articles

img

கீழடி : ஏழாம் கட்ட அகழாய்வு தொடக்கம்.... சு.வெங்கடேசன் எம்.பி.,

தென்னிந்தியத் தொல்லியல் வரலாற்றில் 2013ஆம் ஆண்டு திருப்புமுனையாக அமைந்தது. 

முதற்கட்ட அகழாய்வு 
மத்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய அகழாய்வுப்பிரிவின் தலைவராக அமர்நாத் ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டார். அவரதுதலைமையின்கீழ் ஆய்வுக்குழுவினர் வைகைநதிக்கரையின் இருபுறமும் நீண்டதொரு மேற்பரப்பாய்வை 2013-இல் மேற்கொண்டு தொல்லியலெச்சம் நிறைந்த 293 பகுதிகளை அடையாளங்கண்டனர்.அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொடக்ககால மாந்தர்களின் வாழ்விடங்களை நோக்கி,சிவகங்கை மாவட்டம் “கீழடி” அருகே பள்ளிச்சந்தைத்திடல் என்னுமிடத்தில் 2014-2015ஆம்ஆண்டு மத்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய அகழாய்வுப்பிரிவு அமர்நாத்ராமகிருஷ்ணா தலைமையில் முதற்கட்ட அகழாய்வைத் தொடங்கியது. அவ்வகழாய்வில்சங்ககால மதுரையோடு தொடர்புபடுத்தக்கூடிய பல்வேறு தொல்லெச்சங்களை அவர்கள்கண்டுபிடித்தனர். அஃது அடுத்த கட்ட ஆய்விற்கு அடித்தளமிட்டது. 

இரண்டாம் கட்ட அகழாய்வு 
தொடர்ந்து, அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் 2015-2016ஆம் ஆண்டில்கீழடியில் மேற்கொண்ட இரண்டாங்கட்ட ஆய்வில் தென்னிந்தியாவின் வைகைநதிக்கரையில் சிறந்ததொரு நகர நாகரிகம் இருந்ததற்கான மிகப்பெரிய கட்டட அமைப்புகள், தொழிற்கூட அமைப்புகள், வணிகம் நடந்ததற்கான சான்றுகள், பல்வகை மணிகள் மிகவும்குறிப்பாக தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானையோட்டுச் சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சங்ககால நாகரிகத்தின் மிகப்பெரும் கட்டிட அமைப்புகள் முதல்முறையாக மிகப்பரந்த அளவில் கிடைத்தன. இவை கீழடியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தின. இதன் எதிர்வினையாக அமர்நாத் ராமகிருஷ்ணன் இப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். 

மூன்றாம் கட்ட அகழாய்வு 
தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீராமன் அவர்கள்தலைமையில் 2016-2017ஆம் ஆண்டில்மூன்றாம்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் அகழாய்வுக்குழிகளைத் தோண்டி, அவையும்முழுமையாக அகழப்படாத நிலையில் தனதுஆய்வினை முடித்துக்கொண்ட ஸ்ரீராமன், முந்தைய ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானத்தின் தொடர்ச்சி கண்டறியப்படாததால் ஆய்வினைத் தொடரவேண்டியதில்லை என்றுமத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை கொடுத்தார். அதனால் மத்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வினை கைவிட்டு வெளியேறியது. 

நான்காம் கட்ட அகழாய்வு 
தமிழக வரலாற்றுக்குப் புதிய  ஒளிபாய்ச்சியகீழடி அகழாய்வினை மத்திய அரசு கைவிட்டதுமிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற ஆலோசனையின்படி, தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறை 2017-2018ஆம் ஆண்டில் கீழடியில் நான்காம்கட்ட அகழாய்வைத் தொடர்ந்து மேற்கொண்டது. இவ்வாய்வில் 5820 தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றோடு குறியீடுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானையோடுகள் ஆகியன அதிக அளவில் கிடைத்தன. இவை தமிழின் எழுத்து அறிவு கி.மு 6ஆம்  நூற்றாண்டிலேயே வளர்ச்சி பெற்றுவிட்டதை உலகிற்கு எடுத்துக்காட்டின. 

ஐந்தாம் கட்ட அகழாய்வு 
அதனைத் தொடர்ந்து, தொல்லியல் துறைஆணையர் த. உதயச்சந்திரன் அவர்களின்முன்முயற்சியால் அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் பல ஆய்வுகள் 2018-2019ஆம் ஆண்டில் ஐந்தாம்கட்டமாக நடத்தப்பட்ட  கீழடிஅகழாய்வில் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அகழாய்வு வரலாற்றில் முதல்முறையாக தொல்லெச்சங்களைக் கண்டறியும் நோக்கில் புவி காந்தப்புலவியல் ஆய்வு (Magneto MeterSurvey), இந்திய புவிகாந்தவியல் நிறுவனத்தின் (Indian Institute of Geomagnetism) மூலம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆளில்லாத விமானம் மூலம்தொல்லெச்சம் அறிதல் ஆய்வும் (UAV Survey) மற்றும் தரையை ஊடுருவும் மின்காந்தக்கருவி ஆய்வு (GPR - Ground Penetrating Radar)   ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.  ஜூலை 2019இல் கீழடியில் நான்காம்கட்ட, ஐந்தாம் கட்ட ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கநூல் ஒன்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் 24 மொழிகளில் வெளியிடப்பட்டது.  

ஆறாம் கட்ட அகழாய்வு 
தொடர்ந்து, 2019-2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியிலும் அதன் சுற்றுப்பகுதிகளான கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அகழாய்வுப்பணிகள் மிகுந்த கவனமுடன் மேற்கொள்ளப்பட்டு  கீழடியில் ஆமை உருவம் பொறித்த சுடுமண் முத்திரை, மிகப்பெரிய விலங்கின் எலும்புக்கூடு, 38 உறைகளைக்கொண்ட மிகப்பெரியஉறைக்கிணறு ஆகியனவும் கொந்தகையில்முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கீழடி அகழாய்வு வரலாற்றில் புதியஒளிக்கீற்றுகளைப் பாய்ச்சியுள்ளன.

ஏழாம் கட்ட அகழாய்வு 
கீழடியில் சனியன்று (13.02.2021)  7ஆம் கட்டஅகழாய்வு தொடங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளாக கீழடி அகழாய்வினை பெரும்மக்கள் இயக்கமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடம் கீழடியைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து மன்றங்களிலும் கீழடிக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது.  எங்களின் பேரடையாளத்தையும் ஆய்வுக்களத்தையும் கைவிட்டுக் கண்டுகொள்ளாமல் அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான தமிழ்ச்சமூகத்தின் அறச்சீற்றமே கீழடி அகழாய்வு இயக்கம். எத்தனை தடைவரினும் அவற்றினை உடைத்து முன்னெடுத்துச் செல்வோம் கீழடி அகழாய்வினை!

;