articles

img

திக்குத் தெரியாத தவிப்பும் உதவி செய்யத் துடிக்கும் இதயங்களும்....

சாதாரணமான சூழலில் செய்வதறியாது மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மனிதநேயம் கொண்ட நெஞ்சங்கள் இதைப் பார்த்து கடந்து போக முடியாது. ஏதேனும் ஒரு வகையில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதிலும் சேவை என்பது கம்யூனிஸ்டுகளின் மகத்துவமான அடிப்படை பண்பு. அப்படித்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கொரோனா தடுப்பு உதவி மையம் கடந்த மே 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்த விபரம் பகிரப்பட்டது. உதவி தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு10க்கும் மேற்பட்டோரின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டிருந்தன.

நம்பிக்கைக்கு ஏங்கும் குரல்கள் 

உதவி மையம் தொடங்கிய நாளில் இருந்து இந்த ஒரு வார காலத்தில் எங்கெங்கிருந்தோ அழைப்புகள் வந்தன. தொடர்பு கொண்ட பலரது குரலில் அச்சமும், நடுக்கமும் இருந்ததை உணர முடிந்தது. உதவி கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் தங்கள் தேவைகளைத் தெரிவித்தனர். இப்படியாக ஒவ்வொரு நாளும் சுமார் நூறு அழைப்புகள். “தடுப்பூசி 2ஆவது முறை எங்கே போடுவது? 3 நாட்களாக காய்ச்சல், டெஸ்ட் எடுத்து விட்டோம் இன்னும் ரிசல்ட் வரவில்லை என்ன செய்வது? பாசிட்டிவ் என்று சொல்லி விட்டார்கள், அரசு மருத்துவமனையில் இடமில்லை என்று சொல்லி விட்டார்கள். பிரைவேட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனோடு பெட் கிடைக்குமா? இப்படி கணவன் மனைவிக்கும், மகள் தனது தாய்க்கும், மனைவி கணவனுக்கும், மகன் தனது தந்தைக்கும் என உறவுகளின் அழைப்புகள் ஏராளம். 

உதவி மையத்தில் இருந்து மாவட்ட சுகாதாரத் துறை, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், சேவை மனப்பான்மை கொண்ட சுமார் 10 மருத்துவர்கள், தன்னார்வ சேவை செய்வோர் என பல தரப்பினரிடமும் இணைப்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்பு கொள்வோரின் தேவை அறிந்து அதற்கேற்ப அரசு மருத்துவமனை அல்லது மாநகராட்சி சுகாதாரத் துறை அல்லது நமது பட்டியலில் இருக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை என உடனடியாக கேட்கப்பட்டு, உதவி செய்யப்பட்டது. 
காலையிலிருந்து அரசு மருத்துவமனை முதல் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு பெட் கிடைக்காமல் தவித்த ஒருவருக்கு உதவிட உதவி மையத்தின் சார்பில் நண்பர் ஒருவர் எடுத்த முயற்சியால் ஒரு மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு படுக்கை கிடைக்க, அட்மிட் செய்து விட்டு, போனில் அவர் குரல் கம்மிப் போய் நா தழுதழுக்க, “அந்த முகம் தெரியாத நண்பருக்கு எனது குடும்பத்தின் நன்றிகளைத் சொல்லுங்கள் தோழர்” என்றார். உதவி மையத் தோழர்களுக்கு மனம் லேசாகி நெகிழ்ந்தது.

சில நிமிடங்களில் வேறு ஒரு முகம் தெரியாதவரின் அழைப்பு. “சார் ஆக்சிஜனில் இருக்கும் எங்கப்பா சீரியசாகி விட்டார். டாக்டர் எங்கப்பாவை கூட்டிப் போகச் சொல்லி விட்டார். இந்த நேரத்தில் எங்க போறதுன்னு தெரியலை. வெண்டிலேட்டர் இருக்கிற ஆஸ்பிடல் ஏதாவதில் அட்மிட் செய்ய முடியுமா? ப்ளீஸ் சார்” என்றார். இந்த அழைப்பை  ஏற்ற தோழர் ரங்கராஜ் கூறுகிறார்: ‘‘மிகவும் தடுமாறி விட்டேன்.ஏதேதோ சமாதானம் சொன்னேன். ஆனால் எதிர்முனையில் இருந்து ‘இப்ப முடியலைன்னா பரவாயில்லை சார். காலை எப்படியாவது உதவி செய்யுங்கள் சார்’ என்றார். அவருக்கு உதவி செய்ய  முடியாத நிலையில் இரவு தூங்க முடியவில்லை’’. 

