articles

img

காலத்தை வென்றவர்கள்.... தியாகி நாவலன்....

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை  என 4 மாவட்டங்களாக உருவான பின்பும் உழைப்பாளி மக்களுக்கான போராட்ட பாதையில் கம்யூனிஸ்ட் இயக்கம் பயணிக்கிறது.            

இந்திய சமூகத்திற்கும், விடுதலை போராட்டத்திற்கும் பாடுபட்டவர்கள் பலர். அதில் குறிப்பாக கம்யூனிஸ்ட்களின் தியாகம் என்பது அளப்பரியது. கடலூர் குமார் ஆனந்தன், பள்ளிப்பாளையம் வேலுச்சாமி, இடுவாய் ஊராட்சி தலைவர் ரெத்தினசாமி, தியாகி லீலாவதி, கண்ட மங்களம் சுரேஷ், நெல்லை கோபி என பட்டியல் தொடர்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் போராளிகள் வர்க்கப் போராட்டத்தில் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். நானலூர் நடேசன் முதல் பேரளம் நாவலன் வரை நீண்ட பட்டியல் உள்ளது. களப்பால்குப்பு, இரணியன், சிவராமன், சிக்கல் பக்கிரிசாமி, பூந்தாழங்குடி பக்கிரியை தாண்டி தஞ்சை என். வெங்கடாசலம் புளிச்சக்காடி தங்கையன், அம்மையப்பன் கண்மணி, தோழர் நாவலன் என அந்தப்பட்டியல் நீளமானது.

சாதாரண கிராமப்புற ஏழை, எளிய மக்களை பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த உயர்த் தியாகம் என்றென்றும் போற்றுதலுக்குரியது. 1955ஆம்ஆண்டு ஜெகநாதன்-முத்துலெட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாக தோழர் ஜே.நாவலன். அவரது தாய்மாமன் ஊரான திருமருகல் அருகே உள்ள போலகம் என்னும் கிராமத்தில் பிறந்தார். பிறகு பில்லூர் கிராமத்தில் வளர்ந்த இவர் துறு துறுவென்றும் முற்போக்கான காரியங்களில் ஆர்வமுடன் செயல்படுபவராகவும் இருந்தார். “விளையும் பயிர்” முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவரின் செயல்பாடு போகப் போக மிகவும் துடிப்பாகவும், துணிவுடனும் அமைந்தது. பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் கல்வி பயின்றார். தனது பள்ளிப் பருவத்தின்போது விளையாட்டிலும், தேசிய மாணவர் படையிலும் (என்.சி.சி) சேர்ந்து பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டியவர், திருமெய்ச்சூர் கிராமத்தில் தனது இளமைப் பருவத்திலேயே சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் சேர்ந்து வாலிபர்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார்.

பிறகு இவ்வமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அகில இந்திய அமைப்பாக உருவானது. அதன் நன்னிலம் வட்ட மாநாடு நடைபெற்றபோது அந்த மாநாட்டில் அப்போதைய மாநில துணைத் தலைவராக செயல்பட்டு வந்த தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில்தான் அமைப்பின் வட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னாளில் நாவலன் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அவரது அயராத பணியின் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், வி.தொ.ச மாவட்ட செயலாளராகவும் செந்தொண்டர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளராகவும் திறம்பட செயல்பட்டார்.                

தனது வாழ்நாள் முழுவதும் போராளியாக திகழ்ந்த நாவலன் திருமெய்ச்சூர் கிராமத்தில் கள்ளச்சாராய சமூக விரோதிகளை எதிர்த்து மக்களை திரட்டி போராடினார். இதனால் கோபம் அடைந்த சமூக விரோதிகள் தோழர் நாவலனை தீர்த்து கட்ட ரகசியமாக முடிவு செய்தனர். தியாகிகள் தினமான 2011 ஜனவரி 19அன்று  அஞ்சான் நாகூரான் தியாகிகளுக்கு திருமெய்ஞானம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பும் போது கொட்டூர் மாங்குடி என்ற இடத்தில் மறைந்திருந்து வழிமறித்து கொலை செய்தனர் சமூக விரோதிகள்.

நான் சாகடிக்கப் படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன் என்ற புரட்சியாளர் சேகுவேராவின் வரிகளுக்கு இணங்க வீரத்தின் விளைநிலமாக தோழர் நாவலன் மக்களின் மனதில் வாழ்ந்துவருகிறார்.

இன்று தியாகி ஜெ.நாவலன் நினைவு நாள் ஜனவரி 19

===ஐ.வி.நாகராஜன்====

;