articles

img

மின்துறையில் ஒரு மெகா ஊழல்...

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் நமது மாநில மக்களுக்கு பல தீங்குகளை இழைத்துள்ளது.

அவற்றில் மிக முக்கியமானவை நிதி மேலாண்மை திறமையின்மை காரணமாக வரலாறு காணாத அளவு கடனை வாங்கியதும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மையமாக இருப்பதும் ஆகும். ஊழல் குற்றச்சாட்டுகளில் இன்று மேலோங்கி முன்வந்துள்ள முக்கியமான ஒன்று மின்சார வாரியத்தில் குறிப்பாக மின் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் முக்கியமானவை! இந்த முறைகேடுகளை முன்வைத்துள்ளது எதிர்க்கட்சிகள் அல்ல; மாறாக சிஏஜி எனப்படும் மத்திய அரசின் தணிக்கை ஆணையம்! இவற்றை தொகுத்து அறப்போர் இயக்கம் எனும் அமைப்பு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாராக தந்துள்ளது. இதற்கு முன்பாகவே மின்வாரிய தொழிற்சங்கங்கள் குறிப்பாக சிஐடியு மின் கொள்முதலில் உள்ள முறைகேடுகளை தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சிஐடியுவின் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இப்பொழுது தணிக்கை ஆணையம் மின் ஊழலை மிகவலுவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தணிக்கை ஆணையத்தின் அறிக்கையை மாநில அரசாங்கம் சட்டமன்றத்தில் விவாதத்துக்கு முன்வைக்க வேண்டும். ஆனால்எடப்பாடி அரசாங்கம் அதனை செய்யவில்லை. அதில் ஆச்சரியம் இல்லை.

இந்த ஊழலுக்கு அடித்தளம் நவீன தாராளமயக் கொள்கைகளும் அதன் விளைவாக உருவான தனியார்மயமும் தான். முற்றிலும் அரசுத்துறையில் இருந்த மின்சார உற்பத்தியை 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தை வாஜ்பாய் அரசாங்கம் திருத்தியதன் மூலம் தனியார் நுழைந்தனர். தாம் தயாரிக்கும் மின்சார உற்பத்தியை விற்க வேண்டிய அவசியம் தனியாருக்கு உருவானது. எனவே அவர்கள் மின்வாரியங்களை வளைத்து எவ்வித முறைகேடு செய்வதற்கும் தயாராக இருந்தனர். மறுபுறம் இந்தசூழலை தமது பைகளை நிரப்பிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள மாநிலங்களை ஆளும் சில அரசியல்கட்சிகள் தயாராக இருந்தன. தமிழக சூழல் இந்த இரண்டு தேவைகளும் சங்கமிக்கும் புள்ளியாக அமைந்தது. விளைவு? ஒரு மெகா ஊழல்!

இழப்புகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!
2010களில் தமிழகம் கடுமையான மின்பற்றாக்குறை யால் தவித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என அதிமுக கூறியது. ஆட்சிக்கும் வந்தது. மின்மிகை மாநிலமாக மாற்றுவது எப்படி? அதற்கு ஒரே வழி கூடுதல் மின்னுற்பத்தி திட்டங்களை கொண்டு வருவதுதான்! இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்த அதிகப்படியான செலவும் நீண்ட கால வெளியும் தேவை என்பதுதான்! உதாரணத்துக்கு அனல்மின் திட்டத்தில் ஒரு மெகாவாட்டுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 கோடி ரூபாய்தேவை. ஒரு திட்டம் உருவாக குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தேவைப்படும். இது இந்திய அனுபவம்.

புதிய திட்டங்கள் உருவாகும் வரை தமிழக மின்பற்றாக் குறையை குறைக்கும் பணி காத்திருக்க இயலாது. எனவே அதிமுக அரசாங்கம் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்ய தீர்மானித்தது. மின் கொள்முதலுக்கான டெண்டர் முடிவு செய்ததில்தான் ஏராளமான முறைகேடுகள் உருவாகின. எந்த வகையில் எல்லாம் மின்துறைக்கு நட்டம் ஏற்பட்டது என்பதை தணிக்கை ஆணையம் கீழ்கண்டவாறு பட்டியலிட்டுள்ளது;u    Merit Order of Dispatch எனும் முறையை பின்பற்றாத காரணத்தால் குறைந்த விலைக்கு பதிலாக அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் இழப்பு- ரூ.18,843.63 கோடி. இதனை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உறுதி செய்துள்ளது. இந்த இழப்பு 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரைதான்! அதற்கு பிறகு எவ்வளவு இழப்பு என்பது இனிதான் தெரியவரும்.

