articles

img

நாய்களின் பிடியில் தமிழக நகரங்கள்.... எடப்பாடி அரசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் என்ன தொடர்பு?

மன்னார்குடி 26-வது வார்டுதெருக்களில்  வீடுவீடாய்  சைக்கிளில்  பேப்பர் போட்டு கொண்டே  பொறியியல் படிக்கும்  அந்த இளைஞனை  நாய்கள் துரத்தியதால்  தடுமாறி  கீழே சரிந்து  விழுந்தான்.  தினசரி பேப்பர் போட்டு சம்பாதித்து படிப்பது  பாராட்டப்பட வேண்டியது என்றாலும்  டிஜிட்டல் சக்திமான் திருவாளர் மோடிஜி - எடப்பாடியார்  ஆட்சியில், இந்திய  குடும்பங்களின்  வறுமை  விஸ்வரூபம்  எடுத்து வருகிறது என்பதும் இதற்குள் இருக்கும்   உண்மையாகும். 

அண்ணாமலை நாதன் சன்னதி தெருவில் அதிகாலை  வெண்பனி  மூட்டத்தின்  நடுவே  மொபட்டில் வந்தார்ஒருவர். பனிக்குல்லாய், முகக்கவசம்  சகிதம்  வந்ததால்  நாய்களுக்கு  அவர் வேற்றுக்கிரகவாசி  போல    தெரிந்ததோஎன்னவோ இரண்டு நாய்கள் அவரைதுரத்தின.   பயத்தில் படுவேகத்தில்   ஓட்டி தப்பித்துக் கொண்டார்.  இப்படி ஏராளமான  காட்சிகளை எல்லாத் தெருக்களிலும் மன்னார்குடி நகரம் தினம் தினம் கண்டு கொண்டிருக்கிறது.முன்பெல்லாம்  கைவிடப்பட்ட  பசுமாடுகள்  வீதிகளில் ஆங்காங்கே நின்று கொண்டோ,  படுத்துக்கொண்டோ  அசைபோட்டுக் கொண்டிருக்கும்.  இப்போது    நாய்களின்   எண்ணிக்கை  பல்கிப்பெருகி  திருவாரூர் மாவட்டத்திலேயே  நாய்களின் நகரமாகவே   மன்னார்குடி  மாறி இருக்கிறது.  தனியார் மருத்துவமனை  ஊழியர் ஒருவர்  சமீபகாலமாக  நாய் கடித்து டெட்டனஸ் டெக்ஸ்டாய்ட்,  ஆன்ட்டி ரேபீஸ் வாக்சின்  போட்டுக் கொள்பவர்களும் அதிகம்  என்று கூறினார். காயத்தின் தன்மை,  கடித்த இடத்தைப் பொறுத்து  வாக்சின்    4 அல்லது 5    தடவை கட்டாயம்  போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால்  வாக்சின்  போட்டுக் கொள்வதை பாதியிலே நிறுத்திக்கொள்பவர்களில் ஆண்டிற்கு சராசரியாக 20 பேர் தமிழகத்தில்  மரணம்  அடைந்து  வருவதாக  தகவல்கள் கூறுகின்றன.  இவர்களை தவிர   மஞ்சளும் சுண்ணாம்பும்   தடவிக் கொண்டு    நாய்க் கடி என்னை  ஒன்றும் செய்யாதுஎன்று கூறிக்கொண்டே தெம்பாய்  திரியும்  ஆட்களும் உண்டு. 

