articles

img

பசுமை வனங்களும் வர்க்க செங்கொடியும்.... மலைக்கிராமங்களில் பயணித்த மார்க்சிஸ்டுகள்.....

நம்மை பொறுத்தவரை பொதுமுடக்கமென்பது வெளியில் செல்லாமல் தனித்து இருப்பதும், ஊரடங்கு காலத்தில் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதும் தானே.. ஆனால் அவர்களுக்கோ அது முற்றிலும் வேறு விதமாகவே இருந்தது. . அன்றாடம் கூலிவேலைகளுக்குச் சென்று விட்டு திரும்புகிற போது, கிடைக்கிற சொற்ப கூலியில் அன்றைக்கான பொருட்களை வாங்கி வைத்து பசியாறும் நிலையிலுள்ள ஏழை பழங்குடி மக்களுக்கு பொது முடக்கமென்பது, வாழ்வின் முடக்கமாகவே இயல்பாக இருந்தது. வேலையில்லை. எனவே வருமானமும் இல்லை.  

நடமாடும் காய்கறி வண்டிகளோ,  மளிகை வண்டிகளோ அவர்கள் வசிக்கும் அடர் வனப்பகுதிகளில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களுக்கும், மலைச் சரிவுகளில் உள்ள வாழ்விடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும்இல்லை. வந்தால் வாங்கிக் கொள்வதற்கு கையில் காசும் இல்லை எனும் துயரம் சூழ்ந்த வாழ்வே அவர்களுக் கானது. வேலைகளையும் வருமானத்தையும் இழந்து, அருகில் கடைகளும் இல்லாமல் இருக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகவே கடக்கும். 

இந்நிலையில், முற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி கிராமங்களுக்கு இந்த பொது முடக்கக் காலத்தில் உதவிக் கரம் நீட்டுவோம் எனும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு எடுத்தது. முடிவு எடுக்கப்பட்ட அடுத்த கணத்திலிருந்து ஆங்காங்கே உள்ள பழங்குடி கிராமங்களின் விபரங்களையும், அங்குள்ள வீடுகளின் பட்டியலையும் மளமளவென தயாரித்தார்கள் தோழர்கள்.. வீடுகளின் எண்ணிக்கை, தேவையான பொருட்கள் குறித்தவிபரங்கள் இறுதியானவுடன் பொருட்களை சேகரிக்கும் பணியும் உடனடி யாக துவங்கியது. பொருட்களும், நிதி உதவியுமாக வரத்துவங்கியது. தனி நபர்கள், தொழிற்சங்க அமைப்புகள், கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் இத்தகைய பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.  

ஆங்காங்கே உள்ள கட்சியின் அலுவலகங்கள் பொருட்களை சேமிக்கும் குடோன்களாக மாறியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய முயற்சி குறித்து மாவட்ட ஆட்சியரிடமும்தெரிவிக்கப்பட்டது. கட்சியின் முயற்சியை பாராட்டிய அவர் தோழர்களை ஊக்குவித்ததோடு, பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனங்களுக்கும், உடன் செல்லும் தோழர்களுக்கான உரிய அனுமதியை உடனே வழங்கிட வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டார். ஆங்காங்கே உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பல இடங்களில் அவர்களும் நம்மோடு இணைந்து கொண்டார்கள். அவ்வப்போது சேகரமாகும் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அளவில் தனித்தனியாக பைகளில் போடப்பட்டு கிராமங்களுக்கு பிரிக்கப்பட்டு விநியோகம் செய்யும் பணிகளும்  உடனடியாக துவங்கப்பட்டது. 

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள்
எளிதில் செல்லமுடியாத கிராமங்களுக்கும், தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் உதவிப் பொருட்களை உற்சாகத்தோடும், தோழமை உணர்வோடும் எடுத்துச் சென்றார்கள் தோழர்கள். குன்னூரில் குறும்பாடி, புதுக்காடு, சேம்பக்கரை, மூப்பர்காடு,நெடுகல் கோம்பை, செங்கல்புதூர்,ஜோகிக்கோம்பை, ஊஞ்சலார்கோம்பை, வீரக்கோம்பை, வடுகன் தோட்டம், கோத்தகிரியில் கரிக்கையூர், பங்களாப்பாடி, குமரமுடி, பர்கூர்,  எருமாடு பகுதியில் கப்பாலா, பனஞ்சிறா, அம்பலமூலா பகுதியில் கோட்டக்கரா, நெல்லித்துறை, அட்டக்கடவு, நாரங்காமூலா, முடிக்கிவாடி, படிக்கன்சோலா, வேரமாங்கா, கூடலூரில் தேவர்சோலா, 3 டிவிஷன், உதகையில் குந்தா, பெங்கால்மட்டம், லவ்டேல் எஸ்டேட், வி சி காலனி என மாவட்டம் முழுவதுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை நேரடியாக கொண்டு சேர்த்தனர் தோழர்கள்.  பழங்குடி மக்களுக்கு உதவிடு வோம் எனும் கோரிக்கையை விடுத்தவுடன் மாவட்டத்திலுள்ள சிஐடியு,எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல்.., அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, வெலிங்டன் கண்டோன்மெண்ட் ஊழியர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் உதவிகளுக்காக கை கோர்த்தன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கமும் பொருட்களை அளித்து உதவின. ஒரு சில தனி நபர்கள் இத்தகைய முயற்சியை அறிந்து தாங்களாகவே நன்கொடையும் அளித்து உதவினர். அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சியின் மூல மாகவே இப்பணிகள் சாத்தியமாயின.. 

ஒவ்வொரு நாளும் தாங்கள் சென்று வந்த பகுதிகளின் புகைப்படங்களை குழுக்களில் பகிர்ந்து கொண்டனர் தோழர்கள். இது அடுத்தடுத்த நாட்களுக்கான பணிகளுக்கு இயல்பானதொரு உற்சாகத்தையும் அளிப்ப தாகவே இருந்தது. ஒரு வர்க்க கட்சியின் ஊழியர்கள் என்ற முறையில் நாம்செய்வது உதவியோ அல்லது பரோபகாரமோ அல்ல.  இதுவும் ஒரு வர்க்க கடமையே எனும் உணர்வு நிலையிலிருந்து இத்தகைய பணிகளை மேற்கொண்ட தோழர்களுக்கு கிடைத்தஉற்சாகமும், அனுபவங்களும் அவர்களின்  அடுத்தடுத்த பணிகளுக்கும் பெரும் ஊக்கமாகவும் அமைந்திருக் கிறது. தொடர்பு எல்லைக்கு அப்பால்இருக்கும் எந்தவொரு பகுதியாக இருப்பினும், வர்க்க உணர்வெனும் அலைவரிசையின் மூலம் அவற்றோடும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதை  இக்கொடுங்காலத் திலும் நிரூபித்திருக்கிறார்கள் நமது தோழர்கள்.

தொகுப்பு : ஆர்.பத்ரி

;