articles

img

நகர்ப்புற உள்ளாட்சி: அரசு செய்ய வேண்டியது என்ன?

2020ல் கடந்த அதிமுக ஆட்சியில் செப்டம்பர் 16ஆம்தேதி நகர ஊரமைப்புசட்டம் 21 ஆம் பிரிவு திருத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த முன்மொழிவை திமுக சட்டமன்ற உறுப்பினரும் இன்றைய சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி கடுமையாக எதிர்த்தார். இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தீக்கதிரில் விரிவான கட்டுரை எழுதினார். முரசொலியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். அதேபோல் இன்றைய தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜனும் கடுமையாக எதிர்த்தார். இந்த சட்டம் என்பது சாதாரண ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் மக்களிடம் கருத்து கேட்காமல் ஒருவருடைய நிலத்தை வீட்டை எடுப்பது என்பது வழிப்பறிக் கொள்ளைக்காரன் செயல்பாடு போல் இருக்கும் என்று திமுகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்தன. இந்த சட்டத்திருத்தத்தின் விளைவாக கோவையில் ஒரு இடத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் கேட்காமலே நிலத்தை எடுத்ததன் காரணமாக அவர் பெற்ற நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அந்த சட்டத் திருத்தத்தை இன்றைய தமிழக அரசு  வாபஸ் வாங்குவது என்பது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு குறிப்பாக நகர்ப்புற மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

வறுமைக்கோடு பட்டியல்
உள்ளாட்சி அமைப்புகளில் வறுமைக்கோடு பட்டியல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் தான்பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த 2007ஆம்வருடம் இன்றைய முதல்வர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பொழுது தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வறுமைக்கோடு பட்டியல் எடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக அரசு இப்போது நேரடியாக மகளிர்திட்ட அமைப்பின் மூலம் வறுமைக்கோடு பட்டியல் எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எந்த ஒரு உள்ளாட்சி அமைப்புகளிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. நகர்ப்புறங்களில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிஅமைப்புகள் இல்லாத காரணத்தால் தனி அலுவலர்கள் மூலம் இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள் ஏழை, எளிய மக்கள் இலட்சக்கணக்கில் ஏற்கனவே இருந்த 2007 பட்டியலில் இருந்தவர்கள் விடுபட்டுள்ளார்கள் இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் செய்யப்பட வேண்டிய பணியை அரசு அலுவலர்களே செய்ததன் காரணமாக இப்படிப்பட்ட குளறுபடிகள் நடந்து உள்ளன. எனவே தமிழக அரசு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பட்டியலை கணக்கெடுத்து கிராம சபைகள் மூலம் நகர்ப்புறங்களில் நகர் மன்றங்களின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.

குடும்ப அட்டைகள்
குடும்ப அட்டைகளை அதிமுக அரசு நான்கு வகையாகப்பிரித்துள்ளது. இதில் குறிப்பாக ஏஏஒய், 2.முன்னுரிமை உள்ளவர்கள், 3.முன்னுரிமை இல்லாதவர்கள், 4.கவுரவகுடும்ப அட்டைகள்  என்று நான்கு வகையாகப் பிரித்துள்ளது. ரேஷன் கடையிலேயே  உட்கார்ந்து கள ஆய்வு மேற்கொள்ளாமல்  பணியாளர்கள்  அவர்களாகவே மூன்று  வகைகளாகப் பிரித்துள்ளார்கள். இதன் காரணமாக ஏழை,எளிய மக்கள் அனைவரும் முன்னுரிமை பட்டியலில் இல்லாமல் போய்விட்டார்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பல பேர் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் முன்னுரிமை இல்லாதவர்களாகி விட்டார்கள். இப்போது ஒன்றிய அரசு கொடுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் இரண்டு வகை அட்டை காரர்களுக்கு மட்டுமே  கிடைக்கிறது. முன்னுரிமை அற்ற கார்டுகளுக்கு செல்லாது என்று சொல்லிவிட்டது அவர்கள் அரிசி வாங்குவதாக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்க கூடிய பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டது. ஆனால் மாநில அரசு  மூன்று வகை கார்டுகளுக்கு வழங்குகிறது. ஒன்றிய அரசினுடைய பொருட்கள் மிக மிக குறைவான வர்களுக்கு தான் ரேஷன் கடையில் கிடைக்கும் இதற்கு காரணம் அன்றைய அதிமுக அரசு ரேஷன் கடைகளில் அமர்ந்துகொண்டு ஏழை, எளிய மக்களை தவறாக பிரித்துவிட்டார்கள். எனவே தமிழக அரசுஅரிசி வாங்கும் குடும்ப அட்டைகளை முன்னுரிமை கார்டுதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை வரி
ஒன்றிய அரசு குப்பை வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதித்துள்ளது. சென்னையில் குப்பை வரிவிதித்த பொழுது எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்துள்ளது அதே நேரத்தில் கிராம ஊராட்சிகள்முதல்கொண்டு மாநகராட்சிகள் வரை சென்னை நீங்கலாககுப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது கடுமையான பிரச்சனையாக மாறியுள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள்வரிகட்ட முடியாமல் மிகவும் சிரமப்படும் நிலைமை உள்ளது.சொத்துவரிக்கு இணையாக உள்ளது. எனவே தமிழக அரசு முழுமையாக வரியை  ரத்து செய்ய வேண்டும்.

