articles

img

செக்கிழுத்த செம்மல் வஉசியும் தில்லையாடி வேதியம் பிள்ளையும்.....

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராடி சிறை சென்று வஉசி போன்று சிறையில் கடுமையான கொடுமைகளை அனுபவித்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இருந்தாலும்  அவர் போன்று சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் வெகுசிலரே இருக்க முடியும். வஉசிக்காகவே தண்டனையின் வடிவங்களை விதவிதமாக வெள்ளையர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.        

 பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக பணியாற்றிய வஉசி தனது சொத்துக்களை எல்லாம் விற்று பிரிட்டிஷாருக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனமான சுதேசி நீராவிக்கப்பல் நிறுவனத்தை தொடங்கி  தூத்துக்குடிக்கும் - இலங்கையின் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை மேற்க்கொண்டதால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு ஆளாகி, வழக்கறிஞர் பணிக்கும் ஆங்கிலேயர்கள் தடைவிதித்ததால் கொடுமையான வறுமைக்கு ஆளானார். 

வறுமையில் வாடிய வஉசிக்கு உதவிய வேதியம் பிள்ளை
தமிழ்ப் புலவர்,பேச்சாளர்,எழுத்தாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர் என்ற பன்முகத் திறமை கொண்ட வஉசி வறுமையில் வாடிய போது தனது ஏழ்மை நிலையை தனது நண்பரும், தமிழ்ப் புலவருமான தென்னாப்பிரிக்காவில் வேலை செய்து வந்த தில்லையாடியை சேர்ந்த வேதியம்பிள்ளைக்கு நேரிசை வெண்பா மூலம் 4 வரி கவிதையின் வாயிலாக கடிதம் எழுதினார். அதையடுத்து வஉசிக்கு உதவி செய்த வேதியம் பிள்ளை மாதந்தோறும் 50 ரூபாயை தவறாமல் அனுப்பி வைத்து வஉசியை பாதுகாத்திருக்கிறார். அந்த நன்றியை மறவாததால் தான் வஉசி தனது மகளுக்கு  வேதவள்ளி என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

தில்லையாடி வந்த வஉசி
1924  முதல் 1932 வரை 8 ஆண்டுகள்  கோவில்பட்டியில் வஉசி வசித்தார். அப்போது, தென்னாப்பிரிக்காவில் வசித்த வேதியம் பிள்ளை அங்கிருந்த தனது சொத்துக்களை விற்று விட்டு தனது சொந்த ஊரான தில்லையாடிக்கே வந்துவிட்டதை அறிந்தார் வஉசி. தனக்கு உதவி செய்து வருகிறவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக 1926 ல் தில்லையாடி வந்தார். ஊர்த்தெரு என்று இன்றும் அழைக்கப்படுகிற தற்போது கிராம பொதுநலச்சங்க திருமண மண்டபம் உள்ள இடத்தில் இருந்த வேதியம் பிள்ளையின் வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்தார். அதோடு இருவரும் தமிழ்மீது பற்றுக்கொண்டவர்கள் என்பதால் தமிழ் இலக்கியங்களை பற்றியே கலந்துரையாடியதாகப் பதிவுகள் உள்ளன.        

மதிய உணவு திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த பள்ளி

வேதியம் பிள்ளை தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த போதே 1915இல் தில்லையாடியில்  பெண்களுக்கும் கல்வி உரிமை இருக்கிறது என்ற உயர்ந்த எண்ணத்தோடு உருவாக்கிய சுதர்ம பாலிகா பாடசாலை  என்றழைக்கப்பட்ட துவக்கப்பள்ளிக்கு(தற்போது அதே பெயரில் தில்லையாடி சவுக்கடித்தெருவில் 106 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி இயங்குகிறது) வஉசியை அழைத்துச்சென்று காண்பித்துள்ளார்.அங்கு மாணவிகள் மதிய வேளையில் உணவு உண்பதை கண்ட வஉசி “ பெண் பிள்ளைகளெல்லாம் என்ன இங்கு அமர்ந்து சாப்பிடுகிறார்களே?  “ என்று கேட்டிருக்கிறார் அதற்கு வேதியம் பிள்ளை பள்ளியை உருவாக்கிய பிறகு இரண்டு,மூன்று மாணவிகளே ஆரம்பத்தில் வந்தனர்.மதிய வேளையில் உணவும் ஏற்பாடு செய்து தந்ததால் தற்போது 30 திலிருந்து 35 மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர் என்று பெருமையுடன் கூறி இருக்கிறார். இந்த செய்தியை கோவில்பட்டியில்  வசித்த போது விருதுநகரிலிருந்து  அடிக்கடி  தனது வீட்டிற்கு வந்து செல்லும் இளைஞரான காமராஜரிடம் வஉசி கூறினார் என்றும் அதை மனதில் வைத்திருந்தே  தான்முதல்வரான பிறகு  காமராஜர் மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.வஉசிக்கு இறுதி வரை மாதந்தோறும் உதவிசெய்து தமிழக பள்ளிகளில் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வருவதற்கு உந்துதலாயிருந்த இந்த வேதியம் பிள்ளை தான் காந்தியடிகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தந்திருக்கிறார்.

காந்திக்கு தமிழ் கற்பித்தவர்
19 ஆம் நூற்றாண்டின்  இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்திலும் தில்லையாடி, காட்டுச்சேரி,பொறையார், தரங்கம்பாடி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு தங்கச் சுரங்கத்திலும், தோட்டங்களிலும் வேலைகள் செய்வதற்காக சென்றவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேய அரசின் நிறவெறிக்கு எதிராகவும், திருமணச் சட்டத்திற்கு எதிராகவும், தலவரிச்சட்டத்திற்கு எதிராக நடந்த  போராட்டங்களில் முன்னின்று கலந்து கொண்டனர். அதோடு, காந்தியடிகள் தலைமையேற்று போராட்டங்களை நடத்திய போது அவருக்கு உறுதுணையாகவும்  இருந்திருக்கின்றனர். அச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில்  தங்கச் சுரங்கம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி பிறகு சொந்தமாக செங்கல் சூளைக்கு உரிமையாளராக மாறி பெரும் தொழிலதிபராக இருந்தவர் தான் வேதியம் பிள்ளை. (பிறப்பு -09/12/1877 ; இறப்பு 15/09/1949) தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய போது காந்தியுடன் நெருங்கி பழகியதோடு திருக்குறளின் பெருமையை  முதன்முதலாக அவருக்குக் கூறியதும் , தமிழில் எழுதும் அளவிற்கு  காந்திக்கு தமிழை கற்றுத்தந்தவரும் இந்த வேதியம் பிள்ளை தான். சுதேசமித்ரன் இதழின் பத்திரிகையாளராக “மறைக்கிழான்” என்ற புனைப்பெயரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து எழுதியும்  இருக்கிறார்.

செக்கிழுத்த செம்மலுக்கு உதவிக்கரம் நீட்டி அவரின் குடும்பத்தை வறுமையிலிருந்து ஓரளவிற்கு மீட்டதோடு, பெண்களுக்கு கல்வியறிவை  அளிப்பதில் உறுதியாக நின்ற தில்லையாடி வேதியம் பிள்ளையையும்  வஉசியின் 150 ஆவது பிறந்தநாளில் நினைவில் கொள்வோம்.!

செ.ஜான்சன், தரங்கம்பாடி,

ஆதாரத் தகவல்கள் ;- அனிதா கிருஷ்ணமூர்த்தி,எழுதிய நூல், ஜெகதீசன் எழுதிய தில்லையாடி வரலாறு

;