articles

img

ஊழலில் திளைக்கும் குடிநீர் வடிகால் வாரியம்....

தமிழக மக்களுக்கு விரைவாக, பாதுகாக்கப்பட்ட, குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் கிடைத்திட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்துபிரித்து தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியம் 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்துகுக்கிராமங்கள், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் என மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான  குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டும்  புனரமைக்கப்பட்டும் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

526 குடிநீர் திட்டங்கள்
குடிநீர் வடிகால் வாரியமானது இந்திய அளவிலும்உலக அளவிலும் குடிநீர் வழங்கும் பணியில் யுனெஸ்கோவின் பாராட்டைப் பெற்று சான்றளிக்கப்பட்டுள்ளது. தற்போது வாரியத்தின் செயல்பாடுகள், அரசின் தவறான மக்கள் விரோத கொள்கை முடிவுகளால் சீரழிந்து வருகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த 12000 நிரந்தர ஊழியர்களை கொண்டிருந்த வாரியத்தில் தற்போது  சுமார் 3000 நிரந்தர ஊழியர்களே உள்ளனர். வாரியத்தால்  உருவாக்கி பராமரிக்கப்பட்ட 526 குடிநீர் திட்டங்களும் அனுபவமற்ற, தொழில்நுட்ப திறனற்ற  ஒப்பந்தகாரர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. சிறந்த நீர்பரிசோதனைக் கூடங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வெளியேற்றி முறையான நீர் தரப் பரிசோதனை செய்யப்படாமல் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் அதிகமாவதோடு மக்களின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகிறது. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட விலை மதிப்பற்ற உபகரணங்கள், குடிநீர் திட்டங்கள் அனைத்தும் பராமரிப்பின்றியும், தவறான கையாளுகையாலும் பழுதடைந்து கொண்டு வருகிறது.

ஒப்பந்த முறையில் தலைவிரித்தாடும் ஊழலும் முறைகேடுகளும்
வாரியத்தில் பணிநியமன முறை என்பது வாரியத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் என்பது சான்றளிக்கப்பட்ட நிலை ஆணையின் சட்ட ஷரத்தாகும். ஆனால் அதற்கு எதிராக ஒப்பந்த முறையில் சட்ட விரோதமாக பராமரிப்பு ஊழியர்கள் அத்துக்கூலியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஒப்பந்த முறையில் டெண்டர்எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த தொழிலாளர் ஒழிப்புமற்றும் முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுவும் மீறப்பட்டு தனிநபர்களுக்கு, அனுபவமற்றவர்களுக்கு, அரசியல் பிரமுகர்களுக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. இந்த டெண்டர்கள் மூலம் சுமார் 6000 பேருக்கான ஊதியம் மற்றும்இபிஎப் வகையில் சுமார் 10 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்களுக்கு வாரியம் பட்டுவாடா செய்கிறது. ஆனால் உண்மையில் 6000 பேர் நியமிக்கப்படுவதற்கு பதிலாக சுமார்25 சதவீதமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கான ஊதியம், இபிஎப் பணம் மாதம் ஒன்றுக்கு சுமார் 7.5 கோடிரூபாய். எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும் மாதா மாதம்ஊழியர்களை  நியமிக்காமல், நியமித்ததாக பொய்கணக்கு மூலம் சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. வாரியம் நியமிக்கக் கோரிய அளவில் ஊழியர்கள் களத்தில் உள்ளார்களா என்பதைஅதிகாரிகள் கண்காணிக்க மறுக்கிறார்கள். மாநிலம்முழுவதும் ஒரே சீராக இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டின் உச்சமாக உண்மையில் பணியில் உள்ள 25 சதவீத ஊழியர்களுக்கும்  வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதா மாதம் இபிஎப் பணம் குறைத்து கட்டப்படுகிறது. ஊதியம் வழங்குவதற்கான சம்பளப் பட்டியல்இல்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம்வங்கி மூலம் கொடுக்கப்படுவதைப் போல ஒப்பந்த முறையில் உள்ளவர்களுக்கும் வங்கி மூலம் சம்பளம்வழங்க வேண்டுமென்ற வாரிய உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை.

நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நிர்வாகச் சீர்கேடு
1980ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், குடிநீர் வடிகால் வாரியம் ஒரு தொழில் நிறுவனம் என்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொழிற்தகராறு சட்டம்பொருந்தும் என்றும் தீர்ப்பளித்தது. அதன் பின்னணியில் 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் மக்களுக்கு குடிநீர்வழங்கும் பராமரிப்பு ஊழியர்களான 600க்கும் மேற்பட்டதினக்கூலி ஊழியர்கள் சிஐடியு சங்கத்தின் 10 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக நிரந்தரப்படுத்தப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழகம் முழுவதும் 1996-1997ம் ஆண்டுகளில் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நிரந்தரத் தன்மையில் ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் சொற்ப ஊதியத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் வாரியம் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமித்தது. நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யக்கூடாது என்ற சட்ட விதிகளின்படி இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென சிஐடியு சங்கம்1998ம் ஆண்டு கீழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து 2000-மாவது ஆண்டில் தொழிற்தீர்ப்பாயம் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனை அமலாக்காமல் வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதிலும் வாரியம் தோல்வியுற்றது. மீண்டும் உயர்நீதிமன்ற பெஞ்ச்-ல் மேல்முறையீடு செய்து தோல்வியுற்றது. சுமார் 15 ஆண்டுகாலம் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக வேறுவழியின்றி 1000க்கும் மேற்பட்டவர்களை நீதிமன்ற  தீர்ப்பின்படி வாரியம் பணி நிரந்தரம் செய்தது. அவ்வாறு செய்தபோது நிரந்தரப்படுத்திய தேதியில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. அதற்கு மாறாக 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் காலமுறை ஊதியம் என தீர்ப்பில் உள்ளதாக உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கோரும் மனுதாக்கல் செய்யப்பட்டு, அதில் பணிநிரந்தரம் செய்த நாளில்இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதைஉயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 

அத்தீர்ப்பின்படி 1011 பேருக்கு பணிவரன்முறை செய்து வாரியத்தால் போடப்பட்ட உத்தரவில் ஒரு சிறு தவறு உள்ளதை சுட்டிக்காட்டி அதை வாரியம் சரி செய்ய மறுத்ததால் விளக்கம் கோரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியதை வாரியம் அமலாக்காமல், உயர்நீதிமன்றத்தில் சங்கத்திற்கு எதிராக, அப்பாவி ஊழியர்களை சஸ்பெண்டு செய்து அவர்களுக்கு எதிராக 5 வழக்குகள் நடத்தி அனைத்திலும் மண்ணைக் கவ்வியது. அந்த நிலையிலும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சிஐடியுவிற்கு எதிராக, சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்ட 4க்கும் மேற்பட்ட வழக்குகளில் தோல்வியுற்றது. இந்த வழக்குகளை தேவையின்றி மேல்முறையீடு செய்ததால் சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பொருளாதார ரீதியிலும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் 200க்கும் அதிகமான குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டு வறுமையில் அல்லாடுவதோடு, குழந்தைகளின்
கல்வியும் பாதியிலேயே நின்று விட்டது. மனஉளைச்சலில்மரணமடைந்த குடும்ப அங்கத்தினர்களும் உள்ளனர்.இதேபோன்று இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் பணிபுரிந்த 23 பேருக்கான வழக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 13 பேருக்கான வழக்கும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அமல்படுத்தாமல் இருந்து வருகிறது.

நிதி நிர்வாக சீர்கேடு
வாரியத்திற்கு நிதி வரவு என்பது திட்டச்  செயலாக்கத்தில் பெறப்படும் சென்டேஜ் மற்றும் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம் ஆகியவைகளாகும். உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கு 1000லிட்டருக்கு கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு 2018-ம் ஆண்டு வரை முறையே ரூ.3 , 4.50 என இருந்து வந்தது. இது நிர்வாக செலவினங்களுக்கு  போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டதால் ரூ.7 மற்றும் 9.50 என அரசு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த கட்டணங்களை மாதா மாதம் உள்ளாட்சி அமைப்புகள் வாரியத்திற்கு செலுத்தாமல் தற்போது வரை சுமார் ரூ.800 கோடி நிலுவை வைத்துள்ளன. இதன் விளைவாக ஓய்வு பெற்ற வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்கள் கடந்த 2018ம்ஆண்டு முதல் வழங்காமல் சுமார் ரூ.25 கோடி நிலுவைவைத்துள்ளது. இதனை அரசிடம் தெரிவித்து நிதி பெறுவதில் வாரிய நிர்வாகம் கவனம் செலுத்துவது இல்லை. மேலும் குடிநீர் உற்பத்தி செலவிற்கும் குடிநீர் விநியோக கட்டணத்திற்கும் உள்ள வித்தியாச தொகையினை ஒவ்வொரு ஆண்டும் அரசு வாரியத்திற்கு அளிக்க வேண்டும்.இதிலும் சுமார் ரூ.200 கோடி நிலுவையில் உள்ளது.

குடிநீர் வாரியத்திற்கும் உள்ளாட்சிக்கும் ஒருவரே அமைச்சர் என்பதால் குடிநீர் வாரியத்தை பற்றி எவ்விதஅக்கறையுமின்றி செயல்படுகிறார். இந்த நிதி நெருக்கடியின் காரணமாக மின்வாரியத்திற்கு ரூ.400 கோடி வரைகுடிநீர் வாரியம் நிலுவை வைத்துள்ளது. இதனால் புதியதிட்டங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதால் புதிய குடிநீர் திட்டங்கள் அமைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.மேற்கண்ட முறைகேடுகளைப் பற்றி பலமுறை வாரியத்திடம் சுட்டிக்காட்டியும் போராட்டம் மூலமாக அரசுக்கு  பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட போராட்டத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

கட்டுரையாளர் : மா.ஆத்மநாதன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), சென்னை

;