articles

img

சங்கரய்யா என்றாலே உற்சாகம் பெருக்கெடுக்கும்....

அன்புத் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தன்னுடைய நூறாவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நூறு வயதுவரை ஒரு மனிதன் வாழ்வது என்பதுசிறப்பான அம்சம்தான். நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு, கடினமான உழைப்பு,கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதவாழ்க்கையை மேற்கொள்பவர்கள் பலர் உலகில் நூறு வயது வரை வாழ்கின்றனர். அதைக் கடந்தும் வாழ்பவர்களும் இந்த உலகில் உண்டு. 

நாம் வயதில் மூத்தவர் என்பதைமட்டும் வைத்து தோழர் என்.எஸ்.வாழ்க்கையை மதிப்பீடு செய்யவில்லை. தோழர் என்.எஸ் அவர்கள்அரசியலில் பொது வாழ்க்கையில் ஒரு சகாப்தம். நூறு வருடங்களில் எண்பது வருடங்கள் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தோழர். 20 நூற்றாண்டின்முதல் கட்டத்தில் தனது அரசியல்பயணத்தை துவங்கி 21 நூற்றாண்டின் முற்பகுதி வரை தன்னுடைய அரசியல் பயணத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார். தேசத்தின் அரசியலில் தடம் பதித்து பொதுவாழ்க்கையில் குறிப்பாக கம்யூனிசஇயக்க வாழ்க்கையில் சதமடித்த தோழர்களில் தோழர் என்.எஸ் அவர்கள் மிக முக்கியப் பாத்திரத்தை வகித்து வருகிறார். 

கம்யூனிச இயக்க வரலாற்றில்முன்னுதாரணமான செயல்பாட்டாளர் தோழர் என்.எஸ். அவர்கள். இவருடைய வாழ்க்கை, செயல், பேச்சுஇவையனைத்தும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. மற்றவர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இவரை கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆசானாக பார்க்கிறோம். நேர்மை,நாணயம், உண்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கண்ணியமான வார்த்தை, எளிமையான வாழக்கை, எளிய தோற்றம் அனைத்தையும் உள்ளடக்கி பொது வாழ்க்கையில் முத்திரை பதித்தவர் தோழர் என்.எஸ்.இவரின் கலகலப்பான உற்சாகமானபேச்சு கேட்பவர்களை உற்சாகமடைய வைக்கும். சிரித்து பேசும் பாங்கு இவர் உடன் பிறந்த சுபாவம். இயக்க வரலாற்றின் சிறந்த போராட்ட அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதின் மூலம்கேட்கும் தோழர்களுக்கு இயக்கத்தின் மீது நம்பிக்கையும், மரியாதையும் ஏற்படுத்தும் விதத்தில் அவருடைய பேச்சுத்தன்மை எப்பொழுதும் அமைந்திருக்கும். 

இத்தகைய தோழரோடு நானும் 1974ஆம் ஆண்டிலிருந்து 46 ஆண்டுகாலம் இவருடன் இயக்கங்களிலும், கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன் என்கிற பொழுது நமக்கே ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. தோழர் என்.எஸ்.அவர்கள் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் ஒன்றுபட்ட மதுரையில் (திண்டுக்கல், தேனி உட்பட) விவசாய இயக்கத்தில் முன்னுக்கு வந்த விவசாயிகளின் பிரச்சனைகள் குத்தகை வாரப்பிரச்சனைகள். அதையொட்டி விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றும் பிரச்சனை. இதை அன்றுகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய சங்கமும் ஒன்றுபட்டு நின்று விவசாயிகளை பாதுகாத்து நில வெளியேற்றத்தை தடுத்தன. 

தேனி மாவட்டத்தின் உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சீலையம்பட்டி பகுதியிலும் திண்டுக்கல் பகுதியில் பழனி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதியிலும், மதுரை வடக்கு தாலுகாவில் பொதும்பு, பாசிங்காபுரம், மாயாண்டிபட்டி, நரசிங்கம் போன்ற பகுதியிலும், அதேபோல் மேலூர் தாலுகாவில் ஏராளமான பிரச்சனைகளில், போராட்டங்களை தலைமை தாங்கிநடத்தியுள்ளார். தோழர் என்.எஸ்.மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் அவைகளுக்கு வழிகாட்டியும் பங்கெடுத்தும் செயல்பட்டுள்ளார். அதனால் தான் அவருக்குப்பிற்காலத்திய அரசியல் இயக்கங்கள் விவசாயிகள் சங்கம் அதனுடையநடவடிக்கைகளையே சார்ந்து இருந்தது. 

