articles

img

முன்னுதாரணமான தலைவர் சி.கோவிந்தராஜன்....

1938 ஆம் ஆண்டு முதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேச விடுதலைஇயக்கத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தோழர் சி.கோவிந்தராஜன் ஆற்றியுள்ள பங்கு பணியும் தொண்டும் பெரிதும் பாராட்டிற்குரியதாகும்.
தென்னாற்காடு மாவட்டம் பெருமாத்தூரில் 1921 செப்டம்பர் 15 அன்று பிறந்த தோழர் கோவிந்தராஜன், இளமைக்காலம் முதற்கொண்டே காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். அதன்தொடர்ச்சியாக 1963-64 ஆம் ஆண்டு முதலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஊழியராகப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் உறுப்பினராக நீண்ட காலம் செயலாற்றினார். கட்சியின் சார்பில் மூன்று முறை தமிழ்நாடு சட்டப் பேரவையின் உறுப்பினராக நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக சட்டப் பேரவையில் பணிபுரிந்தார். நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராகவும் சேவை செய்தார்.அவர் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் பெரும்தியாகம் செய்துள்ளார். அவர் எட்டரை பல ஆண்டுகள்சிறைவாசத்தையும், ஐந்தரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையின் இன்னல்களையும் உறுதியுடன் சந்தித்து வெற்றி கண்டார். மக்கள் இயக்கத்திற்காக போலீஸ் காவலிலிருந்து அவர் தப்பிய நிகழ்ச்சி வீரமிக்க செயலாகும்.

சிறை வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுபவித்தார். வாழ்க்கை முழுவதிலும் அவர் ஒரு போராளியாகவே இருந்து, எதிர்ப்புகளை சமாளித்து இயக்கப்பணிகளை ஆற்றியுள்ளார்.தென்னாற்காடு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை பலப்படுத்துவதில் அவர் விடாப்பிடியான முயற்சிகளை மேற்கொண்டார். பார்க்கிறோம். அத்துடன் அந்த மாவட்டத்தில் விவசாயிகள் இயக்கத்தை உருவாக்குவதிலும் அவர் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.தமிழக தொழிற் சங்க இயக்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக பல்வேறு அரகங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

தோழர் கோவிந்தராஜனும் தோழர் ஷாஜாதியும் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியின் போது ஏற்பட்ட முக்கிய சமூக சீர்திருத்த உள்ளடக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலப்புத் திருமணம். தோழர் ஷாஜாதி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இளமைக் காலம் முதல் பாடுபட்டவர். தோழர் கோவிந்தராஜன், ஷாஜாதி தம்பதியினரின் வாழ்க்கை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்தம்பதியினரின் பொதுத் தொண்டு அனைவருக்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.தேச பக்தராக, தொழிற் சங்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக, சட்டப்பேரவை உறுப்பினராக இது போன்று மக்கள் இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் தோழர் கோவிந்தராஜன் ஆற்றியுள்ள பணிகள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளன.

கட்டுரையாளர் : என்.சங்கரய்யா

(சி.கோவிந்தராஜன் - சுதந்திரப் போராட்டத்திலிருந்து சமுதாய புரட்சிக்கு என்ற தலைப்பில் என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நூலுக்கு அளித்த முன்னுரையிலிருந்து)

;