articles

img

இருண்ட தமிழகமும் வெத்து விளம்பரமும்....

“வெற்றிநடை போடும் தமிழகமே ஏஏஏஏஏஏ..” எனும்படாடோபமான விளம்பரமும், பளீரென சிரிக்கும் பழனிசாமியுமாக காதை பிளக்கும் சத்தங்களுக்கும், அவ்வப்போது வருகை தந்து தனது பேச்சுக்கிடையே திருக்குறளையும், அவ்வையாரையும் குத்திகுதறும் மோடியின் திடீர் தமிழ் பாசத்திற்கும் இடையில் கதி கலங்கி நிற்கிறது நமது தமிழ்நாடு. ‘துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களையெல்லாம் மறந்து, “உதவ முடியாவிட்டாலும் கூடஉபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரும் உபகாரம்” எனச் சொல்லும் அளவிற்குமக்களை பாடாய் படுத்தி விட்டு தற்போது விளம்பர வெளிச்சத்தில் குதூகலித்துக் கிடக்கிறார்கள் திருவாளர் மோடியும், விவசாயி வேஷம் கட்டும் எடப்பாடியும். தற்போது இருவரும் ஜோடி சேர்ந்து கொண்டு, வாக்குறுதிகளை அள்ளி விட்டவாறே தமிழக மண்ணில் வாக்கு கேட்டு வலம் வருகிறார்கள். இந்த சாதனை நாயகர்களின் சாதனை (?) பட்டியலைசற்றே பார்ப்போமா..!

தமிழகத்தின் தற்போதைய கடன் ரூ.5,70,000 கோடி ரூபாய். இதற்கென கட்டுகிற வட்டித் தொகை மட்டுமே ரூ.32,000 கோடி ரூபாய். ஆக ஒவ்வொரு குடிமகனின் தலை மீதும்உள்ள கடன் எவ்வளவு தெரியுமா.? ரூ.73,000 மட்டுமே.  பொதுவாக கடன் வாங்கியவர்கள் தைரியமாக நடப்பதை விட பெரும்பாலும் தலைமறைவாகத்தான் ஒளிந்து நடக்க வேண்டியிருக்கும். நம்மையெல்லாம் பெரும் கடன்காரர்களாக மாற்றி ஒளிந்து ஓட வைத்திருப்பதால் “ஒளிந்து நடைபோடும் தமிழகமே” என்பதையும் இனி எடப்பாடி தனது விளம்பரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.அதிமுக ஆட்சிக்கு வருகிற போது டாஸ்மாக்வருவாய் ரூ.14,000 கோடி. தற்போதைய டாஸ்மாக் வருவாய்  ரூ.29,000 கோடி. தனதுஆட்சிக்காலத்தில் இருமடங்கு அளவு  டாஸ்மாக்வருவாயை உயர்த்திய சாதனையை செய்தஎடப்பாடி இனி “தள்ளாடி நடக்கும் தமிழகமே” எனும் விளம்பரத்தையும் சேர்த்து ஒளிபரப்பலாம்.

கொரோனா காலத்தில் சுகாதாரத் துறைக்குஇருமடங்கு தொகையை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு ஐந்துமடங்கு நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது. வேலைக்கும், வளர்ச்சிக்குமான நிதியை விடவும் சாலைக்கும், பாலத்திற்கும் மிகஅதிகமான நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாலோ என்னவோ, பளீரென சிரிக்கும் பழனிசாமி அவர்களுக்கு இனி “பாலம் பழனிச்சாமி” என பட்டமே கொடுக்கலாம்.பெருமுதலாளிகளிடம் வசூலிக்கும் சொத்துவரியையே முற்றாக ரத்து செய்ததோடல்லாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வசூலித்து வந்த கார்ப்பரேட் வரியை 30% லிருந்து 22% ஆக குறைத்து அவர்களுக்கான தலைமைச் சேவகனாகவே மாறிவிட்ட மோடி  இனிமேல் தன்னை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்என்பதற்கு பதிலாக கார்ப்பரேட் ஸ்வயம் சேவக் என பெருமையோடு அழைத்துக் கொள்ளலாம்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான வரிகளை ரூ.3.61 லட்சம்கோடி அளவிற்கு உயர்த்தி, பெட்ரோல் லிட்டர்ஒன்று ரூ.100/- சமையல் எரிவாயு ரூ.1000 என விரைவில் புதிய உச்சத்தை தொடுமளவிற்கு உயர்த்தி, மக்கள் பணத்தை வழிப்பறி செய்யும்மத்திய, மாநில அரசுகளை இனிமேல் தங்களை ஜேப்படி அரசுகள் என வெளிப்படையாகவே அழைத்துக் கொள்ளலாம்.

குப்புறத் தள்ளியதோடு நில்லாமல் குழியையும் பறித்த கதையாக மேலும் மேலும் தொடர்கிறது துயரங்களின் பட்டியல். தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது நிவாரணம் மற்றும் மீட்பிற்காக ரூ.15,000 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால் வெறும் ரூ.1680 கோடிமட்டுமே அளித்து கைவிரித்து விட்டார் மோடி. இதர புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட நிவாரணத்திற்காக ரூ.40,000 கோடியை கேட்டபோதுரூ.9,390 கோடி மட்டுமே தந்து டாடா காட்டிவிட்டார் மோடி. மத்திய அரசு தமிழகத்திற்குஇழைத்த இத்தகைய துரோகங்களையெல்லாம் மறைத்து விட்டு “மோடியே எங்கள்டாடி” என அன்பொழுக அவரை இப்போது அழைத்து வருகிறது ஈபிஎஸ் & ஓபிஎஸ் கோஷ்டி.

ஆனால், தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். டாடி என்றழைக்கும் மோடியையும், எடப்பாடியையும் ஒருசேர துடைத்து தூர எறிய காத்திருக்கிறார்கள் என்பதையே மே 2 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உரத்துசொல்லப் போகிறது.

கட்டுரையாளர் : ஆர்.பத்ரி - ஊட்டி 

;