articles

img

காணாமல் போனது 50 ஆயிரம் ஏக்கரா? 5 லட்சம் ஏக்கரா?

தமிழகம் பூகோள ரீதியாகவும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வடிவங்களாலும் ஒரு நாட்டிற்கு நிகரான மாநிலம் தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தாலும் ஒரு தனி நாட்டிற்கான அடையாள பெருமிதங்களோடும்,அதிலும் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் வளர்ந்த மாநிலமாகவும், இநதியாவுக்கு அதிகமான வரி வருவாயை அள்ளித்தரும்இரண்டாவது பெரிய மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.இருப்பினும் இங்கு நடைபெறும் லஞ்ச லாவண்யம்- கொலை, கொள்ளை, நில மோசடிகள் என இன்னும் பல முறைகேடுகள் தொடர்வதால் தமிழகத்தில் வேலை இழப்பும், வருமான இழப்பும் ஏற்பபட்டு மக்களின் அன்றாட வாழ்கையில் சொல்ல முடியாத துன்ப துயரத்திற்கு ஆளாக்கி விடுகிறது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள் பதுக்கப்படுவதும் மறைக்கப்படுவதுமான மோசடிகள் சமீப காலங்களாக அரங்கேறி வருவதைப் பார்க்க முடிகிறது.     

50ஆயிரம் ஏக்கர்எங்கே போனது?
குறிப்பாக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக மொத்தம் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கூறிக்கொண்டிருந்த தமிழக அரசு, சட்டசபை கூட்டத்தொடரில் அறநிலைத்துறை மானிய கோரிக்கையின்போது 4.75லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தது. அதன்படி பார்த்தால் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் தற்போது காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இதை மீட்டெடுக்க அரசு தற்போது வரை எந்த முயற்சியும் செய்யவில்லை. உண்மையில் தமிழகத்தில் அறநிலையத்துறையிடம் பத்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் இருந்துள்ளது என்பது உண்மை. ஆனால் 5.25 லட்சம் ஏக்கர் நிலம் தான் உள்ளது என்று அரசு இப்போது திட்டமிட்டு குறைத்து சொல்லியுள்ளது. அப்படியானால் மொத்தத்தில் 5 லட்சம் ஏக்கர் நிலம் பறிபோனது கணக்கில் வரவில்லை என்ற ஒரு புது பிரச்சனையும் இப்போதுஎழுந்துள்ளது. பல கோயில்களில் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் மாயமாகியுள்ளன. ஆவணங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை மீட்கவும், அதன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் நடிவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது.

இந்த ஐந்தே கால் லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்க வருவாய்த்துறை, நிலஅளவைத்துறை, பத்திரப்பதிவுத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மின்வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் செயல்பாடு நடந்து வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த துறையில் உள்ள ஒரு சில புல்லுருவிகளை களை எடுக்கவும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம் என்றும் அதிகாரிகள் தெரிவிப்பது எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், 30 சதவீத கோயில் நிலங்கள் கூட அரசால் இன்னும் அளவீடு செய்யப்படவில்லை. பதிவேடுகள் மோசமான நிலையில் உள்ளன. உண்மைக்கு மாறாக, ஆவணங்கள் தயாரித்து வைத்துள்ளனர். கோயில் பெயரில் உள்ள 18 வகையான அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா தர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வாய்ப்பையும் பயனாளிகள் அனுபவிக்க முடியாமல் மதவெறி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை கேட்ட அடிப்படையில் உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அதைமீறி அரசு அலுவலர்களோ, அமைச்சர்களோ பொதுமக்களுக்கு கோயில் புறம்போக்கு நிலங்களை பட்டாவாக வழங்குவதாக ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதப்படுவார்கள்.அதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகவும் அது கருதப்படும். கோயில் நிலங்களின் மீது பட்டா தரமுடியாது. கோயில் மூலவர் இளவலாக தான் கருதப்படுவார்; மைனர் சொத்துக்களின் மீது பட்டா தர இயலாது. இதுவரை மீட்கப்பட்ட சொத்துகளும் மக்களின் போராட்ட எழுச்சியால்தான் மீட்கப்பட்டன. அரசின் செயல்பாடு அப்புறம்தான். இதுதான் தமிழகத்தில் நடைபெறும் தொடர் சம்பவமாக உள்ளது. இந்த நிலை மாறப்போவது எப்போது? காணாமல் போன நிலங்களும் கணக்கில் வராத நிலங்களும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிமுக அரசின் ஏற்பாடு என்ன?

==ஆரூரான்==

;