articles

img

விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் நீட்டிய நேசக்கரம்....

கொரோனா 2 வது பேரலையால் தமிழகத்தில் மே மாத மத்தியில் தினசரி பாதிப்பு 37 ஆயிரம்தொட்டது. தற்போது படிப்படியாக குறைந்து 8 ஆயிரம் ஆக உள்ளது. மாநிலத்தில் உச்சம் தொட்ட போது விருதுநகர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 1200 ஐ தொட்டது. தற்போது 100 என்ற அளவில்உள்ளது.கொரோனா தாக்கம் அதிகமடைந்த போது மாவட்டத்தில் உள்ள விருதுநகர், இராஜபாளையம், திருவில்லி புத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக் கோட்டை ஆகிய 6 நகரங்களை மையப்படுத்தி 6 கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

மருத்துவ ஆலோசனை, மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு உதவி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை சந்தித்து கொரோனா நோயாளிகள் குறித்த விபரம் அறிவது. இவ்வாறான பணிகளை உதவி மையங்கள் மேற்கொண்டது. இதில் விருதுநக ரில் தினந்தோறும் மருத்துவமனை பணியில் கட்சித் தோழர்கள் இருந்தனர்.2 வது அலையில் இரு மாதங்களில்மட்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள், ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நோயினால் பாதிக்கப்பட்டார்கள். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஆர்.சந்திரமோகன், விருதுநகரைச் சேர்ந்த தோழர்கள் பிச்சை -கனகா தம்பதியர் மற்றும் அ.மாரியப்பன், திருவில்லிபுத்தூர் கோட்டைப் பட்டியைச் சேர்ந்த ஆட்டோ முருகன் ஆகிய 5 தோழர்கள் உயிரிழந்தனர்.கட்சியின் தோழர்கள், ஆதரவாளர்களை பாதுகாப்பது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு சேவை செய்வதிலும் கொரோனா தடுப்பு உதவி  மையங்கள் தொடர்ந்து பணியாற்றின.மே தின கொடியேற்றத்துடன் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் 50 இடங்களில் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

மே 8 தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தலைவர் வி.பி.சிந்தன் நினைவுதினத்தில் சிஐடியு சார்பில் சிவகாசியில் மருத்துவ முகாம் நடந்தது. அதில் சித்தா, ஹோமியோ மற்றும் அலோபதி மருத்துவர்கள் பங்கேற்றனர்.வாலிபர் சங்கம், பத்திரிகையாளர் கள் சங்கம் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 52 பேர் இரத்த தானம் செய்தனர்.மே 30 சிஐடியு அமைப்பு தினத்தில் மாவட்டத்தில் உள்ள 6 அரசு, வட்டார  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 710 பேரிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழங்கள், சத்தான பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது. இதை மருத்துவர்கள் பெரிதும் பாராட்டினர்.இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பில் விருதுநகர், அருப்புக்கோட்டை, இராஜபாளையம், சிவகாசி ஆகிய  நகரங்களில்  உள்ள அரசு மருத்துவமனை களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கி தங்களின் நேசக்கரங்களை நீட்டினர்.

கொரோனா வார்டில் மாணவர்களின் அர்ப்பணிப்பு
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கடந்த 35 நாட்களாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் நோயாளிகளுக்கு உணவு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட மருத்துவச் சேவை செய்து வருகின்றனர்.மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மாடசாமி, 35  நாட்களும் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். இதரமாணவர்களான ஹரிராஜ், ஆனந்த், விஜயபாரதி, அருண் கார்த்திக், மாதவன், மணிபாரதி, தங்கநேதாஜி  ஆகியோர் சுழற்சி முறையில் கொரோனா வார்டில்  பணி செய்தனர்.மருத்துவர்களாலும், நோயாளிகளாலும் பெரிதும் பாராட்டும்படியாக இவர்களது சேவை சிறப்பானதாக இருந்தது.

பாதிப்பும் உதவிகளும்
கொரோனாவை கட்டுப்படுத்திட அரசு அறிவித்த பொது முடக்கத்தால் முறைசாரா தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 494பேர், மாற்றுத் திறனாளிகள் 308 பேர்,ஆதரவாளர்கள் 806 பேர் என மொத்தம்1678 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 150க்கும் மேலானமையங்களில் 40 ஆயிரம் பேருக்கு கபசுரகுடிநீரும், ஹோமியோ மருந்துகளும்  வழங்கப்பட்டன.திருவில்லிபுத்தூர் ஒன்றியம் மொட்டமலை அருகே எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பில் வசித்து வரும் பாசி, ஊசி விற்கும் பழங்குடி மக்கள் 60 குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி, பழங்கள், மளிகை என ரூ.30 ஆயிரம் பெறுமான பொருட்கள்  தமுஎகச மற்றும் பகிர்வு அறக் கட்டளை சார்பில் வழங்கப்பட்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது. சரிவர பாதை வசதி இல்லாத இந்தகுடியிருப்புக்கு  தெரு விளக்கு வசதி இல்லை. சாதாரண குடில்களே இவர்களது வீடுகள்.  கோவில் திருவிழாக் களில் பாசி, ஊசி, கருகமணி விற்பனை செய்வதே இவர்களின் தொழில். திருவிழாக்கள் இல்லாததால் கடுமையான வறுமையின் பிடியில் இம்மக்கள் சிக்கியுள்ளனர்.

இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் நகரங்களின் சாலையோரங் களில் வசித்து வந்த இவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியிருக்க பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இவர்களுக்கு வீடு வேண்டும். தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டும். அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். துன்பத்தில் துயரப்படும் மக்களுக்கு சிறிதளவு செய்யும் உதவி கூட பெரிதாக மதிக்கப்படுகிறது. வீட்டில் இருங்கள், வெளியில் வராதீர்கள் என்ற அறிவிப்புக்கு அடங்கி பலரும் வீட்டினுள் முடங்கிக் கிடந்த போது இரவு, பகல்பாராது மருத்துவமனையில் முன் களப்பணியாளர்களாய் மாணவர்கள், இரத்ததானம் செய்யும் இளைஞர்கள், நோயாளிகளுக்கு உதவி செய்த தொழிலாளர்கள், மருத்துவமனைகளுக்கு பொருள் உதவி செய்த இன்சூரன்ஸ் ஊழியர்கள், நலிவுற்று கிடப்போருக்கு வலியச் சென்று உதவிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் என  மேலும் மேலும் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனாவை வெல்வோம். கொடிய வறுமை நிலையிலிருக்கும் மக்களைக் காப்போம்.

கட்டுரையாளர் :  கே.அர்ஜூனன்,சிபிஐ(எம்), விருதுநகர் மாவட்டச் செயலாளர்

;