articles

img

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்....

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரம்பரை வழிமுறையில் (அதாவது தாத்தாவிற்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன்) அர்ச்சகர்களாகப் பணிபுரிந்து வருவதை ரத்து செய்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என இந்து சமய அறநிலையச் சட்டம் 22/1959 பிரிவு 55, 56 மற்றும் 117க்கு தமிழ்நாடு சட்டம் 2/71ன் மூலம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்கு முன்பு 1959-ஆம் ஆண்டு அறநிலையச் சட்டப் பிரிவு 55 உட்பிரிவு (1)ன்படி “ஒரு சமய நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது பணியாளர் பதவியில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ காலியிடம் ஏற்பட்டால் அந்தப் பதவி அல்லது ஊதியம் பரம்பரைப் பதவி அல்லாத போது அந்த பதவியையும் ஊதியத்தையும் அந்த சமய நிறுவனத்தின் அறங்காவலரே நிரப்ப வேண்டும்” என இருந்தது. 

1959ஆம் ஆண்டு 22வது சட்டப் பிரிவு 55(i)க்குகொண்டு வரப்பட்ட 1971 ஆம் வருடத்திய 2வது சட்டத்தின்படி “ஒரு சமய நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள் பதவியில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஏற்படுகின்ற அனைத்து காலியிடங்களையும் அறங்காவலரே நிரப்ப வேண்டும்” என உள்ளது. 

விளக்கம் : பணியாளர்கள் அல்லது ஊழியர்கள் என்றசொல்லில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளும் அடங்குவதாகக் கொள்ள வேண்டும். 

திருத்தச் சட்டம் 2/71 நடைமுறைக்கு வருவதற்கு முன்பு:

இந்து சமய அறநிலையச் சட்டம் 22/1959 பிரிவு 55 உட்பிரிவு (2) ன் படி “அந்தப் பதவியோ அல்லது ஊழியமோ பரம்பரை முறையில் வந்தால் வாரிசு முறையில்அடுத்தவர் அந்த இடத்தைப் பெற உரிமை உடையவராகிறார். 

திருத்தச் சட்டம் 2/1971 நடைமுறைக்கு வந்த பின்பு:

இந்து சமய அறநிலையச் சட்டம் 22/1959 பிரிவு 56(2)(i) திருத்தச் சட்டம் 2/71ன் படி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சட்டப்பிரிவு 55(2)(i) உட்பிரிவில் குறிப்பிட்ட காலியிடம் எதற்கும் ஒருவர் தாம் அந்தப் பதவியில் முன்னிருந்தவருக்குப் பின்னரும் அடுத்த வாரிசு என்ற காரணத்திற்காக மட்டும் அந்தப் பதவியைப் பெறுவதற்கு அவர் தகுதி உடையவராக மாட்டார்.ஆக,  தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959(தமிழ்நாடு சட்டம் 22/1959) திருத்தச் சட்டம் 2/1971ன் படி சட்டப்பிரிவு 55(2)(1)ன்படி “பரம்பரை உரிமை” வழியில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டது நீக்கப்பட்டது.  இந்தத்திருத்தச் சட்டம் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 மற்றும் 26ஆவது ஷரத்துக்களுக்கு எதிரானது என்று விளம்புகைக் கோரி மேற்படி சட்டத் திருத்தத்திற்கு எதிராகஇந்திய உச்சநீதிமன்றத்தில் சில ரிட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட நடுவர் ஆயம் 14.03.1972 ஆம் தேதியிட்டு வழங்கிய தீர்ப்பில் அர்ச்சகர்களைப் பரம்பரை அடிப்படையில் நியமிக்கத் தேவையில்லை என்னும் சட்டத்திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இவ்வாறு தீர்ப்பு வழங்கி, ச்சநீதிமன்றத்தில் சில அர்ச்சகர்களும் மடாதிபதிகளும் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. (AIR 1972 SC 1586).

வழிபாட்டுச் சுதந்திரம்    
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 25 மற்றும் 26 கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது. 

வழிபாட்டுச் சுதந்திரம்

பிரிவு 25

(1) பொது ஒழுங்கு,  ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள மற்றவற்றுக்கு ஆட்பட்டும்,  எல்லாரும் நம் மனசாட்சிப்படி செயல்படுவதற்குரிய சுதந்திரம் உடையவராவார்கள். தத்தம் மதத்தைத் தழுவ,  மேற்கொள்ள மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்களாவர். 

(2) இந்தக் கோட்பாட்டில் உள்ளவை எதுவும்,

(அ) மத வழிபாட்டுடன் தொடர்புடைய பொருளாதாரம் நீதி,  அரசியல் மற்றும் இதர மதச்சார்பற்ற செயல்பாட்டுக்கு, 

(ஆ) சமுதாய நல்வாழ்வுக்கும்,  சீர்திருத்தத்திற்கும் அல்லது இந்துக்களுடைய கோவில்கள் மற்றும் மதச்சார்புற்ற இடங்களை இந்து மதத்தைச் சார்ந்த எல்லாவகுப்பினர்களும் பாகுபாடின்றித் திறந்து வைக்கப்படுவதற்குத் தேவைப்படும் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அல்லது அத்தகைய புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் இந்த அரசைத் தடுக்க முடியாது. 

