articles

img

பொதுமுடக்கமும் வாழ்விழந்த தொழிலாளர்களும்....

கொரோனா இரண்டாவது அலைசுனாமியைப் போல சுற்றிச்சுழன்று தாக்கிக் கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து புறப்படும் போது மூச்சுத்திணறலோடு பேசிக் கொண்டிருந்த அப்பா, மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே மூச்சை நிறுத்திக்கொண் டார். எழுந்திருப்பா, அப்பா எழுந்திருப்பா என மகள் கதறிஅழும் சத்தம் தேசம் எங்கும் எதிரொலிக்கிறது. ஆனால் மோடியின் காதுகளுக்கு மட்டும் அது கேட்கவே இல்லை. படுக்கை, ஆக்சிஜன், தடுப்பூசி, சுடுகாடு எதுவும் கிடைக்கவில்லை. மருத்துவ  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லை என தேசமே விவாதிக்கும் போது, தொழிலாளர்களின் துயரம் பேசுபொருளாகவே மாறாத நிலை உள்ளது.

மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள்
சென்னையில் பல சிறு, குறு தொழிற்சாலைகள் தொழிலாளர் பற்றாக்குறையால் உயிர்வாழ போராடுகின்றன. கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் கூறுகிறார், “பலருக்கும் இங்கு தொற்று ஏற்பட்டது. எனவே தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். எனது ஆலையைக் கூட மூட வேண்டியதாயிற்று”. சென்னை மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் டி.வி.ஹரிகரன் கூறுகிறார், “20 சதம் முதல் 30 சத தொழில்கள் மூடப்பட்டிருக்கிறது. 1,500 ஆலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கை 30 சதம் குறைந்துவிட்டது”. அம்பத்தூர் சிறு, குறு தொழில்உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பாலச்சந்திரன் கூறுகிறார், “உற்பத்திக்கான ஆர்டர்களைப் பெறுகிறோம். தொழிலாளர்களுக்கு பஞ்சமில்லை. பெரும்பாலான ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வும், ஊரடங்கு கால கட்டுப்பாடுகளும் சவாலாக இருக்கிறது. சுகாதார தொழிலாளர்களைப் போல
இதர தொழிலாளர்களையும் ரயிலில் அனுமதிக்க வேண்டும்”.

ஜவுளிகடைகள், மால்கள், மளிகைக் கடைகள் மற்றும் பூக்கடைகளில் வேலை செய்யும் முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஜவுளிக்கடையில் பணியாற்றும் செல்லதுரை, “கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் சுமார் 50 நாட்கள் எனது வேலையை இழந்த போது, எங்கள் நிறுவனம் எனக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கியது. எனது குடும்பத்தை நடத்த இது எனக்கு உதவியது. இந்த முறை, எனது உரிமையாளர் எந்த ஊதியமும் இருக்காது என்று கூறியுள்ளார். என்னைப் போன்ற தொழிலாளர்களுக்கு மாநில, மத்திய அரசுகள் அவசரமாக ஒரு நிதி உதவியை அறிவிக்கவில்லை என்றால், எனது குடும்பம் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும்” என்கிறார். கட்டுப்பாடுகளுக்குப் பிறகு வாடிக்கை யாளர்கள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்ததாக ஆலங்குளம் பூக்கடை உரிமையாளர் ராமலிங்கம் கூறினார். “ எனது தொழிலாளர்களில் பாதி பேரை வீட்டிலேயே இருக்கும்படிசொல்லிவிட்டேன்,” என்றார்.

முறைசாரா தொழிலாளர்களின் துயரம்
இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருமளவில் முறைசாரா துறைகளில் தான் உள்ளது. 46.10 கோடி இந்திய தொழிலாளர்களில் 41.50 கோடி தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என்று 2017 – 18ம் ஆண்டு காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு  கூறுகிறது. முறைசாரா தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.  மிக கடுமையான, சமூகத்திற்குஅவசியமான பணிசெய்யும் முறைசாரா தொழிலாளர்களை கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்த லாம்: வீடுசார் தொழில் சார்ந்த தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், தெருக்களில் வியாபாரம் செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள்.  பகுதி ஊரடங்கு, முழுஊரடங்கு இரண்டுமே முறைசாரா தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பெருமளவு வேலை இழந்திருக்கின்றனர். ஆனால் பெண்களின் வேலையிழப்பு சமூகத்தின் கண்களுக்கு தெரிவதில்லை.

ரெஹானா என்றொரு தொழிலாளி
20 ஆண்டுகளாக வாரத்தில் 6 நாட்கள், நாளுக்கு 12 மணி நேரம் என கடுமையாக உழைத்தாலும், ஒரு நாளைக்கு ரூபாய் 125க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை எனக்கூறும் ரெஹானா என்ற  42 வயது பெண்மணி. இந்தியாவில் உழைப்புக்கும் ஊதியத்திற்குமான இடைவெளி அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு மலைஉச்சிக்கும் பாதாளத்துக்குமான இடைவெளியோடு இருப்பதாக கூறுகிறார். ரெஹானா ஒரு தையல் தொழிலாளி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர், வயதானமாமனார், இரண்டு மகன்களின் உணவு, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய வேலைக்கும் கூலிக்கும்நம் சமூகமோ, அரசோ எவ்வித உறுதியையும் தருவதில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்ககூடிய ஜவுளித்துறையில் 1.46 கோடிதொழி லாளர்கள் உள்ளனர். இத்துறையில் 6.1 சதவீதம் பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.

