articles

img

தொடர் மழையால் சம்பா, தாளடி சாகுபடியில் இழப்பு... நிவாரணத்தை எதிர்பார்த்து விவசாயிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அண்மையில் இலங்கை மற் றும் குமரி கடல்பகுதியை ஒட்டிவளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பெய்த தொடர் மழையால்டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு சொல்லொண் ணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒருவார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை. திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் ஏற்கனவே நிவர் மற்றும் புரெவி புயலில் சிக்கி அதிலிருந்து தப்பித்து வந்துள்ள நிலையில் தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கடும் பாதிப்படைந்துள் ளது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. தென்மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையினால் பயிர்கள் கடும் சேதமாகியுள்ளது.
சுமார் 5.60லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாக அரசு தகவல்களே தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளனர். இந்த மழையின் தாக்குதலால் சிஆர்-1009, கோ-46,51, ஐஆர்-;20 ஆகிய பயிர்கள் முழு கதிருடன் தலை சாய்ந்தும் வயல்வெளிகளில் வீழ்ந்தும் கிடக்கின்றன. அதோடு தாளடி நெற்பயிர்கள், உளுந்து, கடலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தலைசாய்ந்து படுத்துவிட்டன. வயல்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு தற்போதைக்கு எந்த சாத்தியமும் இல்லை. நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. சற்றே தாமதமாக நட்ட பயிர்களும்கூட தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்து வீச்சம் எடுத்துவிட்டன. இப்போது தாளடி, சம்பா பருவங்களில் விளைந்து களத்துக்கு வரும் முன்பே இயற்கை முற்றுமுழுதாக சூறையாடிவிட்டது.

 கடந்த நவம்பர் மாத கடைசியில் நிவர் புயலாலும் டிசம்பர் மாத தொடக்கத்தில் புரெவி புயலாலும் அடுத்தடுத்து வந்த தொடர்மழையாலும் காவிரி படுகை மட்டுமல்லாமல் கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள வயல்களும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. டிசம்பர் முதல் வாரத்தில் புரெவி புயலை ஒட்டி தொடர்ந்து பெய்த மழையில் தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்வயல்கள் நீரில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்வயல்கள் மற்றும் திருவாரூர்மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்வயல்கள் மூழ்கின. 

 ஏற்கனவே நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.600 கோடிஅளிக்கப்படும். நெற்பயிர்க்கு ஹெக்டேர்ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்என முதல்வர் ஜனவரி மாத தொடக்கத் திலேயே உறுதியளித்திருந்தார். ஆனால் அது இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. வங்கி கணக்குகளிலும் அரைகுறையாகத்தான் நிவாரணம் செலுத்தப்படுகிறது என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்பொது டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழையால் 6லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்நெற்பயிர்கள் கடுமையாக பாதித்துள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 2லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.  இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம்முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. திருத்துறைப்பூண்டி பகுதியில் அழிந்துபோன பயிர்களை கைகளில் ஏந்தி நியாயம் கேட்டு விவசாயிகள்ஊர்வலம் நடத்துகின்றனர். விளைநிலங்களுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்தஆண்டுகளை போல் குளறுபடியில்லாமல் விடுபடாமல் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவ
சாயிகளின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். 

- ஆரூரான்
 

;