articles

img

கொரோனாவின் தாக்கமும் பெண் தொழிலாளர் பிரச்சனைகளும்....

எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள். கொரோனாவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், உடன் பிறப்புகளை, நண்பர்களை இழந்தவர்கள்; அதுமட்டுமல்ல, நமது பல ஆருயிர் தோழர்களை இழந்திருக்கிறோம்.கொரோனாவால் பறிபோனது ஆயிரக்கணக்கான உயிர்கள் மட்டுமல்ல; பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. கொரோனாவின் முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு முன்பே இரண்டாம் அலையின் தாண்டவம் ஆரம்பித்து விட்டது.பொது முடக்கம். இது தவிர வேறு தீர்வு கிடையாது அரசிற்கு. பொது முடக்கத்தால் முடங்கிப் போயின பல தொழில்கள். முடங்கிப் போன தொழில்களால் பெண் தொழிலாளர்களுக்கு பாதிப்பு மிக அதிகம்.

பாலின இடைவெளி
2020க்கும் முன்பே பணிக்குச் செல்லும் ஆண் தொழிலாளர்களுக்கும் பெண்  தொழிலாளர்களுக்கும் இடையில்பாலின வேலைவாய்ப்பு இடைவெளி பெரியதாக இருந்தது. வேலை செய்ய வயதும் தகுதியும் உடைய பெண்களில் 18% மட்டுமே வேலை செய்தார்கள். ஆண்களில் 75% வேலை செய்தார்கள். பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் வேலைக்கு செல்வதற்கு - கண்ணியமான வேலைகள் என்பது பெண்களுக்கு குறைந்த அளவிலே கிடைக்கிறது; சமூகத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் வீட்டு வேலைகளினால் ஏற்படும் சுமை - என்று சில காரணங்களை கூறலாம்.

“கோவிட் - 19 ஒரு வருடத்தில் இந்திய வேலை நிலைமை” - அறிக்கையின் படி தொற்றுநோயானது, வேலைவாய்ப்பு நிலைமையை கடந்த ஒரு வருட காலமாக மிகவும் மோசமாக்கியுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறது.நாடு தழுவிய பொது முடக்கம் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதித்துள்ளது. ‘இந்தியபொருளாதார கண்காணிப்பு மையத்தின்’ ஆய்வுகளின்முடிவுகள் 61% ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் பெண் தொழிலாளர்களில் 19% மட்டுமே பாதிக்கப்படவில்லை என்றும் கூறுகிறது. மேலும் 2020ஆம் ஆண்டு இறுதியில் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த பெண்களில் 47% பேர் பணிக்குத் திரும்பவில்லை; ஆனால் வேலை இழந்த ஆண்களில் 7% பேர் மட்டும் தான் பணிக்கு திரும்பவில்லை என்று கூறுகிறது.வேலையை இழந்த ஆண்கள் அவர்கள் இழந்த வேலைஅல்லது அதற்கு சமமான வேலை கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த வருவாய் உள்ள வேலையாக இருந்தாலும் வேலையை திரும்பப் பெற்றார்கள். வேலைவாய்ப்புகள் குறைந்ததால் வேறு சில ஏற்பாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள். முறையான ஊதியம் பெற்று வந்த ஆண்களில் 33% சுய வேலைவாய்ப்பிலும், 9% பேர் 2019ன் பிற்பகுதியிலிருந்து 2020ன் பிற்பகுதிவரை தினசரி ஊதிய பணிகளிலும் ஈடுபட்டனர். ஆனால்இதற்கு நேர் மாறாக பெண்களில் 4% சுய வேலைவாய்ப்பிலும் 3% தினசரி ஊதிய வேலைகளிலும் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்களில் சரி பாதிப் பேர் – முறையான சம்பளம் பெறுபவரா அல்லது கேஷுவல் ஊழியரா அல்லது சுய தொழில் புரிபவர்களா யாராக இருந்தாலும் – பணியிலிருந்து விலகினார்கள். ஆனால் ஆண்களில் 11% பேர் தான் பணியிலிருந்து  விலகினார்கள்.

உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைவதற்கு பெண் தொழிலாளர்களுக்கு ஆண் தொழிலாளர்களோடு ஒப்பிடும்போது வாய்ப்புகள் மிகக் குறைவு. தினசரி கூலித் தொழிலாளர்களாக பெண்கள் பணியில் நுழையும் பொழுது ஆண்கள் சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் வழிகளையும் கண்டனர். தினசரி கூலி வேலையில் சுய வேலை வாய்ப்பைவிட சராசரியாக மிகக் குறைவான ஊதியமே கிடைக்கும். 2020 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தினசரி கூலி தொழிலாளி ரூ. 7,965/- சம்பாதித்தார் என்றால் இதற்கு இரண்டு மடங்காக சுயதொழில் தொழிலாளி ரூ. 12,995/- சம்பாதித்தார். ஆனால் பெண்கள் மிகவும் ஆபத்தான வேலைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது வருமானமும் மிகக்குறைவு.