முறைசாரா பெண் தொழிலாளர்கள்
இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ் டிரஸ்ட் (ஐ.எஸ்.எஸ்.டி) 2020 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தில்லியில் ஐந்து துறைகளில் பணிபுரியும் 316 முறைசாரா பெண் தொழிலாளர்களுடன் ஒரு தொலைபேசி ஆய்வை மேற்கொண்டது.  ஆய்வில் பதிலளித்தவர்கள் 16 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். சமூகரீதியாக விளிம்புநிலை மக்கள். பதிலளித்தவர்களில் 64 சதவீதம் பேர் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை இழந்ததாகக் கூறியுள்ளனர். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்ததாகவும், ஒரு சிலருக்கே புதிய வேலை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பகுதி நேர வீட்டுத் தொழிலாளர்களில் 83 சதவீதம் பேர்,  கொரோனா முதல் அலைக்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது இப்போது வேலை செய்யக்கூடிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  சந்தைகளும், தெருக்களும் மூடப்பட்டது தெரு விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது. கொரோனா அச்சத்தால் பல வாடிக்கையாளர்கள் இவர்களை ஒதுக்கி வைத்தனர்.  இதன் மூலம் அவர்களின் வருமானம் கடந்த ஆறு மாதங்களில் வீழ்ந்துவிட்டது என்றும் தெரிய வந்துள்ளது. இப்போது பொருட்கள் வாங்குவது ஆன்
லைன் ஷாப்பிங்கிற்கு மாறிவிட்டது.

மன அழுத்தமும் பதற்றமும்
87 சதவீதம் பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் வேலையை முற்றிலுமாக இழந்துவிட்டதாகவும், அவர்களில் சிலர் மட்டுமே ஊரடங்குக்குப் பிந்தைய காலத்தில் தங்கள் வேலையை மீண்டும் தொடங்க முடிந்தது என்றும் ஆய்வில் தெரிகிறது. வேலை மற்றும் வருமானத்தின் நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் காரணமாக கொரோனா தொற்று நோய் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது என்று 10 முறைசாரா பெண் தொழிலாளர்களில் 9 பேர் தெரிவித்துள்ளனர். 64 சதவீதம் முறைசாரா பெண் தொழிலாளர்கள் கடந்த ஆறுமாதங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்குவதிலும், 36 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்பதால் ஏற்பட்ட சிரமங்களையும்,  32 சதவீதம் பேர் வாடகை கொடுக்க முடியாத சிரமத்தையும் சந்தித்ததாக தெரிவித்து உள்ளனர். அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்காத நிலையில் 53 சதவீதம் பேர் அதிக வட்டிக்கு பணம் வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.   இந்த முறைசாரா தொழிலாளர்கள் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.  அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் பணி அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதில்லை.  அவர்களிடம் சேமிப்பு இல்லை. மேலும் அவர்கள் தொற்றுநோயின் முதல் அலைக்கு பிந்தைய காலத்தில் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும்கட்டியெழுப்புவதில் பெரும் சிரமத்தை சந்தித்துவருகிறார்கள்.

நிர்க்கதியாக நிற்பவர்கள்
இந்தியாவில் முறைசார் தொழிலாளர்களின் ஊதியம் 3.6 சதவீதம் குறைந்ததாகவும், முறைசாரா தொழிலாளர்களின் ஊதியம் 22.6 சதவீதம் குறைந்த தாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகூறியுள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் 63,553 கோடி இழப்பை சந்தித்தனர். இது 2020 – 21 பட்ஜெட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமமானதாகும்.  6.94 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். பல துறைகளில் குறைந்தபட்சஊதியம் முடக்கப்பட்டதாகவும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.  சேவியர் எஸ்டுபினன் மற்றும்மோஹித் சர்மா ஆகியோரின் ‘இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக முறைசாரா துறையில் வேலை மற்றும் ஊதிய இழப்புகள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில், “முறைசாரா தொழிலாளர்களின் நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க சமூக பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் சுமார் 79.4 சதவீத தொழிலாளர்கள் முறைசாரா   துறையில் உள்ளனர். அவர்களில் முறையான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்கீழ் 0.5 சதவீதம் மட்டுமே உள்ளனர். முறையான / ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் கூட, முறைசாரா வேலைவாய்ப்பு உள்ள தொழிலாளர்களின் பங்கு சுமார் 52 சதவீதமாகும். தொழிலாளர் சந்தையில் முறைசாரா தொழிலாளர்களில் சுமார் 91 சதவீதம் இந்தியாவில் உள்ளனர். 2008ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நலன்களை வழங்குவதற்கான `ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம்’ இன்னமும் செயல்படுத்தபடவே இல்லை. ஆனால் அவசர, அவசரமாக தொழிலாளர் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கடும் சுரண்டலுக்கு ஆளாகி வந்த முறைசாரா தொழிலாளர்கள், கொரோனா காலத்தில் எவ்வித பாதுகாப்பு மின்றி புதைகுழிக்குள் தள்ளப்பட்டு, கையறு நிலையில் உள்ளனர்.

நிவாரண உதவிகளை செய்திடுக!
தமிழக அரசு 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூபாய் 2,000 நிவாரண நிதிவழங்குவதும், 13 மளிகைப் பொருட்கள் வழங்க இருப்பதும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில்  சிறு, குறுதொழில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிதிஉதவிகளை அறிவித்திட வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என தொழில் 
முனைவோர் எதிர்பார்க்கின்றனர். ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஆறுமாதங்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்க வேண்டும். தேசிய கிராமப்புறவேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்களை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் அதிக பொதுவேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 வழங்கிடவேண்டும். தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. பொது முடக்க காலத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.  தொழிலாளர்களின் பிரச்சனைகள் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டு இருக்கிறது. சிறு பொறியும் நெருப்பாக மாறும். இடதுசாரி, ஜனநாயக இயக்கங்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றன. 

கட்டுரையாளர்: கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச்செயலாளர்,  திருநெல்வேலி மாவட்டக்குழு,  சிபிஐ(எம்)

;