விளக்கம் : 1 கிர்பான் (குறுவாள்) களை வைத்திருப்பதும் அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படும். 

விளக்கம் 2(2)  : ஆவது கூறின் (6) கிளைக் கூறின் படி உள்ள இந்து என்ற சொல் சீக்கிய,  ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் குறிப்பதோடு,  இந்துக் கோயில்,  மதச்சார்பற்ற இடங்கள் என்பதும் இத்தகைய சீக்கிய,  ஜைன, புத்த சமயக்கோயில்களையும் மற்ற மதச்சார்பற்ற இடங்களையும் குறிப்பதாகும்.

பிரிவு 26: பொது ஒழுங்கு,  ஒழுக்கம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு ஒரு மதத்தைச் சார்ந்தவர்களும் அல்லது அம்மதப் பிரிவைச் சார்ந்தவர்களும்,

(அ) மதத்துக்காகவும்,  அறங்களுக்காகவும்,  அமைப்புக்களை உருவாக்குவதற்கும் அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும், 

(ஆ) தம்தம் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாமே நிர்வகிப்பதற்கும் 

(இ) சொத்துக்களைப் பெறுவதற்கும்,  உரிமையுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் 

(ஈ) அத்தகைய சொத்துக்களைச் சட்டப்படி நிர்வகிப்பதற்கும் உரிமம் உடையவர்களாவர். 

உச்சநீதிமன்றத்தின் கேள்வியும் பதிலும்    
மேற்கண்ட ஷரத்துக்களின்படி பார்க்கும் போதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரம்பரை வழி அர்ச்சகர் உரிமையைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்பது தெளிவாகிறது.  உச்சநீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்பியது,  அர்ச்சகர்கள் பரம்பரையாக வர வேண்டும் என்பது மத வழக்கா? அல்லது மதச்சார்பற்ற வழக்காறா?  பதிலும் கண்டது உச்சநீதிமன்றம், “அர்ச்சகர்கள் என்பவர்கள் ஆகமங்கள் அறிந்திருந்தாலும் வழிபாட்டு முறைகள் அறிந்து அவர்களை மடாதிபதிகளாக நியமனம் செய்யப்படுவது போல நியமிக்கப்படுவதில்லை; அர்ச்சகர்கள் ஆன்மீகத் தலைவர்கள்” அல்லர்.

அர்ச்சகர்கள் கோயில்களின் உள்துறை பணியாளர்கள். அர்ச்சகர்கள் கோயில்களின் அறங்காவலர்களால் சட்டப்பிரிவு 55 மற்றும் சட்டப்பிரிவு 116(2)ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படியே தகுதி இருந்தால் மட்டுமேநியமிக்கப்படுகிறார்கள். அர்ச்சகர் நியமனம் மத நடவடிக்கை அல்ல. மதச்சார்பற்ற அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் கோயில் வழிபாட்டை நடத்துவதால் அது மத நடவடிக்கை என்றோ அது மதம் சம்பந்தப்பட்டது அல்ல என்றோ கொள்ள முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் அர்ச்சகர் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். “அர்ச்சகர்கள் பரம்பரையாக வந்தார்கள் என்றால் அவர்கள் தகுதியோடு ஆயத்தமாக இருந்ததால் நியமிக்கப்பட்டார்களே தவிர, மற்றவர்கள் வரக்கூடாது என்பது வழக்காறு அல்ல”

அடிப்படையில்லாத அச்சம்    
தங்கள் ரிட் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்றநிலையில் அர்ச்சகர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு அச்சத்தைத் தெரிவித்தார்கள். சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் விதிகளைவகுக்கும் அதிகாரம் பெற்ற மாநில அரசு ஆகமங்களுக்குமுரண்படும் வகையில் அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதிகளை வரையறை செய்யலாம் என்று சொன்னார்கள். அர்ச்சகர் நியமனம் பற்றி இப்போது இருக்கும் விதிகள் மாற்றப்படலாம் என்றும் சொன்னார்கள்.  ஆனால் உச்சநீதிமன்றம் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அர்ச்சகர்களின் அச்சம் அடிப்படை இல்லாதது என்று கூறியது.  அப்படிச் சடங்குகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராக விதிகள் கொண்டு வரப்பட்டால் அப்போது அதை எதிர்த்து நீதிமன்றம் வரலாம் என்று குறிப்பிட்டு,  முழுமையாக வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேற்கண்ட தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் 14-03-1972 அன்று வழங்கப்பட்டது. (AIR 1972 SC 1586).

