articles

img

நீர் என்றன் அறவிநாவாய்....

தில்லியிலிருந்து வந்ததும் நேரே ஐயா இரா. இளங்குமரனார் வீட்டிற்குச்சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகனாரின் புகழ்போற்றி வணங்கினேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் அவர் பணியாற்றிய அறைக்குச் சென்றேன். மேசையின் மீது விரிந்துகிடந்த நூல்களையும் அவரது கடைசிக் கையெழுத்துப் பிரதிகளையும் பார்த்தேன்.

அவர் எழுதியுள்ள கடைசிக் கட்டுரையானது இப்படித் தொடங்குகிறது:

“தமிழ் எது? அமிழ்து அது!

அமிழ்து எது? தமிழ் அது!

இரண்டற்ற ஒருமையது – தமிழமிழ்து”

என்று தொடங்கி,

வாழிய நலனே, வாழிய நிலனே” என்று முடிகிறது.

இந்தத் தொடக்கமும் முடிவும் கட்டுரைக்கானவை மட்டுமல்ல, அவரது வாழ்வுக்கானவையுங்கூட.

1982ஆம் ஆண்டு மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள, மு மு மேல்நிலைப்பள்ளி மாணவர்களைத் தயார்செய்யும் பொறுப்பு தமிழாசிரியரான இளங்குமரனாரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

போட்டியில் பங்கெடுக்க ஆர்வத்தோடு வந்த என்னிடம் பாரதி பற்றி நான்கு பக்கங்களில் எழுதப்பட்ட உரையைத் தந்தார். அந்த வயதில் ஒரு கேள்விக்கான பதிலை மனப்பாடம் செய்யவே பெரும்பாடாக இருக்கும். நான்கு பக்கங்களெல்லாம் எப்படி மனப்பாடம் செய்ய முடியும் என கைநடுங்க அதனை வாங்கினேன். முகப்பதற்ற த்தைப் பார்த்தவாறே மேசையின் மீதிருந்த டப்பாவில் இருந்து ஆரஞ்சுமிட்டாயை எடுத்துத் தந்தார். நம்பிக்கையைச் சுவையூற்றி அனுப்பினார்.

ஆர்வமும் ஈடுபாடுங்கொண்ட செயல் நம்மை எவ்வளவு வேகத்தோடு இயக்கும் என்பதை அந்த நான்கு பக்கங்களை மனப்பாடம் செய்தபொழுது முதன்முறையாக உணர்ந்தேன். மாவட்ட அளவில் முதற்பரிசு பெற்றேன்.

“கவிக்குயில், கவிதைத்தேனீ, நடமாடித்திரியும் யாழ், ஓட்டையிடாமலே இசைக்கும் புல்லாங்குழல்” எனத்தொடங்கும் பாரதி பற்றிய அந்த நான்கு பக்க உரை இன்றளவும் வரி உதிராமல் அப்படியே நினைவில் இருக்கிறது.ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் பார்த்த அந்த அழகிய கையெழுத்து, 94ஆவது வயதில் மரணத்தைத் தழுவும்முன் கூட வடிவு குறையவில்லை.

அவர் எழுதித்தந்த அந்தஉரையின் முதல் பத்தியில்இடம்பெற்ற வாக்கியத்திலிருந்து தான் எனது முதல் கவிதை நூலுக்கு “ஓட்டையிடாத புல்லாங்குழல்” எனப்பெயரிட்டேன்.

அவர் எழுத்தில் இருந்து தொடங்கியதுதான் எனது மேடைப்பேச்சு. அவர் எழுத்தின் வழி தொடங்கியதுதான் எனது படைப்பிலக்கியம். அவர் குரல்வழிதொடங்கியதுதான் சங்கஇலக்கி யம் சார்ந்த ஈர்ப்பும் வியப்பும்.

வைகை ஆற்றில் அழகர் இறங்கி வரும் வழியில், வீட்டுத்திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்து அர்ச்சகர் சொன்னாராம், “சாமி வருது; காலை மடக்கு”.

அதற்கு அம்மா அர்ச்சகரைப் பார்த்துக் கேட்டாராம், “சாமி எந்தப்பக்கம் இல்லேனு சொல்லுப்பா, அந்தப் பக்கம் கால நீட்டிக்கிறேன்”

செவிட்டில் அறைவதைப் போன்ற இந்தக் கேள்வியைக் கேட்டது இளங்குமரனாரை பெற்றெடுத்த வாழவந்தம்மையார். தனது வாழ்க்கை வரலாற்று நூலில்இதனை பதிவு செய்துள்ளார்.

இப்படித்தான் யான் கற்ற தமிழின் எத்திசையும் அவரே.

அவரின் தனித்தமிழும் இலக்கணத்தூய்மையும் நான் பற்றிபின்தொடராதவை. கொடி கொண்டு கட்டவேண்டியதைச் சங்கிலிகொண்டு கட்டுவதாகாது என்பது எனது கொள்கை. நேர்கோட்டில் யாராலும் நடக்க முடியாது. எனவே அவர் கோட்டில் நடக்காதவன் நான். அவரின் மாணவன் நான்; அவரின் நிழலல்ல.

