articles

img

தோழர் மைதிலியின் பன்முகம்...

தோழர் மைதிலியின் மறைவு  சுரண்டலும் ஒடுக்குமுறையும் அற்ற சமூகத்தை உருவாக்கபோராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும். 1973இல் தமிழக ஜனநாயக மாதர் சங்கம் உருவாக்கப்பட்டபோது தோழர்கள் ஜானகியம்மா, பாப்பா உமாநாத் ஆகியோருடன் இணைந்து மைதிலி அந்த பணியை மேற்கொண்டார். 

ஜானகி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவுகளையும் தியாகத்தையும் செயல்பாடுகளையும் போற்றும் விதமாக கே.பி.ஜானகி அம்மா  பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதனை செயல்படுத்தும் பணியில் மாதர் இயக்கத்தை  ஈடுபடுத்தினார். மாதர் இயக்கத்தின் கவனத்தை  சில புதிய பிரச்சனைகளை நோக்கி திருப்பினார். பெண் சிசுக்கொலை அன்றையகாலகட்டத்தில் அதிகமாக நடைபெற்ற  மதுரையில் கருவேப்பிலை கிராமத்தில் விவசாய தொழிலாளி குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும்  பணியிலும்,விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குழந்தை தொழிலாளர்களுக்கான பகுதிநேர கல்வி அளிக்கும் பணியிலும்  அறக்கட்டளையையும், ஜனநாயக மாதர் சங்கத்தையும் செயல்படுத்தினார். 

அரசிடம், நிர்வாகத்திடம் கோரிக்கைகளை ஒருபுறம் வைத்து போராடிக் கொண்டே மறுபுறம் ஆக்கப்பூர்வமான சேவை சார்  பணிகளை  நடத்துவதில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை உணர்த்தினார்.பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களில் நீதிக்காக பெருமளவு களப்போராட்டங்களை ஜனநாயக மாதர் சங்கம்நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சட்ட, நீதிமன்ற தலையீடுகளிலும் இயக்கத்தின் பார்வையை திருப்பினார். மாதர் மாநிலமையத்தில் சட்ட உதவி மையம் உருவாகி செயல்படுவதற்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். குற்றம்சாட்டப்பட்டவர் பிணை கேட்டு தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட வரும் தலையீட்டு மனு கொடுக்க முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தினார். நடுத்தர வர்க்க அலுவலக பெண் ஊழியர்களை  சங்கத்திலும் மாதர் அமைப்பிலும் திரட்டும் பணியை இடைவிடாமல் செய்தார். அதேசமயம் அடிப்படை வர்க்கங்கள், ஒடுக்கப்பட்டசமூகப் பிரிவினரின் பிரச்சனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார். தலித் பெண்கள் பிரச்சனைகளுக்கான மண்டல வாரியான சிறப்பு மாநாடுகள்  நடத்தியதும் அதற்கு முன்னதாக கள ஆய்வுகளை உறுதிப்படுத்தியதுமான செயல்பாட்டில் மைதிலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

அதே போல் அரசு வன்முறையான வாச்சாத்தி பிரச்சனையில் உடனடியாக தோழர் பாப்பாவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் கிடைத்த விவரங்களை ஆவணப்படுத்தி எஸ். சி., எஸ். டி கமிஷனிடம் அளித்த அந்த  நடவடிக்கை, பின்னர் கமிஷன் அறிக்கையாக வந்து நீதிமன்ற வழக்காகவும் மாறியதில் முக்கிய பங்கு வகித்தது. சென்னையில் நகர்ப்புற மேம்பாடு என்கிற பெயரில் கடற்கரையிலிருந்து மீனவர்களையும் அவர்களது கட்டுமரம் உள்ளிட்ட பொருட்களையும் அகற்றுவதற்கான முயற்சியை எதிர்த்து போராடிய நடுக்குப்பம் மீனவர்கள் மீது எம். ஜி. ஆர்.ஆட்சியில் காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். கடும் கண்டன இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. அவற்றோடு சேர்த்து நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் ஒருஉண்மை அறியும் குழுவை ஏற்பாடு செய்து, ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற அதன் பரிந்துரைகளை பிரசுர வடிவிலும் கொண்டு வந்தார். ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இயக்கங்களுக்கு தொடர்ந்து அவர் வலியுறுத்தி வந்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னையில் குற்றவாளி கிடைக்கவில்லையென்றால் அவரது வீட்டில்இருக்கும் பெண்களை காவல் நிலையத்திற்கு இழுத்து வந்து அடைத்து வைத்து சித்ரவதை   செய்யும் போக்கு இருந்தது. மாநிலம் முழுவதும் அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த பின்னணியில், சென்னையில் மைதிலி தலைமையில் கமிஷனர் அலுவலகம் நோக்கிநடந்த எழுச்சியான ஊர்வலம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இளம்பெண்களின் வரதட்சணை கொலைகளை  ஸ்டவ் விபத்து என்றும் தற்கொலை என்றும் குடும்பங்களும் காவல்துறையும் மூடி மறைத்துக் கொண்டிருந்த சூழலில் தோழர்கள் பாப்பா, மைதிலியின் வழிகாட்டுதலில் நடந்த போராட்டங்களும் அதிகாரிகள் சந்திப்பும் விசாரணைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தன. துல்லியமான புள்ளி விவரங்களோடு தான் அதிகாரிகளை சந்திப்பார். ஒரு பிரச்சனையில் கோரிக்கைகளை உருவாக்க வேண்டுமென்றால் அது குறித்த விவரங்களை சேகரிப்பது, அதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகளை பெறுவது, கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம்  கலந்து பேசுவது உள்ளிட்ட பல்முனை அனுபவங்களின் அடிப்படையில் தான் கோரிக்கைகளை உருவாக்க வேண்டும் என்று அமைப்புக்கு வழிகாட்டினார். 