நான் அரசியலுக்கு வந்த 1971 காலகட்டத்தில் தோழர் என்.எஸ் அவர்கள் மதுரையிலிருந்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதற்கு சென்று விட்டார். தோழர்ஏ.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஆர்.ராமராஜ், கே.பி.ஜானகியம்மாள், என்.வரதராஜன்,ஏ.அப்துல் வகாப் போன்ற தோழர்கள்தான் அன்று மதுரையை மையமாககொண்டு செயல்பட்ட தோழர்கள். 1974ல் ராஜஸ்தானில் உள்ள சிகார்(தார் பாலைவனம் இருகே அமைந்துள்ளநகரம்) என்ற இடத்தில் அகில இந்தியவிவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தோழர்என்.எஸ், தோழர் ஆர்.ராமராஜ், தோழர்என்.வரதராஜன், கே.பி.ஜானகியம்மாள், வி.ஏ.கருப்புசாமி, நான் (ஏ.லாசர்)உட்பட பல தோழர்கள் பிரதிநிதியாக சென்றிருந்தோம். மேலே குறிப்பிட்ட தோழர்கள் ஒரு குழுவாக சென்று திரும்பினோம். இந்தக் காலத்தில் மாநாட்டை முடித்து தில்லி வந்த காலத்தில் அகில இந்திய ரயில்வே பொது வேலை நிறுத்தம் காரணமாக பத்துதினங்களுக்கு மேலாக தில்லியிலேயே நாங்கள் அனைவரும் தங்கியிருந்தோம். தோழர் என்.எஸ்.சகோதரர் என்.ராமகிருஷ்ணன் கட்சியின்மத்தியக்குழு பணிகளுக்காக தில்லியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவர் வீட்டில்தான் எங்களுக்குஉணவு.

இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவராக தோழர் ஏ.கே.கோபாலன், அகில இந்திய பொதுச்செயலாளராக தோழர் அரிகிருஷ்ணகோனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.  சிகார் மாநாட்டில் தோழர் சுந்தரய்யா, தோழர் இஎம்எஸ் போன்ற தலைவர்களும் வாழ்த்துவதற்கு வருகை தந்திருந்தனர். இந்த மாநாட்டையொட்டி தோழர் சங்கரய்யாவுடன் 20 தினங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருந்து பழகியபொழுதுதான் அவருடைய சிறப்பான குணங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. கட்டுப்பாடும், ஒழுக்கமும் கம்யூனிச நெறிமுறைகளையும் தன் வாழ்க்கையில் உறுதியாக பின்பற்றிய தோழர் என்.எஸ்.அவர்கள். எல்லாகட்டுப்பாடுகளையும் விட உணவுகட்டுப்பாட்டில் மிக உறுதியாக இருக்கக் கூடியவர் தோழர் என்.எஸ். நல்ல உணவு என்றாலே அதைஉண்ணும் ஆசை சராசரி எல்லாமனிதர்களுக்கும் இருக்கும். எந்தஉணவாக இருந்தாலும், தோழர் என்.எஸ், அவர்கள் கட்டுப்பாட்டை மீறி உள்ளே வர அனுமதிப்பதில்லை. அதுகூட அவர் நீண்டகாலம்வாழ்வதற்கு காரணமாக இருக்கலாம். 

