articles

img

காலாவதியான உத்தரவுகளால் காவுக்குள்ளாகும் மின் ஊழியர்கள்....

 கொரோனா எனும் கொடும் நோய் தொற்றின்இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. மே 8 ஆம் தேதி தமிழக முதல்வர், அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகளைக் கொண்டு ஆலோசனை நடத்தினார். பின்பு முதல்வர் பேசுகையில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கொண்ட கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், “இந்த கொரோனா பெருந்தொற்றின் சங்கிலியை உடைத்தாக வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்ளவேண்டும். இதில் யார் பெரியவர், யார் உத்தரவுக்கு யார் பணிசெய்வது என்ற ஈகோ இல்லாமல் பணியாற்றிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இது மிக முக்கியமானது. 

மின்வாரியத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு மின்வாரியத்தில் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்தே அதிகாரிகள் உள்ளனர். மே 10 முதல் மே 24 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய ஊரடங்கால் தமிழகத்தில் நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் தினசரி தொற்று குறையவில்லை. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 24 முதல் மே 31 வரை தளர்வில்லா ஊரடங்கை அரசு பிறப்பித்தது. அதன் பின் தமிழகத்தில் கொரோனா தொற்று 10 மாவட்டங்களில் இருந்து நெல்லை தவிர்த்து 6 மாவட்டமாக குறைந்தது.

மீண்டும் ஜூன் 1 முதல் ஜூன் 7 வரை தளர்வில்லா ஊரடங்கு;2வது முறையாக ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கும்அரசு அறிவித்தது. மே 10 ஆம் தேதி முதல் தளர்வில்லா ஊரடங்கு மே 24 வரை அறிவித்தது. அரசு மற்றும் அரசாங்கபணியாளர்களுக்கு பணி செய்திட வழிகாட்டல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவுகளின் அடிப்படையில் மின்சாரத் துறையில் மே 10 முதல் 24 வரை 80 சதவீத பணியாளர்கள் பணி செய்திட அறிவுறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊழியர்கள் பணியாற்றினர். அரசு அறிவித்த தளர்வில்லா ஊரடங்கு மே 24 - 31 மற்றும் ஜூன் 1 முதல் ஜூன் 7 வரை உள்ள தமிழக அரசின் இரண்டு உத்தரவுகளுக்கும் தனியாக மின்வாரியத்தில் காலதாமதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் நெல்லை மண்டல மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 11 சங்கங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்கப்பட்டு, தமிழக அரசின் உத்தரவை அமலாக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இன்று வரை நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மண்டல மின் விநியோகத்திட்டத்தில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிக்கு வருகின்றனர். இதனால் அரசு வழிகாட்டல் படி, தனிமனித இடைவெளி இன்றி பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கொரோனா தொற்று பீதியுடனே பணி செய்து வருகின்றனர். மேலும் இன்று வரை பிரிவு அலுவலக கடைநிலை ஊழியர்களுக்கு மாஸ்க், சானிடைசர், கையுறை போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கவில்லை. உரிய வழிகாட்டலும் இல்லை.

26 ஊழியர்கள் பலியான துயரம்

இந்நிலையில், நெல்லை மண்டல மின் திட்டத்தில் மட்டும் கொரோனா 2 ஆம் அலையில் மின் ஊழியர்கள் 26 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். நெல்லை மின் திட்டத்தில், 1.பகவதி - (சிறப்பு நிலை முகவர் - பணங்குடி விநியோக பிரிவு); 2. சண்முகவேல்  (முகவர் - நவலடி துணை மின்நிலையம்); 3. எட்வர்ட் - மின்பாதை ஆய்வாளர் - (கீழ்பாவூர் துணை மின்நிலையம்); 4. வின்சென்ட் - (டிரைவர் )5. அசோகன் - (கணக்கீட்டு ஆய்வாளர், நாங்குநேரிடவுண்); 6. மாணிக்கம் (கம்பியாளர் - தாழையூத்து டவுண் II); 7. மாடசாமி (கணக்கீட்டு ஆய்வாளர் - தச்சநல்லூர் விநியோக பிரிவு); 

தூத்துக்குடி மின் திட்ட கிளையில், 

8. கிருஷ்ணன் (மின்பாதை ஆய்வாளர் - பசுவந்தனை); 9. தேவேந்திரன் (மின்பாதை ஆய்வாளர் - துணை மின்நிலையம், கோவில்பட்டி); 10. ராஜேஸ்வரி (கணக்கு மேற்பார்வை அதிகாரி - தூத்துக்குடி கிராமபுரம்); 11. சுப்புராஜ் (இளநிலை பொறியாளர் - துணை மின்நிலையம், விளாத்திகுளம்);

