articles

img

நூற்றாண்டு வரலாற்றை அசைபோடும் மக்கள் மன்றம்... (முதல் பத்தி)

‘‘இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பின்புதான் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாகின’’.

                                      ####### 

இதற்கு முன்பு வரை, சட்டம் இயற்ற தனி அமைப்பு என்றில்லாமல் சட்டமியற்றுதல், நிர்வாகம் மற்றும் நீதி வழங்குதல் அனைத்தும் மன்னர்கள்தான்.

                                      ####### 

ஆரம்பக் காலத்தில் ஒழுங்கு முறைகள் இயற்றும் அதிகாரம் 1799-ல் தொடங்கப்பட்ட ஆளுநரின் நிர்வாக சபையோடு இணைந்திருந்தாலும், சட்டமன்றம் என்ற அமைப்பு பிற்காலத்திலேயே தோன்றியது.

                                      ####### 

சட்டமன்றங்களின் தொடக்கத்திற்கு ‘‘1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்’’ வித்திட்டது. இதன் மூலம் முதன்முறையாக ஆளுநர்- ஜெனரலின் நிர்வாக சபையில் சட்டம் இயற்றுவதற்கு என்று ஒரு அறிஞர் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு வாக்களிக்கும் அதிகாரம் தரப்படவில்லை.

                                      ####### 

அன்றைய காலகட்டத்தில், ஆளுநர்-ஜெனரலாக இருந்தவர் ‘பெண்டிங் பிரபு’. இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது மேகலா பிரபு. இவர்தான் நிருவாக சபைக்கு நான்காவது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். பிரதிநிதித்துவ அமைப்பு இந்தியாவிற்கு வேண்டும் என்றும் ஒரு சிறந்த அரசமைப்புச் சட்டம் வேண்டும் எனவும் அவர் விரும்பியிருக்கிறார்.

                                      ####### 

அதனைத் தொடர்ந்து ,‘‘1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்’’ மூலம் வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை, பம்பாய், உத்தரப்பிரதேசம், வடமேற்கு மாகாணங்களில் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பிரதிநிதி உட்பட 12 உறுப்பினர்களை கொண்டதாக ஆளுநர்- ஜெனரல் சபையை  அமைக்கப்பட்டது.

                                      ####### 

அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்து ‘எலியட்’ என்பவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகே சட்டம் உறுப்பினர் சட்டமியற்றும் கூட்டங்களில் மட்டுமல்லாது இதர கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் முழு உறுப்பினர் என்ற உரிமையை பெற மெகா பெற வழிவகை செய்திருக்கிறார்.

                                      ####### 

1857 ஆம் ஆண்டில் விக்டோரிய மகாராணி பிரகடனத்தின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய நாட்டின் பகுதிகள் இங்கிலாந்து மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கம்பெனியின் பொறுப்புகளை இங்கிலாந்து பாராளுமன்றம் முழுமையாக அபகரித்துக் கொண்டது. இந்திய விவகாரங்களுக்கான அரசு செயலாளரும் அமர்த்தப்பட்டு அப்போது ஆளுநர்-ஜெனரலாக ‘கானிங் பிரபு’ வைஸ்ராய் என்று அழைக்கப்பட்டு உள்ளார்.

                                      ####### 

1861 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய சட்டமன்றங்கள் சட்டமே சட்டமன்றங்களின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம். இந்த சட்டத்தின் கீழ் அமைந்த மன்றத்திற்கு ‘‘Madras legislative council’’  (மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில்) ‘‘மெட்ராஸ் சட்டமன்ற சபை’’ என்று பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டாலும்,  “புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் கவுன்சில்” என்றே அழைக்கப்படும் என இந்திய அரசு முடிவெடுத்தது. அந்த அவைக்கு சி.சங்கரன் நாயர், வெங்கடகிரி ராஜா, வி.பாஷ்யம் அய்யங்கார் போன்றோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

                                      ####### 

அதனைத் தொடர்ந்து, 1885 ஆம் ஆண்டு தமது நாட்டின் (இங்கிலாந்து) நிர்வாகத்தில் இந்திய மக்களுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றும் சபையில் ‘பிரதிநிதித்துவம்’ கொள்கைப்படி (principle of Respresentation) தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின.

                                      ####### 

பொறுப்பாட்சியில், இந்திய மக்களுக்கு அதிக பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் விளைவாக உருவானது ‘‘மின்டோ-மார்லி’’ சீர்திருத்தம். பிறகுதான் ‘‘1909 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்’’ நிறைவேற்றப்பட்டு மறைமுகத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

                                      ####### 
இதற்கிடையில், நாட்டில் உருவான சுதந்திரப் போராட்ட எழுச்சி, ஆங்கிலேய ஆளுநர், அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட முட்டல், மோதல்களே ‘‘மான்டேகு -செமஸ்போர்டு’’ சீர்திருத்தம் கொண்டுவர வழிகோலியது. பின்னர், 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கொண்டு  வந்து, வரி அல்லாத தீர்வை செலுத்துவோருக்கு மட்டும் ‘வாக்குரிமை’ என்கிற அடிப்படையில் முதன் முதலில் தேர்தல் நடைபெற இந்த சட்டம் வழிவகை செய்தது.