$   மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் திட்டமிடப்பட்ட காலத்தில் செயல்படுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக திட்டச்செலவு அதிகரித்தது. இதன் விளைவாக இழப்பு -ரூ.2381.54 கோடி. இந்த இழப்பை மத்திய அரசாங்கத்திடம் வாதாடி கேட்டு பெறும் நிலையில் தமிழக அரசாங்கம் இல்லை.

$  மேற்கண்ட பிரச்சனை காரணமாக தமிழக அரசாங்கம் தனியாரிடம் கொள்முதல் செய்த வகையில் கூடுதல் செலவு- ரூ.2099.48 கோடி.

$  நீண்ட கால ஒப்பந்தம் போட்ட வெளி மாநில 8 தனியார் நிறுவனங்களிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ததில் இழப்பு-ரூ.712.03 கோடி.

$  மாநிலத்துக்குள் தனியாரிடம் போட்ட குறுகிய கால ஒப்பந்தங்களில் தரப்பட்ட கூடுதல் விலை காரணமாக இழப்பு- ரூ.1055.84 கோடி.

$  இந்த தனியார் நிறுவனங்களிடம் 85 சதவீதத்திற்கும் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்ததால் மின்வாரியம் கட்டிய அபராதம்- ரூ.323.64 கோடி.

$  சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களின் காலதாமதத்தால் மின்வாரியம் கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் இழப்பு- ரூ.605.48 கோடி.

$  மத்திய தொகுப்பில் குறைவான விலைக்கு மாறாக அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் இழப்பு- ரூ.350 கோடி.

$  ஒப்பந்தப்படி மின்சாரம் தராத தனியாருக்கு அபராதம் போட மின்வாரியம் தவறிய காரணத்தால் இழப்பு- ரூ.827.64 கோடி.

$  விதிகளுக்கு மாறாக நாப்தா எரிபொருள் பயன்படுத்திய தனியாரிடம் கொள்முதல் செய்ததால் இழப்பு- ரூ.493.74 கோடி.

$  மின் பாதைகளில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் மின்சாரத்தை அளவீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இழப்பு- ரூ.242.92 கோடி.

$  இதுபோல வேறு சில இழப்புகளையும் கணக்கிட்டு 2013-18 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மின்வாரியம் சுமார் ரூ.30,000 கோடிக்கும் அதிகமாக  இழப்பை சந்தித்துள்ளது என தணிக்கை ஆணையம் குறிப்பிடுகிறது.

தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வளவு பெரிய இழப்புகள் மின் கொள்முதலில் மட்டும் நடந்துள்ளது. கூடுதல் விலை கொடுத்தது/ தனியாரிடம் பெற வேண்டிய அபராதத்தை விட்டுக்கொடுத்தது/ தேவை இல்லாமல் அபராதம் தனியாருக்கு கட்டியது என பலவிதங்களில் இழப்புகள் அரங்கேறியுள்ளன. கூர்ந்து கவனித்தால் இதன் பலன்கள் விதிவிலக்கில்லாமல் தனியாருக்கு போய் சேர்ந்துள்ளன. இதற்கு கைமாறு இல்லாமல் இருக்கும் என தமிழக அரசியல் அறிந்த எவரும் நம்பமாட்டார்கள். யாருக்கு கைமாறு? எவ்வளவு? என்பதுதான் கேள்வி.

தமிழகம் மின்மிகை மாநிலமா?
இவ்வளவு இழப்புகளையும் உருவாக்கிய பிறகும் தமிழகம் மின்மிகை மாநிலம் என அதிமுக அரசாங்கம் கூச்சமின்றி கூறுகிறது. ஆனால் உண்மையில் தமிழகம் மின் மிகை மாநிலமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகும். 

                                                                                                                       2013-14                                2017-18

அதிகபட்ச மின் தேவை (Peak demand)/மெ.வா.                             15,532                                   22,375

மின்வாரியம் பூர்த்தி செய்த தேவை/மெ.வா. (அ)                       12,492                                   14,975

மின்வாரியத்தின் சொந்த உற்பத்தி திறன்/மெ.வா.(ஆ)           6860                                       7144

இடைவெளி (அ-ஆ)                                                                                   5632                                       7831 

2017-18 ஆம் ஆண்டு தமிழகத்தின் மின் தேவையில் தனது உற்பத்தித் திறனைவிட கூடுதலாக இடைவெளி இருந்துள்ளது. இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டுதான் தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அரசாங்கம் கதை அளக்கிறது. 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்பொழுது மின்சார அமைச்சர் முன்வைத்த கொள்கைக் குறிப்பில் தமிழகத்தில் 31,894 மெ.வா. திறனுள்ள மின் திட்டங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழகத்தின் சராசரி தேவை என்பது சுமார் 16,000 மெ.வா. எனவே தமிழகம் மின்மிகை மாநிலம் என கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. 

