articles

img

கொரோனா நெருக்கடியும்.... நுண் நிதி நெருக்கடியும்....

மதுரை மாவட்டத்தில் சுமார் 172 சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் 300 சுய உதவிக்குழுக்கள் உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதன் இலக்கு சதவீதம் 57 என தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்க இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது எந்தாண்டின் புள்ளிவிபரம் எனத் தெரியவில்லை.

ஆனால், “தமிழ்நாட்டில் 69.28 லட்சம் உறுப்பினர்களை கொண்ட 4.67 லட்சம் குழுக்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 060 உறுப்பினர்களை கொண்ட 8,658 குழுக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.8,921 கோடி ஆகும். மதுரை மாவட்டத்தில் ரூ. 32.11 கோடியாகும். தமிழ்நாட்டில் ஆதார நிதிபெற்ற குழுக்கள் 5.98 லட்சம். மதுரை மாவட்டத்தில் 1,199 குழுக்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.65,930 கோடி ஆகும். இது மதுரை மாவட்டத்தில் 18.80 கோடியாகும். 

2011-12 முதல் 31-3-2020 வரை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 83 ஆயிரத்து 063 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,613.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2011-12 முதல் 31-3-2020 வரை மதுரையில் மட்டும் 1,313 குழுக்களுக்கு ரூ.322.6 கோடி வழங்கப்பட்டுள்ளன” (கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு 2020  மே 31 மாலை மலர்)இவை தவிர இரு சக்கர வாகனக் கடன்களை பல்வேறு நிதி நிறுவனங்கள் அளித்துள்ளன.தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து தமிழக அரசு மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவாக இருந்தாலும், தனியார் நிதி நிறுவனங்களில் இருசக்கர வாகனக் கடன்கள் பெற்றுள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தான்.மதுரை மாவட்டத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களுக்கு ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்கள் கூட 50 சதவீத தொழிலாளர்களுடன்தான் இயங்கிவருகின்றன.

நெருக்கடியால் கூடுதல் வட்டிக்கு கடன்பெறும் பெண்கள்

இந்தச் சூழலில் இரு சக்கர வாகனக் கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள், கடன் வழங்கிய சுய உதவிக்குழுக்கள் தங்களுக்கு வர வேண்டிய கடன் தொகையை வசூலிக்க நெருக்கடி கொடுத்துவருகின்றன. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கும் சுயஉதவிக்குழு பெண்கள், நிதி நிறுவனங்களில் கடன்பெற்றோர் மீண்டும் கடன் தர மாட்டார்கள் என்ற பயத்தில் தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள். தமிழக முதல்வர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, இரு சக்கர வாகனக் கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் தங்களது கடனை திரும்பப் பெறும் காலத்தை நீட்டிக்க வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு கடன் தொகையை செலுத்த நிர்ப்பந்திக்கக்கூடாது. இந்த காலத்திற்கான தவணைத் தொகைக்கு வட்டி வசூலிக்கக்கூடாது.

கடன் வசூலை தள்ளிவைத்திடுக!
இதே போல் சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும். அவர்களிடமும் மூன்று மாதத்திற்கு கடன் வசூலிப்பதை தள்ளி வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சுயஉதவிக்குழு தாங்கள் பெற்ற கடனில் ஐம்பது சதவீதத்தை திரும்பப் செலுத்தியிருந்தால் புதிய கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலித்து நெருக்கடியான காலத்தில்  சுய உதவிக்குழு வசூல், இரு சக்கர வாகனக் கடன் வசூலை தள்ளி வைக்க வேண்டும்.

நமது நிருபர்

;