                                      ####### 

அதுவரை ஆளுநரின் நிர்வாக சபையின் ‘நிழலாக’ இருந்த சட்டமன்றங்கள் தனித்து இயங்கும் ஒரு அமைப்பாக மாறியது. அதிகாரிகளின் மேல் ஆதிக்கம் குறைந்தது. மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த மன்றமே தனித்தியங்கும் சட்டமன்றத்தின் தொடக்கம் என்றும் கருதப்படுகிறது.

                                      ####### 

அன்றைக்கு, சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை ‘மெட்ராஸ் சட்டமன்றப் பேரவை’ என்று அழைக்கப்பட்ட சட்டமன்றம், 127 உறுப்பினர்கள் கொண்டதாகும். இதில் 98 உறுப்பினர்கள் மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
29 பேர் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் அடங்குவர். இதோடு மட்டுமல்லாமல் 4 பேர் ஆளுநரின் நிர்வாக சபை உறுப்பினர்கள். இந்த 4 பேரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் அவர்கள் மீது சட்டமன்ற ஆளுமை செலுத்த இயலாது.

                                      ####### 

இந்த சட்ட மன்றங்களில் “இரட்டை ஆட்சி” முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றும் சிறப்பு நேர்வுகளில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும் சட்டம் வழிவகை செய்தது. பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வருவதற்கான உரிமை முதன்முதலாக வழங்கப்பட்டது எனினும் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று வரையறுக்கப்பட்டது.

                                      ####### 

வரவு-செலவு திட்டத்தின் மீதும் வாக்கெடுப்பு நடத்தவும் வழிவகை ஏற்பட்டது. மானியக் கோரிக்கைகளின் தொகையை அதிகரிக்கவோ, குறைக்கவோ அதிகாரம் இருந்தாலும் அனைத்திற்கும் ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டும். சட்டங்கள் இயற்றினாலும் அதை நிராகரிக்கும் உரிமையும் ஆளுநருக்கு இருந்தது. அந்தச் சட்டம் தேவை எனக் கருதினால் அன்றைக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி ஒப்புதல் தர வேண்டும்.

                                      ####### 

ஆளுநரே சட்டமன்றத்தின் கூட்டங்களை நடத்தாமல் அதற்கென தலைவர் (முதலமைச்சர்) நான்காண்டுகளுக்கு நியமிக்கவும், தலைவர் தேர்ந்தெடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. அதன் பிறகு, 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம்‌ தேதி ராஜகோபாலச்சாரியார் முதலாவது சட்டமன்ற தலைவராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவ பிள்ளை துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

                                      ####### 

இப்படியாக இந்தியாவில் கட்சி ஆட்சி முறை நடைமுறைக்கு வர, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் வழிவகை செய்தது. இச்சட்டத்தின்படி, முதல் தேர்தல் 30.11.2020,1.12.1920 மற்றும் 2.12.1920 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. 98 இடங்களில் 63 இடங்களை வென்ற நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து. அந்தக் கட்சியின் தலைவர் சர் பிட்டி. தியாகராய செட்டியார் முதலமைச்சராக பொறுப்பேற்க மறுத்ததை தொடர்ந்து 17.12.1920 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சுப்புராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார்.

                                      ####### 

சட்டமன்ற வரலாற்றில், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மற்றும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்த போது சென்னை உட்பட சில மாகாணங்களில் சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை (legislative assembly legislative council) என்று ஈரவைகள் (Bicameral legislatures) கொண்ட சட்டமன்றங்களை அறிமுகப்படுத்தியது.  இந்த சட்டத்தின்படி மாகாணத்தில் சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

                                      ####### 

மாகாண சட்டமன்றங்களுக்கு அதற்கு முன்பு இருந்ததைவிட அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஒன்றிய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே அதிகாரங்கள் பிரிக்கப்பட்டன. ஒன்றிய பட்டியல் (federal list) மாகாண பட்டியல் (Provincial list), பொதுப் பட்டியல் (Concurrent list) என்று துறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டன.

இந்த கட்டுரைத் தொகுப்பு 4 மற்றும் 5-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பத்தி மட்டும்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பத்தி 5-ஆம் பக்கம் பார்க்கவும்....    

ஆதாரம் : புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலகம் திறப்பு விழா சிறப்பு மலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா மலர், தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூலகம், தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்புகள்...

தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு

;