ஒவ்வொரு நாளும் உதவி மையத்திற்கு நேரம் காலம் இல்லாமல் அதிகாலை 5 மணி, நள்ளிரவு 1 மணி என எந்த நேரத்திலும் வரும் ஏராளமான அழைப்புகள், நிலைமை கவலைக்குரியதாக மாறுவதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. தொடர்பு கொண்டு பேசுபவர்களின் குரல்களின் கவலையும், பதட்டங்களும் நம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. எப்படியாவது அவர்களுக்கு உதவிட வேண்டும் என மனது துடிக்கிறது என்று சொல்கின்றனர் உதவி மையத்தின் தோழர்கள்.

யூகிக்க முடியாத காலம் 
இந்த கொடிய கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் படும் துயரங்களை கேட்கும்போது நிலைமை நாம் நினைத்ததை விட கவலைக்குரியதாக மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. பலர் ஆர்டி - பிசிஆர் எனப்படும் தொற்றுப் பரிசோதனை ரிப்போர்ட்டையும், சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டையும் வாட்சாப்பில் அனுப்பி அந்த பாதிப்புக்கு என்ன செய்வது என கவலையும், பதற்றமுமாக கேட்டனர். பாசிட்டிவ் ஆன தங்களுடைய, தங்கள் உறவுகளுடைய  சிகிச்சை குறித்து அச்சத்தோடு கேட்டார்கள். இதுவரை சந்தித்திராத யூகிக்க முடியாத மோசமான காலம் இது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் இருவரும் மாநகராட்சி ஆணையர், மாநகர சுகாதார அலுவலர், மாவட்ட ஆட்சியர் என அடுத்தடுத்து தொடர்ந்து நேரில் சந்தித்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், தற்போதுள்ள சூழலின் அபாயமான நிலையை தெரிவித்து, போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அக்கறையுடன் வலியுறுத்தினர்.
இது மட்டுமல்லாது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர்  மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பாக்கப்பட்டு உள்ளார். அவர் இங்கு வந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தை வேகப்படுத்தி வருகிறார். அவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து இங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மனுவாகக் கொடுத்தனர்.

செய்ய வேண்டிய பணிகள்
குறிப்பாக தொற்றுப் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது, பரிசோதனை முடிவுகளைத் தாமதமில்லாமல் குறித்த காலத்தில் தெரிவிப்பது, தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தி கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி போடுவது, தொற்றாளர்களுக்கு உடனடியாக தேவையான மருத்துவ ஆலோசனை தருவது, உள்ளூர் மட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்துவது, மண்டல, பகுதி அளவில் கொரோனா  சிகிச்சை மையங்களை அமைத்து, குறைந்தளவு தொற்று பாதித்தோருக்கு அங்கே தங்கி சிகிச்சை பெற ஏற்பாடு, அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஆக்சிஜன் தேவைக்கு ஏற்ப கூடுதலாக வரவழைத்து தயார் நிலையில் வைத்திருப்பது, ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கையையும் அதிகரிப்பது, வெண்டிலேட்டர் தேவைப்படும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு அந்த வசதியையும் தாமதமின்றி கிடைக்க தகவல்களை ஒருங்கிணைப்பது, கூடுதல் ஏற்பாடு செய்வது, இத்துடன் மரபுசார்ந்த சித்தா மருத்துவ சிகிச்சை மையத்தை செயல்படுத்துவது, பொது மக்களுக்கு அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயை எதிர் கொள்வதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்க மனநல ஆலோசனை வழங்குவது என பன்முகமான ஆலோசனைகள் அரசு நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இவை கோரிக்கைகளாக மட்டுமின்றி உடனிருந்து ஒத்துழைத்து தேவையான பணிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி மையத்தினர் செய்து வருகின்றனர்.

