. ஆனால் மதுரையில் நீங்கள் எதுவும் இல்லை என சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது எனக் கூற சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திட்டங்களில் எப்படி சேமிப்பு வராமல் இருக்கும், இந்த பிரச்சனையில் நிச்சயமாக சட்டமன்ற பொதுக்கணக்குக்குழுவின் நடவடிக்கைக்குக் கூட நீங்கள் உட்படுத்தப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள் என எச்சரித்தார். இதன் மூலம் கிடைக்கக்கூடிய ஏதாவது சிறு பணத்தையும் மாநகராட்சி பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, இன்றைய தொழில் நுட்பத்தோடு அவற்றை தரம் உயர்த்துவதற்காக பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்தின் முடிவாக மாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டார்.

ஸ்மார்ட் சிட்டியில் தவறான முறையில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஊழல் முறைகேடுகள் மலிந்து கிடக்கிறது. நிர்வாகத் திறமையின்மையால், திட்டமிடப்பட்ட காலத்துக்குள் இன்னும் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இவை எல்லாவற்றையும் ஆலோசனைக்குழு அதிகாரப்பூர்வமாக கண்டறிந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தொகுப்பு: எஸ்.கார்த்திக், படங்கள்: ஜெ.பொன்மாறன்

;