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற சட்டத்திருத்தம் சரியானதே என்று உறுதிசெய்யப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு முதலில் இடைக்காலத் தடை தரப்பட்டாலும் இறுதித் தீர்ப்பு சாதகமாகவே அமைந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அதனை அமல்படுத்திட என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு தமிழ்நாடு அரசு  நீதிபதி என்.மகாராஜன் குழுவை அமைத்தது. நீதிபதி என்.மகாராஜன் குழு உரிய பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் அடுத்து வந்த ஆட்சிக்காலத்தில் அந்த அறிக்கை கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது. எந்த அரசு அனைத்து சாதியினரும்  அர்ச்சகர்ஆகலாம் என்ற 2-வது சட்டத்தை 1971-ல் கொண்டு வந்ததோஅந்தச் சட்டத்தை 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் அமல்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பானது வரலாற்றில்பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நபருக்குச் சொல்லப்பட்டது மொழிக்கும் பொருந்தும்
உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், அர்ச்சனை செய்யப்படும் மொழி சம்பந்தப்பட்டது அல்ல என்றாலும்,  வழிபாடு செய்து வைக்கும் நபர் சம்பந்தப்பட்டதல்ல என்றாலும், வழிபாடு செய்யும் நபருக்கு ஆதரவாக சொல்லப்பட்டவை மொழிக்கும் பொருந்தும். தமிழில் அர்ச்சனை என்பது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பல ஆயிரம் கோயில்களில் செய்யப்பட்டு வந்துள்ளது. தமிழில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வடமொழி உபயோகத்திற்கு முன்பே தமிழில் மட்டுமே கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழ்மொழியில்தான் பாடினார்கள். ஆதிசங்கரருக்கு சற்று முன்பு தோன்றிய பிராமண வகுப்பைச் சேர்ந்தவரான திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்களைத் தமிழில்தான் பாடினாரே தவிர வடமொழியில் பாடவில்லை. தமிழகத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களில் பூசாரிகள் வடமொழியில் பூஜை செய்வது இல்லை. அரசு ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படும் ஏராளமான திருக்கோயில்களின் வருமானம், அறநிலையத்துறையின்  அயராத உழைப்பால் அதிகமாகும் போது, பூசாரிகளுக்கு ஆகமங்கள் தெரியாது என்று அவர்களை நீக்கிவிட்டு, ஆகமங்கள் தெரியுமோ இல்லையோ அந்த இடத்தில் பிராமணர்கள் நியமிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. 

பெண் அர்ச்சகர்கள்
எனவே தமிழில் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுசெயல்படுவது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழகத் திருக்கோயில்களில் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்கிற அறிவிப்போடு, “பெண்களும் அர்ச்சகர்களாகலாம்” என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். பெண்கள் எப்படி அர்ச்சகராகலாம்? என்று பலர் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம் என்கிற கோட்பாடு வந்துவெகு நாளாகிவிட்டது. தமிழகமெங்கும் உள்ள பல அம்மன்கோயில்களின் கருவறையில் அம்மன் சிலை நிறுவப்பட்டு, அந்த அம்மன் கோயில்களில் ஆண்கள் பூஜை செய்து வரும்போது, அந்த கருவறையில் இருக்கும் பெண் (அம்மன்) திருக்கோயிலுக்கு ஏன் பெண்கள் அர்ச்சகராக பணியாற்றக் கூடாது. இந்து சமய அறநிலையத்துறையின்  அலுவலகங்களிலும்,  திருக்கோயில் அலுவலகங்களிலும் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 
திருக்கோயில்களில் பெண்கள் நிர்வாக அதிகாரிகளாகவும்,  உதவி ஆணையர்களாகவும், துணை ஆணையர்களாகவும், இணை ஆணையர்களாகவும்,  கூடுதல் ஆணையர்களாகவும் திறமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த விபரங்கள் அறிவார்ந்த பெரியோர் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இதில் ஒரே ஒரு கட்டுப்பாடு என்னவெனில் அறநிலையத்துறையில் பணிபுரிபவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பழைய ஆச்சாரங்கள் இருக்கும் போது, பிராமண வகுப்பைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் மற்ற சாதியினரும் கடல் கடந்து வெளிநாடு சென்று பணியாற்றிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. திருக்கோயில்களில் இளம்பெண்கள் தேவதாசிகளாக பணியாற்றி வந்தது சரியானதே என்று பழமைவாதிகள் வாதிட்ட போதும், அம்முறை நீதிக்கட்சி ஆட்சியின் போது ஒழிக்கப்பட்டு  பெண்களுக்கு சம நீதிவழங்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது திருக்கோயில்களில் பெண்களுக்கும் உரிய பயிற்சியளித்து அர்ச்சகராக நியமனம் செய்யப்படுவது ஆண்களுக்குப் பெண்கள் சமமானவர்கள் என்பதை நிலை நாட்டுவதாக இருக்கும். 

கட்டுரையாளர் : க.ஆறுமுகம், முன்னாள் மாநிலத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் சங்கம், சென்னை. 

(உதவி ஆணையர்) ஓய்வு, இந்து சமய அறநிலையத்துறை

;