ரேபீஸ் மரணங்கள் 
ஆண்டிற்கு 20,800 இந்தியர்கள்  (மக்கள் சீனத்தின் ரேபீஸ் மரணங்கள் 2019-இல் வெறும் 276 மட்டுமே-ஆதாரம்:ஸ்டாடிஸ்டா.காம்) ஆண்டுதோறும் ரேபீஸ் நோய் கண்டு மரணம்அடைகின்றனர்.  இதில்  97 சதவீதம்
வெறிநாய் கடித்து ஏற்படுகிறது.  பெரும்பாலும்   60 சதவீதம்   அடித்தட்டில்உள்ள   ஏழைநடுத்தர  குடும்பங்களில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களே  தெருவில் திரியும் நாய் கடிக்கு பலியாகின்றனர். வெறிநாய் கடித்து   ஏற்படும்மரணம் குடும்பத்தாரை  மட்டுமல்ல பார்க்கும் அனைவரையும் பதற வைக்கும்.14 வயதே  நிரம்பிய  பட்டுக்கோட்டை  அரசு ஊழியர் ஒருவரின் மகனுக்கு வலிப்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பையனிடம் எப்போதாவது  நாய் கடித்ததா  என்று கேட்டபோதுதான்   நாய் கடித்த விபரம் பெற்றோர்களுக்கே தெரிய வந்தது.  தஞ்சை மருத்துவமனையில் இவ்வகை ரேபீஸ் முற்றிய நோயாளிகளுக்கென இருந்த வலை அறையில் அடைக்கப்பட்டபோது அந்த பையன் தனது அப்பா  அம்மாவிடம்  கெஞ்சினான். அப்பா என்னை நம் வீட்டின் அறையிலே அடைத்து விடுங்கள். இங்கே என்னை விட்டுவிட்டுசெல்லாதீர்கள்  என்றபோது  ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோர்கள் எப்படி கதறியிருப்பார்கள்? கூடவந்தவர்களும்  கலங்கினர். இதுதான்  வெறிநாய் கடியால் ஏற்படும் 100 சத  கொடூர  மரணங்களின் கோரம். இதைத் தவிர்க்கவே முடியாதா? இதை கட்டுப்படுத்தவே முடியாதா ? இதுதான்இன்று நம் முன்னே உள்ள கேள்விகள்.சில வீடுகளில்   நோய் தடுப்பு ஊசி போட்டு பாதுகாப்பாக  நாய் வளர்ப்பார்கள். இவை 20 சதமானம் மட்டுமே. அரைஎஜமானர்களாகவோ அல்லது  தெருக்களில் சுற்றிக்கொண்டே இயல்பாக தெரியும் 80 சதவீத நாய்கள்தான் ரேபீஸ்தொற்றும் வாய்ப்புள்ள   அபாயகர மான நாய்களாகும்.  இந்த  நாய்களைப்பிடிப்பதற்கென பயிற்சிபெற்ற  தனியார்டீம்கள்  மாவட்டங்களில்   தொழில்முறையில் உள்ளன.    அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடைத்துறை உதவிஇயக்குனர் அல்லது இணை இயக்குனர் மூலமாக மருத்துவர் குழு நியமிக்கப்பட்டு நகராட்சிகள்  பிடித்து வைத்திருக்கும் நாய்களுக்கு   கருத்தடைமற்றும்  ரேபீஸ் எதிர்ப்பு வாக்சின் போட வேண்டும். 

எது பிரச்சனை?
நாய்கள் பிடி  கூலி  மற்றும்  கருத்தடை ஊசி  ஆன்ட்டி ரேபீஸ் வாக்கினுக்கான தொகையை உட்பட அந்தந்த  நகராட்சிகள்,  பேரூராட்சிகள் அந்த ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்கவேண்டும். இதுதான் பெரும்பாலும்  நடைமுறை.தெரு நாய்கள் முற்றாக  ஒழிக்கப்படும்  காலம் வரை  ஒவ்வொரு ஆண்டுகளின் பரிசீலனை ஆய்வுகளோடு தொடர்ச்சியாக நடைபெறவேண்டிய முக்கியபணி.

ஆனால் பிரச்சனை எங்கிருக்கிறது என்று  ஆராய்ந்தால். சமூக முக்கியத்துவம் கொண்ட  இப்பணிக்கு ஒவ்வொருநிதியாண்டும் உள்ளூர் மோடியின் அரசும் அவரது கைப்பாவையான எடப்பாடி அரசும்  நிர்வாகங்களுக்கு போதுமான நிதியை  ஒதுக்குவதில்லை. இதுதான் பிரச்சனை. உதாரணமாக  160 ஆண்டுகள் பழமையுள்ள நகராட்சியான  மன்னார்குடியில் நிதி பற்றாக்குறையால்  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகநாய் இனப்பெருக்க கட்டுப்பாடுசெய்யவில்லை என கூறப்படுகிறது.எனவே நாய்ப்பண்ணைகள் மன்னையில் ஆட்சி செலுத்துகின்றன.கிட்டத்தட்ட எல்லா நகராட்சிகள்  பேரூ ராட்சிகளும்  இந்த லட்சணத்தில்தான்  இயங்கிக்கொண்டிருக்கின்றன. 

லாப வேட்டை பணிகள் முன்னேமுன்னுரிமை பணிகள் பின்னே 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்சமூக முன்னுரிமை திட்டப்பணிகளை விட  லாப வேட்டை பணிகளுக்கே    முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.   தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தவறினால் தொடர் உயிழப்புகளை ஏற்படுத்தும். அது பொது சுகாதாரத்துறையின் தோல்வி என்பதோடு   நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதை  அதிமுக   ஆட்சியினரும்  கண்டுகொள்வதில்லை. அவர்களது எஜமானர்களான   காவியிஸ்ட் பிஜேபியினரும் அவர்களது மைக்ரோ-மேக்ரோ பொருளியல்  மேதாவிகளும்   கண்டுகொள்வதில்லை. 