கன்னியாகுமரி மின்விநியோக வட்டத்தில், 

12. ஜஸ்டின் (வருவாய் மேற்பார்வையாளர் - மூலச்சல் விநியோகப் பிரிவு); 13. பத்மநாபன் - (கணக்கீட்டு ஆய்வாளர் - சுசீந்திரம் விநியோகப்பிரிவு); 14. வேல்முருகன் (கணக்கீட்டு ஆய்வாளர் - கொட்டாரம் விநியோகப் பிரிவு); 15. மேன்மொழி 
(செயற்பொறியாளர் பொது - நாகர்கோவில்); 

விருதுநகர் மின் விநியோக கிளையில்,

16. குருகளஞ்சியம் (கணக்கீட்டு ஆய்வாளர் - சத்திரப்பட்டி விநியோக பிரிவு); 17. தங்க மாரியப்பன் (கணக்கீட்டு ஆய்வாளர் - சேத்தூர் விநியோகப் பிரிவு); 18. ராஜமருதேந்திரன் (ஆக்க முகவர் - பாறைப்பட்டி துணை மின் நிலையம்); 19. ராஜ்குமார் (வணிக ஆய்வாளர் - படிக்காசு வைத்தான்பட்டி விநியோகப் பிரிவு); 20. முருகேசன் (வணிக ஆய்வாளர் - திருத்தங்கல் AD); 21. வேல்முருகன் (மின்பாதை ஆய்வாளர் - அருப்புக்கோட்டை விநியோகப் பிரிவு); 22. மாரியப்பன் (மின்பாதை ஆய்வாளர் - கீழராஜகுல ராமன் விநியோகப் பிரிவு); 23. தங்கராஜ் (கம்பியாளர் -  துலுக்கப்பட்டி விநியோகப்பிரிவு); 24. அனிதா (உதவி நிர்வாக அலுவலர் - சிவகாசி EE); 25. பழனிசாமி (உதவிமின்பொறியாளர் - பாறைபட்டி விநியோகப் பிரிவு); 26. எம். மதுரைவீரன்  (மின்பாதை ஆய்வாளர் - சேத்தூர்) என ஜூன் 4ஆம் தேதி வரை மரணமடைந்தோர் 26 ஊழியர்கள்.

தமிழகத்தில் பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், களப்பணி ஊழியர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  மின் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் மரணமடைந்துள்ளனர். கொரோனா
நோய் தொற்று பாதிக்கப்பட்டு பல நூறு பேர் உள்ளனர். சிலர் மீண்டு உள்ளனர். சிகிச்சையில் பலர் உள்ளனர்.எனவே முதல்வர் கூறியது போல், கொரோனா பெரும் தொற்றுச் சங்கிலியை  உடைக்க வேண்டுமானால் ஒரு அறையில் பல பேர் இடைவெளியின்றி பணியாற்றுவதை தவிர்த்திட 50 சதவீத பணியாளர்கள் பணி செய்ய வேண்டும்; எனவே தான் நெல்லை மண்டலத்தில் அதை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 28.5.2021 அன்று மனு கொடுத்தன.ஆனால் அதை உடனே பரிசீலிப்பதற்கு பதிலாக, 31.5.2021 வரை 50 சதவீதம் பணியாளர்கள் மட்டும் பணி செய்யுமாறு உத்தரவு ஆணை 1.06.2021 அன்றும்; 1.06.2021 முதல் 7.06.2021 வரைக்கான உத்தரவு  5.06.2021ல் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதாவது காலாவதி ஆன நாட்களுக்கு மின்வாரியதலைமையிடம் இருந்து உத்தரவு ஆணை வந்துள்ளது.

28.05.2021 அன்றே தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்த போது அதை செயல்படுத்தாத அதிகாரிகள் குறித்து நாளிதழில் செய்திகள் வந்தன.  தொற்று பரவல் தீவிரத்தை உணர்ந்து, தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் எச்சரித்த போதிலும், அரசின் வழிகாட்டலைப் புரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாகக் கூட பிறப்பித்து, பல ஊழியர்களின் உயிர்களைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஆனால் பொறுப்புள்ள அதிகாரிகளின் செயலற்ற தன்மையால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.மின்சார தொழிலாளர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும், தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மின்தடை நீக்கி வெளிச்சம் தருவது முதல் மருத்துவமனை மற்றும் மின் மயானத்திற்கும் மின்வெட்டு இல்லாமல் பணியாற்றுகிறார்கள். இத்தகைய மின் ஊழியர்களின் களப்பணிகளை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த மின் ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும். மேலும் முன்களப் பணியாளர்களாக உத்தரவுகள் பிறப்பித்திட வேண்டும் என மின் ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

படக்குறிப்பு : நெல்லை மண்டலத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த மின் ஊழியர்கள்.

கட்டுரையாளர் : எஸ்.வண்ணமுத்து  மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)


 

;