இழப்புக்குள்ளாவது பெண்களே!
பணிபுரிவது எந்த துறையாக இருந்தாலும் அதிகமாக வேலையை இழப்பது பெண்கள் தான். உதாரணமாக, கல்வித் துறையில் வேலை இழப்புக்கு உள்ளானவர்களில் பெண்களின் பங்கு மூன்று மடங்கு; பணியில் இருக்கும் 100 தொழிலாளர்களில் 20 பேர் பெண்கள் என்றால் வேலையை இழந்தவர்களில் 100 பேரில் 70 பேர் பெண்கள். சுகாதாரத் துறையில் 100 தொழிலாளர்களில் 40 பேர் பெண்கள் என்றால் இந்த துறையில் வேலை இழந்த100 பேரில் 80 பேர் பெண்கள்.வியாபாரத்திற்கு ஆதரவான வழிகள் இல்லாதபோது ஊதியம் வழங்க முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. ஒரு பெரிய சில்லறைக் கடை,  ஹோட்டல் அல்லது விமான நிறுவனம் மூடப்படும் பொழுது நூற்றுக்கணக்கான விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். இதில் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களே. சம்பள வெட்டுக்கள்,  ஊதியம் இல்லாத விடுப்பு, பணிநீக்கம் போன்றவை தவிர்க்க முடியாததாக மாற்றப்படுகின்றன.
பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதசூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் பெண்களுக்கு வீட்டு பொறுப்புகள் அதிகரித்தன. குழந்தை
களை வயதான தங்கள் பெற்றோர்களின் பராமரிப்பிலோ அல்லது உறவினர்கள் பராமரிப்பிலோ விட்டு விட்டு செல்ல முடியாது. குழந்தைகளுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை; முதியோர்கள் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு என்று கூடுதல் சுமை காரணமாக வேலைக்குத் திரும்பும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

கடும் சுமையாகும் வீட்டு வேலை
தொற்றுக்கு பிறகு ஆண்களின் பணி நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை; அதிகரிக்கவும் இல்லை குறையவும் இல்லை. பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளில் செலவிடும் நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பிப்ரவரி – மார்ச் மாதத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 10% - 20% பெண்கள் வீட்டு வேலைகளுக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை செலவிடுவதாக கூறியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதன் பங்கு 50% ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் வீட்டு வேலைக்காக செலவழிக்கும் இந்த நேரத்திற்கு எந்த நிவாரணமும் இல்லை ஊதியமும் இல்லை.

கொரோனா தொற்று வேறொரு புதிய பணிச்சூழலை உருவாக்கியுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவது (work from home). இங்கேயும் பாதிப்புக்குள்ளாவது பெண் தொழிலாளர்களே! ஒரு சிறு பகுதியினராக இருந்தாலும் வீட்டிலிருந்து பணியாற்றும் இந்த பெண் தொழிலாளர்களின் பணிச்சுமை இரு மடங்காகிறது. நிறுவன வேலையையும் செய்யவேண்டும்; வீட்டிலிருந்து பணியாற்றும் பொழுது வீட்டு வேலைகளையும் செய்தாக வேண்டும். இப்பொழுது குழந்தைகளுக்கு ஆன்லைனில் கல்வி கற்கவும் வழிகாட்ட வேண்டும்.  இவை அனைத்திற்கும் திட்டமிட நேரமும் வலிமையும் தேவை. பெருகியுள்ள சுமைகளினால் பலர் சோர்வடைகிறார்கள்.

தொற்றுநோயின் விளைவாக பெண்களின் ஊதியம் பெறும் வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளின் சுமை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ‘நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு’ குறித்த நீண்டகால கேள்வி தற்போது மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது.

செய்ய வேண்டியது என்ன? 
பெண் தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை மாறுவதற்கு உடனடியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) விரிவாக்கப்பட வேண்டும்; மேலும் பெண்களுக்கு வேலையை உறுதிப்படுத்தும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.இடம் பெயர்ந்து செல்ல தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படவேண்டும். பெரும்பாலும் பெண்கள் வேலை செய்யும் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள அங்கீகாரம் பெற்ற லட்சக்கணக்கான சமூக சுகாதார பணியாளர்களுக்கும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மாதம் ரூ. 5000/- வீதம் ஆறுமாதத்திற்கு ஊக்கத்தொகை அறிவித்து வழங்க வேண்டும்.

தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ‘தேசிய வேலைவாய்ப்பு கொள்கை’யில் தொழிலாளர் தொகுப்பில் (workforce) பெண்களின் பங்கேற்புக்கு தடையாக உள்ளஷரத்துகள் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதாகவும் வீட்டுவேலை சுமைகள் குறையும் படியும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.சமூக உள்கட்டமைப்பில் போதுமான பொது முதலீட்டின் அவசியத்தை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது.  கல்வி, சுகாதாரம், குழந்தைகள் முதியோர் பராமரிப்பு, போன்றவற்றில் முதலீட்டினை விரிவுபடுத்துவதோடு தற்போது காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும்எதிர் வரும் தேவைகளை கணக்கில் கொண்டு பணியிடங்களை உருவாக்கி நிரப்பப்பட வேண்டும். இதன் மூலம் பெண்களை நேரடியாக தொழிலாளர் தொகுப்பிற்குள் கொண்டுவருவதோடு அவர்களின் வீட்டு சுமைகளை கணிசமாக குறைக்கவும் முடியும்.

கட்டுரையாளர் : மாலதி சிட்டிபாபு, மாநிலப் பொருளாளர், சிஐடியு

;