உண்மை நிலை என்ன?
மாநில அரசாங்கத்துக்கு சொந்தமான அனல் மற்றும் புனல் மின்நிலையங்கள் 7157 மெ.வா. மின் உற்பத்தியை தரவல்லவை. மத்திய தொகுப்பிலிருந்து 6166 மெ.வா. கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆக, அரசாங்கத்தின் நேரடி அதிகாரத்தில் உள்ளது 13,323 மெ.வா. மட்டுமே! மற்ற அனைத்தும் மாநிலத்துக்குள் அல்லது மாநிலத்துக்கு வெளியே உள்ள தனியாரிடம் தமிழக அரசாங்கம் விலை கொடுத்து வாங்க வேண்டும். தனியாரிடம் வாங்கும் பொழுதுதான் முறைகேடுகளுக்கும் களம் உருவாகிறது. 

$ தமிழகம் உண்மையிலேயே மின்மிகை மாநிலம் எனில் சுமார் 5,112 மெ.வா. மின்சாரத்தை அதுவும் பெரும்பாலானவை வெளி மாநில தனியாரிடம் வாங்க ஏன் குறுகிய கால/ நீண்ட கால ஒப்பந்தங்கள் (2028 ஆம் ஆண்டு வரை)போடப்பட வேண்டும்?

$   காற்றாலை மின்சக்தி-8507 /சூரிய ஒளி மின்சக்தி- 3974 மெ.வா. உட்பட சுமார் 13,458 மெ.வா. மாற்று எரிசக்திகொண்ட மின்சாரத்தை ஏன் அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை?

$  அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் தனியார் அனல் மின் நிலையங்களிடம் அதிக விலை கொடுப்பதை தவிர்க்க முடியுமே! ஏன் தமிழக அரசாங்கம் இதனை செய்ய வில்லை?

$  காற்றாலை மின்சக்தி நிறுவனங்கள் தமக்கு கோடிக்கணக்கான ரூபாயை தமிழக அரசாங்கம் நிலுவை வைத்துள் ளது என புகார் பட்டியல் வாசிக்கக் காரணம் என்ன? 

$ காற்றாலை நிறுவனங்கள் தமிழக அரசாங்கத்துக்கு மின்சாரம் தருவதால் தமக்கு பலன் இல்லை என்பதால் நேரடி யாக பயனீட்டாளர்களுக்கு மின்சாரம் தருகின்றனவே! அது ஏன்? தமிழக அரசாங்கத்தின் திறமையின்மைக்கு அது சான்று இல்லையா? இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆனால் தமிழக அரசாங்கத்திடம் பதில்தான் இல்லை.

2013-18 ஆண்டுகளில் சுமார் 41,706 மில்லியன் யூனிட்டுகள் அளவுக்கு மின் உற்பத்தியை மாநில அரசாங்க திட்டங்கள் குறைவாக உற்பத்தி செய்துள்ளன என தணிக்கை ஆணையம் கூறுகிறது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அரசாங்கமே திட்டமிட்டு மின் உற்பத்தியை குறைத்தது என ஆணையம் குறிப்பிடுகிறது. மிக மலிவான தனது சொந்த மின் உற்பத்தியை ஏன் அரசாங்கம் குறைக்க வேண்டும்? இதனால் பலன் அடைவது யார்? நிச்சயமாக தனியார் மின் உற்பத்தியாளர்கள்தான்! ஆனால் பலன் அவர்களுக்கு மட்டும்தானா? வேறு சிலரும் பலன் அடைந்துள்ளனர். ஆனால் நட்டம் தமிழக மக்களுக்கு! தமிழகத்தின் நிதிநிலைமைக்கு இது சீர்கேடு! கொடுமை என்னவெனில், தனியாரிடம் மின்சாரம் வாங்க 2028 ஆம் ஆண்டு வரை நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? 2013 முதல் 2018 வரை நடந்த முறைகேடுகளும் அதன் விளைவாக ஏற்பட்ட சுமார் ரூ.30,000 கோடி போன்ற இழப்பும் இன்னும் 15 ஆண்டுகளுக்கு தொடரும் ஆபத்து உள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்துவது மிக அவசியம் ஆகும். இது போன்ற பல முறைகேடுகள் தமிழகத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளன. இதற்கு காரணமான அதிமுகவை தமிழக மக்கள் எதிர்வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வலுவாக தோற்கடிப்பது உறுதி. 

கட்டுரையாளர் ; அ.அன்வர் உசேன்

;