articles

img

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது...

இந்தியா ஏற்கெனவே சிக்கிக் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொரோனா கால பொதுமுடக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கங்கள் கையாள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை புறந்தள்ளிவிட்டு ஒரு சந்ததியின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே இருட்டு குகைக்குள் தள்ளிவிடும் நடவடிக்கைதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வியாழனன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியிருப்பது.

புதிர் காலமாகும் எதிர்காலம்
சென்ற வருடமே தமிழக அரசு, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஓய்வு பெறும்வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்திய போதுதமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கையானது எந்த வகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல், இன்னும் ஓராண்டிற்கு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் கொடுக்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை தள்ளிப்போடும் ஒரு தற்காலிக நடவடிக்கை என்பது தான் யதார்த்தம். இதன்விளைவாக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக மாற்றியுள்ளது. தற்போது 30 வயதை எட்டவிருக்கும் இளைஞர்கள் தங்களின் அரசு வேலைக்கான வாய்ப்பையும் வருவாயையும் தவற விடும் நிலை எழுந்துள்ளது. இதுபோக ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியர்கள் இன்னும் ஒரு ஆண்டுக்குபணி உயர்வு பெறாமல் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வேலை நியமன தடைச்சட்டத்தின் இன்னொரு வடிவம்
தமிழக அரசின் இந்தப் போக்கானது இன்னும்ஓராண்டிற்கு இளைஞர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடுவதுடன், தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் மேலும்ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட2003 இல் தமிழக அரசு பிறப்பித்த வேலை நியமனதடைச் சட்டத்தின் இன்னொரு வடிவமாகவே கருத வேண்டியுள்ளது.

சமூக அநீதி பெருகும்
ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடதமிழக அரசு சுணக்கம் காட்டி வரும் நிலையில்இந்த அறிவிப்பானது மேலும் இளைஞர்களைதவிப்பில் ஆழ்த்திவிடும் என்பதில் ஐயமில்லை. தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக மாறி ஏற்கெனவே அரசுத் துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷய்யாவை நியமித்து நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தற்போது மேலும் ஓராண்டுக்கு ஓய்வு பெறும்வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தியிருப்பது இளைஞர்களை வேலைவாய்ப்பற்றவர்களாக மாற்றி சமூக அநீதிகள் பெருக வழிவகை ஏற்படுத்திவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

ஓராண்டுக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதாக கணக்கில்கொண்டால் தமிழக அரசு அவர்களுக்கு ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க ரூ.6 ஆயிரம் கோடிசெலவழிக்க வேண்டி வரும். அந்த 6 ஆயிரம் கோடிரூபாய்க்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையையும், சமூக அமைதியையும் கேள்விக்குறியாக்கி விடும். இந்த அறிவிப்பைதமிழக அரசு கைவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் வருவாய்க்கு வழி தேட வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் க.அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...

;