articles

img

20 லட்சம் வேலைவாய்ப்பு... யாரை ஏமாற்ற?

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை பிப்ரவரி 16 செவ்வாயன்று வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில் முக்கிய அம்சமாக 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என நீட்டி முழக்கியுள்ளார். வேலைவாய்ப்பில் தமிழகத்தின் லட்சணம் குறித்து முதலமைச்சருக்கு கேள்விக் கணைகளை தொடுத்திருக்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா.

1. அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்... மனச்சாட்சியுடன் தான் பேசினீர்களா முதல்வரே?

2. கடந்த நான்காண்டுகளில் முதலமைச்சராக  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் எங்கெங்கு யார் யாருக்கு? என்ற விவரத்துடன் எத்தனை வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது என்று சொல்வதற்கு முதல்வர் தயாரா?

3. கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நாலரை லட்சம் அரசு பணியிடங்களையும் மாநில அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் 3 லட்சம் காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல் இருந்தது ஏன்?

4.எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தமிழக மின்சார துறையில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் கேங்மேன்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்காதது ஏன்?

5. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பாஜக ஆதரவு அதிமுக அரசின் கொள்கையால் தமிழகத்தில் மூடப்பட்ட ஐம்பதாயிரம் தொழில் நிறுவனங்களை திறப்பதற்கு உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

6. ஓய்வு பெறும்  வயதை 60 ஆக உயர்த்தி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை கொரோனா காலத்திலும் பறித்துவிட்டு போலி வேஷம் போட்டு பொய்களை அள்ளி விடுவது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்கா? நானும் விவசாயி தான் என்று கூறிக் கொண்டே விவசாயிகள் விரோத சட்டத்தை ஆதரித்தது  போல் தானே!

7. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தும், பலர் பதிவு செய்யாமலும், தொடர்ந்து படித்து முடித்து வரக்கூடிய இளைஞர்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கக் கூடிய நேரத்தில் 4 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்பு என்பது யாரை ஏமாற்றுவதற்காக? மீதி பேருக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? மோடி சொன்னது போல பக்கோடா கடை வைத்துக் பிழைத்துக் கொள்வதா? 

8. ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது அதிமுக அரசாங்கம். கடந்த பத்தாண்டுகளில் வேலை தந்த 20 லட்சம் பேரின் பெயரை - பட்டியலை வெளியிடத் தயாரா?

9. ஏற்கனவே ரூ.2 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று முதலீட்டாளர் மாநாட்டில் அறிவித்தீர்கள் நினைவிருக்கிறதா? அந்த வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்கு கிடைத்தது? யார் யாருக்கு கிடைத்தது? புள்ளிவிவரத்தை வெளியிடும் துணிவு இருக்கிறதா?

10.வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் அதிமுக அரசு, கடும் சிரமத்தில் தமிழக சிறு மற்றும் குறு தொழில்களில் உள்ள வேலை வாய்ப்பையும் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளைப் பேசுமா?

11. தமிழக அரசு சார்பில் பல கோடி செலவில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் வேலையின்மை விகிதம் குறித்த புள்ளிவிவரங்கள் உண்மையானதா? அது எந்த அரசு நிறுவனத்தின் விவரம் என்று வெளிப்படையாக தெரிவிக்கலாமா?

12.குறை தீர்க்க 1100 எண்ணை அழைக்கச் சொல்லி உள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் அழைத்தால் வேலை தருவீர்களா?

13. தேர்வாணையத் துறையின் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? தேர்வு மற்றும் பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உண்மையைப் பேசுவீர்களா?

14.தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடான முறையில் 757 ஓவர்சீயர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் கொண்டு நிரப்ப முயற்சி செய்தது ஏன்?

15.தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்? பணி நியமனம் ஏன்?
 

;