ஆசிரியர் மாணவர் உறவில் முரண்கொள்ளுதல் ஒரு கலை.

முரண்கொள்ள உரிமை வேண்டும். நமது கல்விசூழலில் ஆசிரியரின்பாலோ, கல்வியின்பாலோ மாணவனுக்கு உரிமையில்லை. எனவே கல்வியின் வழி ஆசிரியனிடம் மாணவன் முரண்கொள்ளு தல் முடிவதில்லை. ஆனால் எங்களால் முடிந்தது. காரணம் அந்த முரண்சுவை தமிழால் ஆனது.

என்னை வேங்கடேசன் என்றே அழைப்பார். ஏழாம் வகுப்பில் பரிசுவாங்கி வந்தபோதும் சரி. சாகித்ய அகாதமி விருது பெற்றபோதும் சரி, செப்பனிடச் சலிக்காதவர்.

சொல்லைப் பகுத்துக்காட்டி அதன் வேர்ச்சொல்லைச் சுட்டுதல்சொல்லைப்பற்றிப் பேசுதல் எவ்வளவு சுவையானது. ”தோடுடைய செவியன்” எனச்சொல்லும்போது “தோடு பெண்களுக்குரியது. செவியன், ஆண்களுக்குரிய விகுதி” எனப் பிரித்து அவர் சொல்லும் அலகில் மங்கைபாகன் ஓவியமும் அர்த்தநாரீஸ்வர் சிலையும் அழகில் குன்றும், மொழியின் வனப்பு அக்கணம் ஊறிப் பெருகும்.

அவரின் அறைக்குச்சென்று நீண்டநேரம் அப்படியே நின்றிருந்தேன். மேசையின் மீது திருவள்ளுவரின் சிலை இருந்தது. 

காவிரிக்கரையில் திருவள்ளுவர் தவச்சாலையைத் தோற்றுவித்து, வள்ளுவம்போற்றி பேரியக்கம் முன்னெடுத்தவர். மாணவர்களுக்காக “திருக்குறள் கதைகள்” பத்து தொகுதிகள் எழுதி யவர். குமரியில் வள்ளுவர்சிலை திறப்பின்போது அவர் ஆற்றிய உரைக்கு நிகரான இன்னோர் உரையை வள்ளுவம் குறித்து நான் இதுவரை கேட்டதில்லை.

மேசையில் விரிந்து கிடக்கும் புத்தகங்கள், அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள மூலநூல்களைப் பார்த்தபடி நின்றிருந்தேன். இத்தனை ஆயிரம் புத்தகங்களைக்கொண்டவன் என் ஆசிரியன் என்ற கர்வம் எனது ஏழாம் வகுப்பில் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சுமார் 40,000 நூல்களைக்கொண்ட பாவாணர் ஆராய்ச்சி நூலகத்தை உருவாக்கி இருந்தார்.இன்று எங்களின் கர்வம் அதனையும் கடந்தது, என் ஆசிரியன் ஐநூறு நூல்கள் எழுதியவன் என்று சொல்லிப் பெருமைப்படும் வாய்ப்பு இந்த உலகில் எத்தனை மாணவர்களுக்கு வாய்த்திருக் கிறது?

ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டியவர்களை அறத்தின் பொருட்டு காசுவாங்காமல் படகில் ஏற்றிச்செல்லும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. அப்படகுக்கு “அறவிநாவாய்” எனப்பெயர். நாங்கள் பார்த்த அறவிநாவாய் எங்கள் ஆசிரியர். 
எத்தனை மாணவர்கள் இப் படகில் ஏறி பயணப்பட்டிருப்போம்.

பயணத்தின் நினைவு எங்கெங்கோ அழைத்துசென்று கொண்டிருக்க, அலமாரியின் புத்தகங்களை பார்த்தவாறு இருந்தேன். கீழே இருந்த கடைசி அடுக்கில் பெரிய டப்பா ஒன்றில் ஆரஞ்சு மிட்டாய் இருந்ததை கண்கள் பார்த்தன.

ஒரு கணம் உறைந்து போனேன். எந்த மாணவனின் வருகைக்காக அவற்றை  வாங்கி வைத்திருக்கிறார்?

மாணவனுக்கு தமிழ் ஊட்டும் ஆசிரியன் காலத்துள் கறைந்தா போவான்!

மேசையின் மீதிருக்கும் அவரின் எழுத்து சொல்கிறது, ஓசை என்பது குரல்வளை இல்லாமல் எழுவது, அலையோசை, இடியோசை போல. ஆனால் ஒலி என்பது குரல்வளை உள்ளவை எழுப்புவது.

நாங்கள் இதுகாறும் உங்களின் ஒலியை கேட்டிருக்கிறோம்.  நீங்கள் ஆற்றிய தமிழ்ப்பணி உங்களது புகழை என்றென்றும் பறைசாற்றும். தமிழோசை ஓய்வதில்லை. தமிழுக்கு பணிசெய்பவன் சாவதில்லை.

கட்டுரையாளர் : சு.வெங்கடேசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்

;