ரேபீஸ் தடுப்பு வாக்சின் மற்றும்ரேபீஸ்  எதிர்ப்புரத ஊசி விலங்கின இனப்பெருக்கத்தடை  மற்றும்  செலவினங்களுக்காக  ஆண்டுதோறும் தமிழக அரசு சுமார் ரூ.432.5 கோடி ( 2012ஆம் ஆண்டு விலைவாசி - ப்ளாஸ் மெடிசின் ஜேர்னல் 27.2.2014)செலவிடுகிறது. இது தொடர்ச்சியானது மட்டுமல்ல அதிகரிக்கும் செலவுமாகும்.   நாய்களின் இனப்பெருக்க காலம் 60 நாட்கள்மட்டுமே.  தல நிர்வாகங்கள் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள்  விலங்கினஇனப்பெருக்கத் தடை செய்யத்தவ றினால் நாய்களின் இனப்பெருக்கம்  முறையே 5 மற்றும்  12   மடங்குகள் அதிகரிக்கும் என்று  கால்நடை நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவு  ரேபீஸ்மரணங்களோடு வாக்சின் செலவையும்  அதிகரிக்கும்.  

மாபெரும் மக்கள் விரோதம்
2008- வரை    நமது பொதுத்துறை நிறுவனங்களான குன்னூர்  இந்திய பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா,    சென்னைபிசிஜி லேபரட்டரி,  இமாச்சலப் பிரதேசம்கசவுலியில் உள்ள சென்ட்ரல்  ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று நிறுவனங்களும் வாக்சின் உற்பத்தியில்  பெரும் பங்கு வகித்தன. 2008-ஆம் ஆண்டில் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ்,   சர்வதேச  நிர்பந்தங் களுக்கு அடிபணிந்து  1900 ஆம் ஆண்டுகளிலிருந்து கோடிக்கணக்கான இந்தியகுழந்தைகளை கொள்ளை நோய்களி லிருந்து காப்பாற்றிய, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிறுவனங்களின் வாக்சின் உற்பத்தியை    நிறுத்தினார்.  அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவில் கடுமையான வாக்சின் தட்டுப்பாடு மட்டுமல்ல, தனியார் வாக்சின் விலைகளும் கொள்ளையும் பன்மடங்கு அதிகரித்தன. 2008-லிருந்து  கோவிட் 19 தடுப்பு வாக்சின் கொள்முதல் வரை இந்திய பன்னாட்டு வாக்சின்  கார்ப்பரேட்டுகளுக்கு பலலட்சம் கோடி இந்திய பணம்  செல்வதற்கு  மருத்துவர்அன்புமணி ராமதாஸ்  2008-இல் செய்தகைங்கர்யம்தான் முக்கிய காரண
மாகும். 

20.9.2020இல்  மத்திய சுகாதாரத்துறையின் தேசிய ரேபீஸ் கட்டுப்பாட்டுத் திட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட  ஆண்டுகளுக்குள் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.  இதற்குத் தேவையான நிதியை தொடர்ந்து ஒவ்வொரு நிதியாண்டும் மாநிலங்களுக்கு ஒதுக்கிட வேண்டும். ரேபீஸ் நோய் மற்றும் பெருந்தொற்று  உள்ளிட்ட  விழிப்புணர்வை பள்ளிப்பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.   இதற்கான திட்டத்தை  பொது சுகாதாரத்துறை மற்றும் தல நிர்வாகங்கள்மூலம் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.தெரு நாய் பெருக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் இலக்கோடு  கட்டுப்படுத்தினால் மட்டுமே கொடூரமான ரேபீஸ்  மரணங்களையும் தனியார் வாக்சின் கொள்முதல் செலவுகளையும் தடுக்க முடியும்.  இதற்கு மத்திய, மாநில ஆட்சியாளர்கள்   நடவடிக்கை எடுப்பார்களா? இந்திய வாழ்வியலின்  அனைத்து தளங்களிலும் நிலவும் மக்களின் சோகங்களுக்கும் இழப்புகளுக்கும்  எப்போது முடிவு கட்டுவது?மோடியின் ஆட்சியையும்  எடப்பாடி யார் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமே அவைகளை சாத்தியமாக்கும்.

கட்டுரையாளர் ; நீடா சுப்பையா

;