1980களில் கல்லூரிகளும்  பெரும்பாலான பெண்கள் அமைப்புகளும் ஜனநாயக மாதர் சங்கத்தை அரசியல் மாதர் சங்கம் எனக்கூறி அவர்களது நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் இருந்தனர். சர்வதேசிய, தேசிய அளவில் அரசியலுக்கும் பெண்கள் பிரச்சனைகளுக்கும் உள்ளதொடர்பை வெளிக்கொண்டுவந்த வீரியமான போராட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் அப்படிப்பட்ட ஒரு புரிதலை பல்வேறு பெண்கள் அமைப்புகளுக்கு உருவாக்கியதில் தோழர் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பெண்கள் இயக்க அனுபவங்களைப் படித்து அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஊழியர்களுக்கு அந்த படிப்பினைகளை பொதுமைப்படுத்தினார்.80-களின் இறுதியில் சமாதான கப்பலில் சென்னையிலிருந்து இலங்கைக்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் சென்ற பயணத்தில் மைதிலியோடு நானும் சாந்தியும்  இடம்பெற்றோம். மைதிலியின் முயற்சியால் பெண்ணிய எழுத்தாளர்கள், தமிழ் பேராசிரியர் நுஃமான் போன்றவர்களை சந்தித்து உரையாடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. கண்டி,அனுராதபுரா போன்ற இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்கபுத்தர் நினைவுச் சின்னங்களை பார்ப்பதற்கும் விவாதிப்பதற்கான சந்தர்ப்பமும் உருவானது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   ஊழியர்களுக்கும்  தொழிற்சங்க, மாதர், மாணவர் அரங்கங்கள் உட்பட பல்வேறு செயல்பாட்டாளர்களுக்கும் தத்துவார்த்த பயிற்சி அளித்ததில் மைதிலி சிறப்பான பங்கு வகித்தார். அவர் உருவாக்கிய பல்வேறு வகுப்பு குறிப்புகளில் பெண்ணுரிமை  ஒருமார்க்சிய பார்வை  என்பது முக்கியமானது. மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று  தோழர்களின் தத்துவார்த்த தரத்தை மேம்படுத்தும் பணியையும் செய்தார்.   இயக்கத்திற்கு தலைமை  தாங்குகிற வழிகாட்டுகிற தோழர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் தத்துவார்த்த மட்டம்  உயரும்வகையில்  படைப்புக்களை எளிமையாகவும், அதே நேரத்தில் தரத்தில் சமரசம் செய்யாமலும் மார்க்சிஸ்ட் இதழில் அளிக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதலை அவர்  அளித்தார். இதுபோன்று பல பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வுகளை முன் வைத்தார்.

ஒரு புறம் ரேடிக்கல் ரிவியூ, மெயின் ஸ்ட்ரீம், எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஏடுகளில் தத்துவார்த்த பின்புலத்தோடு கூடிய கட்டுரைகளையும், புலனாய்வு இதழியல்   உள்ளடங்கிய கட்டுரைகளையும்  கொடுத்துக்கொண்டே  மறுபுறம்  எளிய மக்கள் குறிப்பாக பெண்கள்  புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் சிறு சிறு பிரசுரங்கள் எழுதி வெளியிட்டார். அவரதுஅனைத்து எழுத்துக்கள், கட்டுரைகளிலும் அவரது கடும்முயற்சிகளும், ஆழமான  சிந்தனையும் வெளிப்படும்.அவரது எழுத்துக்கள்  துல்லியமாகவும்  ஆதாரப்பூர்வமாகவும்  மார்க்சியத் தர்க்கத்துடனும் இருக்கும்.சிறந்த களப் போராளியாகவும், மார்க்சிய கருத்தியல் போராளியாகவும்  செயல்படும் தோழர்கள் அரிது. மைதிலி இப்படிப்பட்ட அரிதான தோழர்களில் ஒருவராக நின்றார்.

செவ்வணக்கம் தோழர் மைதிலி.. உங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சோசலிசத்தின் மீதான பற்றுதலையும்  மனதில் ஏந்தி சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுப்போம்.

கட்டுரையாளர் : உ.வாசுகி, மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

 

;