ஊரடங்கின் அவசியம்
இதற்கிடையே அரசு அறிவித்த முழு ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைப் பணி என்ற அடிப்படையில் பனியன் நிறுவனங்களை இயங்க அனுமதிப்பது தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்துக்கு உதவாது என்பதால் பனியன் நிறுவனங்களையும் இயக்காமல் ஊரடங்கு முழுமையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், வெள்ளிக்கிழமை மாலையுடன் பின்னலாடை நிறுவனங்களை நிறுத்துவதாக தொழில் அமைப்பினர் தெரிவித்தனர். ஆனாலும் தற்போது நோய் பரவலின் விபரீதமான நிலையையும், அது ஏற்படுத்தி வரும் கொள்ளை பாதிப்பையும் அறிந்தும், அறியாதவர்களாக சில பனியன் நிறுவனங்களை ரகசியமாக இயக்கவும், தொழிலாளர்களை வேலைக்கு வரக் கட்டாயப்படுத்தும் போக்கும் உள்ளது. அதையும் கண்காணித்து தடுத்து நிறுத்துவதுடன், ஊரடங்கை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மருத்துவ இதயங்களின் உதவி
கொரோனா தடுப்பு உதவி மையத்திற்கு டாக்டர்கள் பொன்சிங், ராதாகிருஷ்ணன், ரேணுகாதேவி, கார்த்திக், மரகதம், பிரேமா, செம்மலர், நலம் ஹோமியோ டாக்டர் திருவேங்கடம் உள்ளிட்டோரின் உதவியும், ஆலோசனையும் குறிப்பிடத்தக்கது. தங்கள் மருத்துவமனைகளில் நெருக்கடியான பணிகளுக்கிடையில், வாட்சாப்பில் அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டுகளை பார்த்து அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை தெரிவித்து, தைரியத்தை வழங்கி வாட்சாப் அழைப்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி வருவது புனிதமான பணியாகும். பெயர் குறிப்பிட விரும்பாத சேவை நண்பர் ஒருவர் பல மருத்துவமனைகளுடன் தனது நெருக்கமான தொடர்புகள் மூலம் இக்கட்டான இந்த நேரத்தில் சிலருக்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை கிடைக்க எடுத்த முயற்சி சாதாரணமானதல்ல.

தோழர்கள் முத்துக்கண்ணன், ரங்கராஜ், மணிகண்டன், சம்சீர் அகமது, மைதிலி, ஊத்துக்குளி குமார், கௌரி சங்கர், கார்த்திக் ஆகியோர் ஒருங்கிணைந்து 30க்கும் மேற்பட்டோர் செய்து வரும் பணியால், பல மருத்துவர்களின் உதவியால் சிக்கலான நிலைமையில் உள்ள பலருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்ய முடிந்தது. அதோடு 25 பேருக்கு “கோவி ஷீல்டு” இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

போக்க வேண்டிய துயரம் 
மற்றொருபுறம் நடைபெற்ற சில சம்பவங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. மஹா ராஜா கல்லூரி சிகிச்சை மையத்தில் உள்ளவர்களில் பலருக்கு சரியான சிகிச்சை அளிக்காத தகவல் வந்தது. உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதேபோல் கோவையில் உள்ள புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பெறும் ஒரு முதியவருக்கு கொடுக்கும் உணவை சாப்பிட முடியாமல் ரொட்டிக்கும், குடிநீருக்கும் தவியாய் தவித்த தகவல் கிடைத்தது கொடுமை. 45 நிமிடங்களுக்கு மேல் நிர்வாகத்தில் பலரை அழைத்துப் பேசி கட்சியின் கோவைத் தோழர்களும் தலையிட்ட பின்னர் அந்த முதியவருக்கு ரொட்டியும், குடிநீரும் கிடைத்தது. 
தொற்றின் தீவிரத்தால் திருப்பூரில் ஒரு முதியவருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் துயரமான நிலை. பல மணி நேரங்கள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. நம்பிக்கை தளராமல் தொடர்கிறோம். திக்கு திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக, இதயங்கள் பல துடித்துக் கொண்டிருக்கின்றன. 

தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் சிலருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கித் தரும் வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு தொற்று உறுதியானபோது அவரை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லவும், மற்றுமொரு கர்ப்பிணிக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வாங்கித் தருவதுமான பணி நடைபெற்றது. இந்த நெருக்கடி காலத்திலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு, வாலிபர் சங்க ரத்த தானக் கழகத்தின் மூலம் ரூ.31ஆயிரம் மதிப்பில் ரத்த மாதிரிகளை பாதுகாத்து வைக்கும் குளிர்சாதன பெட்டி வாங்கித் தரப்பட்டது. தற்போது தொற்று பரவலின் வேகத்தை ஒப்பிட்டால் உதவி மையத்தின் சேவைகள் சிறிய அளவாகத்தான் உள்ளது. எனினும் இது போன்ற அசாதாரணமான சூழலில் கரம் பற்றி மீட்கும் ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது தான். இந்த சேவை தொய்வில்லாமல் இன்னும் தொடரும். 

                               ****************

உதவி தேவைப்படுவோர் தயக்கமில்லாமல் தொடர்பு கொள்ளலாம்: 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 447 தியாகி பழனிசாமி நிலையம், அவிநாசி சாலை, திருப்பூர் என்ற முகவரியில். தொடர்பு எண்கள் - 94423 74277, 94880 67007, 99945 32915, 94881 66566, 90422 20078, 90953 39097, 99440 47467, 97900 61482, 98433 61610, 93444 68121, 93630 60044, 95976 29479, 94439 36532, 99448 62851, 94899 25888.

தொகுப்பு : வே.தூயவன்

;