தோழர் சுர்ஜித் அவர்கள் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு அடுத்த மாநாட்டை பஞ்சாப்பில் உள்ள சண்டிகரில் நடந்தது.தோழர் சுர்ஜித் அவர்களே முழுபொறுப்பு எடுத்து அந்த மாநாட்டைசிறப்பாக நடத்தினார் என்பது அந்த மாநாட்டிற்கு வந்த அனைத்து தோழர்களுக்கும் தெரியும். அங்கேகொடுக்கப்பட்ட அந்த சிறந்த உணவுவகை அனைத்து தோழர்களையும் சற்று அபரிமிதமாகவே சாப்பிட வைத்தது. தோழர் சங்கரய்யா ஒவ்வொரு டேபிளாக வந்து தமிழ்நாட்டு தோழர்களை பார்த்து சாப்பாடு எப்படி இருக்கிறது என்றுகேட்பார். தோழர்கள் மிகப் பிரமாதம்என்பார்கள். அதற்கு தோழர் என்.எஸ். வயிறு உங்களுடையது, கவனமாக சாப்பிடுங்கள். நாம் சுகமாக மீண்டும் தமிழ்நாடு யோய் சேரவேண்டும் என்று சிரித்துக்கொண்டேசொல்லிவிட்டு நகர்வார். அந்த அளவிற்கு உணவின் மீது கட்டுப்பாடு உள்ள தோழர்.விவசாய இயக்கத்தில் தமிழகத்தின் தலைமையிலும் செயல்பட்டார். அகில இந்திய விவசாய இயக்கத்தின் தலைவராகவும் இருந்து செயல்பட்டார் தோழர் என்.எஸ்.அவர்கள்.

இவருடன் அகில இந்திய கமிட்டி, மாநில கமிட்டியிலும் இருந்து பல காலம் விவசாய இயக்கத்தை கட்டுவது குறித்தும் போராட்டங்கள் குறித்தும் பல விவாதங்களை நடத்தியுள்ளோம். அனுபவங்களை கற்றுத்தருவதிலும், ஆலோசனைகள் வழங்குவதிலும் தோழர்களை உற்சாகமாக களத்தில் இறங்க வைப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சி எப்பொழுதுமே சிறப்பானதாக இருக்கும்.எளிமையான அணுகுமுறையாகவும் இருக்கும். எந்தவொரு போராட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை, உழைப்பாளிகளை திரட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவருடைய சுதந்திரப் போராட்ட கால அனுபவத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்குமுறை காலகட்டம் உட்பட எப்படி விவசாயிகளை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் என்று அனுபவப்பூர்வமாக சொல்லிக் கொடுப்பார். அந்த காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட, ஒடுக்குமுறைகளை சந்தித்த அத்தனை தோழர்களையும் நினைவில் வைத்து கடந்த கால வரலாற்றை தோழர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் தோழர் என்.எஸ். போல் யாரும் இருக்க முடியாது. 

இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பதில்எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இளைஞர்களுக்கு போதிய அனுபவம் இல்லையே என்று மற்றவர்கள் பொறுப்புகளை தர யோசித்தால் தோழர் என்.எஸ்.அவர்கள் பளிச்சென்று சொல்வார்.எல்லோரும் கற்றுக்கொள்ள முடியும். நீங்களும் நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டோம் என்றுசொல்வார். அப்படித்தான் 71ல் இந்த இயக்கத்திற்குள் அடியெடுத்து வைத்த என் போன்ற தோழர்களை74 லிலேயே அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதியாக தேர்வு செய்ததும் பின்பு பல பொறுப்புகளை கொடுத்ததும் இதுபோன்ற சிந்தனைகளில் இருந்துதான். எனவே தோழர் என்.எஸ். அவர்கள் இளைஞர்களை தேடி இயக்கம் செல்ல வேண்டும் என்பதையும் இளைஞர்களின் கையில் பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று சொல்வதிலும் உறுதியாக இருப்பார். தோழர்களிடம் பிழை இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்கிற கருத்தையும் இணைத்தே சொல்வார். 

அவருடைய நீண்டகால அரசியல் அனுபவம் இன்றைக்கும் அவருடைய பேச்சை கேட்கும் அனைத்து தோழர்களையும் உற்சாகமடைய வைக்கும். சோர்வாக இருக்கும் தோழர்களிடம் தோழர் என்.எஸ். பேசினால் சோர்வு எங்கே போனது என்ற நிலைமைதான் ஏற்படும். எனவே அவர் மற்றவர்களுக்கு எப்பொழுதுமே கற்றுக் கொடுக்கும் மிகச் சிறந்த ஆசானாகமார்க்சிய அனுபவம் கொண்டபோராளியாகத்தான் செயல்பட்டார். எனவே அவரிடமிருந்தும் அவருடைய அரசியல் பயணத்திலிருந்தும் கற்றுக்கொண்டு நமதுகம்யூனிச பயண நடவடிக்கைகளை உற்சாகமாக தொடருவோம். 

கட்டுரையாளர் : ஏ.லாசர், மாநிலத் தலைவர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

;