articles

img

மக்களிடமிருந்து .... மக்களுக்காக..

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் போராட்டங்களுக்கு மக்களிடம் நிதி திரட்டும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 27 ல் துவங்கி ஜனவரி 10 வரையிலான 15 நாட்களில் ரூ.21 லட்சத்தை, விருதுநகர் மாவட்ட மக்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாரி வழங்கியுள்ளனர்.

இதில் கட்சியின் விருதுநகர் நகர்க்குழு இவ்வாண்டு இலக்கான ரூ.3லட்சத்து 60 ஆயிரத்தை முடித்துள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், நகர்குழு செயலாளர் எல்.முருகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு மற்றும்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் நிதி வசூல் இயக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திட ஒவ்வொரு ஆண்டும் மக்களிடம் சென்று நிதி திரட்டி வருகிறோம். இவ்வாண்டு டிசம்பர் 27 முதல் ஜனவரி 17 வரை 2 லட்சம் குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டு இதுவரையில் 15 நாட்களில் 1.50 லட்சம் குடும்பங்களை சந்தித்ததில் ரூ.21 லட்சம் திரட்டியுள்ளோம்.மக்களை சந்திக்கும் போது மத்திய பாஜக அரசின் மீதும்  மாநில அதிமுக அரசின் மீதும் அளவில்லாத கோபத்தை காண முடிந்தது. அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

கொரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. அக்காலத்தில் ஓடோடி வந்து உணவுப் பொருள்களை வழங்கி உதவியவர்கள், நோய் தடுப்புக்காக கபசுர குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகளை தெருத் தெருவாக, கிராமம், கிராமமாக வந்து வழங்கியவர்கள்; மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் என்பதை மக்கள், செல்லுமிடமெல்லாம் நினைவுகூர்ந்தனர்.எந்த முன்னேற்பாடுமின்றி அவசரமாய் ஊரடங்கு அறிவித்த மோடி அரசு அவதிப்படும் மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யாத நிலையில் நிவாரணம் கேட்டு ஏராளமான போராட்டங்களை நடத்தியவர்கள்; சுற்றுச் சூழல் விதி எனக் கூறி பட்டாசுக்கு தடை வந்த போது, பட்டாசு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்த போது, பட்டாசு தொழிலை பாதுகாத்திட உச்சநீதிமன்றம் சென்று வாதாடி மக்களைத் திரட்டி போராடியவர்கள்;கிராமப்புற விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு ஒரே ஆதரவாய் விளங்குவது 100 நாள் வேலைத் திட்டம். இதில் ஈடுபடும் தொழிலாளர்களின் கூலி, வேலை பாதுகாப்பிற்காக குரல் கொடுத்தவர்கள் என்ற வரவேற்பும், நிதி திரட்டச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு கிடைத்தது.

மோடி அரசின் நாசகர வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டங்களில் முன் நிற்பவர்கள், குடிநீர், சாலை, தெரு விளக்கு, சுகாதாரம், மருத்துவம் என அனைத்து மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி கோரிக்கைகளை  வென்றெடுத்தவர்கள்; பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக, தலித் மக்கள் மீதான தாக்குதல், தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடுபவர்கள் என்பதை உணர்ந்துள்ள மக்கள், அடித்தட்டு உழைப்பாளி மக்களின் நலன், நடுத்தர மக்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் நலன் என அனைத்து மக்களின் நலன்களுக்காக செயல்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் என்பதால் மக்கள் தாராளமாக நிதி வழங்கினார்கள். இந்த நிதி மக்கள் நலன்காக்கும் போராட்டங்களுக்கான நிதி;  ஆளும் வர்க்கத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கான நிதி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

;