articles

img

பெருந்தொற்றுக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க... பெண்கள்-குழந்தைகள் நலன் குறித்து மகளிர் நலத்துறை அமைச்சரிடம் மாதர் சங்கம் கோரிக்கை மனு....

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்சார்பாக ஜூலை 27 செவ்வாய்க்கிழமையன்று  காலை சமூக நலன்- பெண்கள்நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களை சந்தித்துபெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்தகோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுக்கப்பட்டது.இதில் மாதர்  சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி மாநிலத்தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப்  பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கோரிக்கைகள் குறித்து விவாதித்தார். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து விவாதிக்க அனைத்து பெண்கள்,குழந்தைகள் நல அமைப்புகளையும் இணைத்து ஒருகூட்டம் நடத்துவதாக உறுதியளித்தார்.அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு வருமாறு:

உலகம் ஒரு பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றால் மனித குலமே கடும் சமூக, பொருளாதார, பண்பாட்டு, உளவியல் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாலும் மனிதகுலத்தின் சரிபாதிக்கும் மேற்பட்ட பெண்கள் மாபெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏற்கனவே கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்கள், இக்காலத்தில்இன்னும் கூடுதலாக பாதிப்புக்கு  உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடும் இப்பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த பெருந்தொற்றுக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கீழ்க்காணும் அம்சங்களை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வர தமிழ்நாடு பெண்கள் சார்பாக அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விரும்புகிறது. இந்த திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தாலுகா தோறும் சைபர் காவல் நிலையங்கள் 
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் தாலுகா தோறும்உருவாக்கப்படவேண்டும். பெண்களின் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றங்களில் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட, தகுந்த சட்ட வழிவகைகளை கையாள வேண்டும். தேவையெனில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில்  அதற்கென தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அத்தகைய ஆபாச படங்ளை, வீடியோக்களை உடனடியாக இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே  பெண்கள் முடங்கிக் கிடந்த சூழல்  குடும்ப வன்முறை பெருமளவு அதிகரிக்க களம்அமைத்துக் கொடுத்திருக்கிறது. எனவே குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் தொடர் விளம்பரங்களை அரசு, தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், பத்திரிகைகளிலும் வானொலியிலும் வெளியிட வேண்டும். 
குடும்ப வன்முறைகளைப் பற்றி புகார் அளிக்க தனி ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டு, அதற்கான தொடர்பு எண்  அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதால் தாலுகாக்கள் தோறும் கவுன்சிலிங் மையங்களை ஏற்படுத்தி அதற்கான தொடர்பு எண்களை அந்தந்த மட்டத்தில்  விளம்பரப்படுத்த வேண்டும்.

இன்டெர்நெட் வசதியுடன் இலவச கைக்கணினிகள் 
பெண்கள் தமக்கான செல்போனை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக தரவேண்டியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை தொலைக்காட்சி மூலம் ஏற்பாடு செய்வது அல்லது இன்டெர்நெட் வசதியோடு கூடிய கைக்கணினிகளை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக  அளிப்பது போன்ற நடவடிக்கையின் மூலம் பெண்களை தொடர்பு எல்லைக்கு வெளியில் நிறுத்தும் சூழலை மாற்ற முடியும்.பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் உள்ளாட்சிகள் தோறும் கிராம பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்குழுக்களை அமைத்திட வேண்டும்.

அனைத்து மகளிர்க்கும் இலவச நாப்கின் வழங்கப்பட வேண்டும். ரேசன் கடைகள் மூலமாகவும்,  இலவச நாப்கின் பெட்டிகள் தாலுகா தோறும் அமைக்கப்படுவதன் மூலமாகவும் இதனை உறுதி செய்ய வேண்டும். இலவச நாப்கின்கள் அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.  வீடுசார் குடும்பப் பணிகளை மட்டும் செய்யும்பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்கள் நலனுக்கான  தேர்தல் வாக்குறுதிகளை  விரைவில் நடைமுறைப்படுத்திட  வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் தமிழகத்தில்  அதிகரித்துள்ளன.கடந்த  ஒன்றரை ஆண்டு காலத்தில்  மட்டும் 3500 க்கும்மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளும் இல்லாமல் ஸ்மார்ட்போன் வசதியும் இல்லாமல்  கணிசமான குடும்பங்கள் இருக்கும் சூழலில் குழந்தை திருமணம், குழந்தை உழைப்பு அதிகரித்து வருவதை கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். இந்த பிரச்சனையில் தங்களது துறை கூடுதல் கவனத்தை செலுத்திட வேண்டும்.

சைல்டு லைன் சேவையை மாற்றக்கூடாது
மேலும் ஒன்றிய  அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சைல்டு லைன் சேவையை (1098) ஒன்றிய அரசு  உள்துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின்  கட்டுப்பாட்டிற்குள் போனால் காவல்துறையே மீண்டும் குழந்தைகள் குறித்தவழக்குகளை விசாரிக்கும்  நிலை ஏற்படும். எனவேமாநில அரசு தலையீடு செய்து இதை உள்துறை அமைச்சகத்தின் கீழ்  மாற்றக்கூடாது என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்த வேண்டும். 

இந்த பெருந்தொற்று ஊரடங்கினால் நீதிமன்றங்களில் வழக்குகள் மிகவும் தாமதிக்கப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை, அதிலும் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விரைந்து முடிக்க, Right to Speedy Trial (வழக்கை விரைந்து முடிப்பதற்கான அடிப்படை உரிமை)   என்பதன்படி அரசு நீதிமன்றத்தோடு கலந்து பேச வேண்டும்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ (POCSO) சட்டத்தின் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, பள்ளி நிர்வாகத்திற்கு பாலினநிகர்நிலை பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தொடர்விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

போக்சோ வழக்கை கையாள போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
Venkatachalam vs The Inspector of Police, புதுச்சத்திரம்  காவல்நிலையம் நாமக்கல் மாவட்டம். என்ற வழக்கில் 23 ஜூலை, 2021 அன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கைகையாளும் நீதிபதிகள் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தில் சிறப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளது. அதைப் போல போக்சோ வழக்குகளை கையாளும் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.வரதட்சணைக் கொடுமைகள், குற்றங்கள் மற்றும்  கொலைகள் இந்த ஊரடங்கில் பரவலாக அதிகரித்துள்ளன. எனவே உடனடியாக இதுபற்றிய புள்ளிவிவரங்களை அரசு வெளியிட்டு, அதன்மீது சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்டவர்கள் உட்பட  அனைத்து உதவித்தொகையினையும்  ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மகன் இருந்தால் உதவித்தொகை இல்லை என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

மாநில மகளிர் ஆணையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கானஆலோசனைகளை உருவாக்க பெண்கள் அமைப்புகள்,ஜனநாயக அமைப்புகள்,தன்னார்வ அமைப்புகளின் கூட்டத்தை நடத்துவது உதவிகரமாக இருக்கும்.எனவே அத்தகைய கூட்டுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுசெய்யவும். மேற்கண்ட கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;