இலவச வீட்டு மனை பட்டா
2007ல் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது தமிழகத்தில் நகர்ப்புறங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பட்டாக்களை இணையதளத்தில் ஏற்றப்படவில்லை. அரசின் கணக்குகளில் கொண்டு ஏறப்படாமல்வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நகராட்சி அலுவலகங்களில் கிடக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு வீட்டு வரி விதிக்க முடியவில்லை. இதன் காரணமாக மின்சாரம் பெற முடியவில்லை. குடிநீர் இணைப்புகள் பெற முடியாமல் தவிக்கிறார்கள். எனவே உள்ளாட்சி நிர்வாகம் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அரசின் கணக்குகளில் ஏற்றி அவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சார வசதி குடிநீர் வசதி கொடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச மனை வீட்டு மனை பட்டா உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச மனை, வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் வகை மாற்றம் செய்யாமல் உள்ள இடங்களை வகை மாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கும் திட்டத்தை துவக்க வேண்டும்.

சொத்துவரி வெளிப்படைத்தன்மை
உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி விதிப்பதில் வெளிப்படைத்தன்மை தேவை இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் சொத்து வரி விதிப்பதற்கு கடுமையாக கடன் வாங்கக் கூடியநிலைமை என்பது ஏற்படுகிறது. எனவே சொத்து வரி விதிப்பது வெளிப்படைத் தன்மையுடன் அமல்படுத்தப்பட வேண்டும். மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வாங்குவது வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட நடவடிக்கை வேண்டும். கடந்த காலத்தில் புதிய வீட்டுமனை அனுமதி வாங்குவதற்கு திமுக அரசு சொல்லியிருந்த கட்டணத்தை விட பல மடங்கு அதிமுக அரசு உயர்த்தி உள்ளது எனவே அந்த கட்டணத்தையும் ரத்து செய்து 2007 இல் இருந்த கட்டணத்தையே வாங்க  வேண்டும்.

சுற்றுச்சூழல்
நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் இன்றைக்கு மிகவும் சிக்கலான பிரச்சனையாக உள்ளது. குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே பிளாஸ்டிக் பைகள் தேவையற்று தயாரிப்பதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பேப்பர்களின் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மேலும் அரசு பணிகளில் அரசு விளம்பர பதாகைகளை துணிகள் மூலம் தான் விளம்பரம் செய்யப்படவேண்டும். பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி நிலையில்  கழிவுநீர் பாதாளச்சாக்கடை  திட்டப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.பல இடங்களில் கழிவுநீர் சிறு சிறு குட்டை போல் தேங்கிஉள்ளது. இதன் காரணமாக சிறு சிறு நோய்கள் பரவும்அபாய நிலை தான் உள்ளது. எனவே கழிவு நீர் முழுமையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெளியேற்றிட சாக்கடைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த அதிமுக ஆட்சியில்  தெருவிளக்கு ஊழல் என்பது மிக முக்கியமாக உள்ளது. எனவே, பல இடங்களில் மின் விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் மின் விளக்குகள் இல்லாத கம்பங்கள் முழுவதும் எல்.இ.டி விளக்குகள் போடவேண்டும்.

தூய்மை பணியாளர்கள்  நியமனம்
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகை கூடுதலாக உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனால் இதற்கேற்ப தூய்மை பணியாளர் இல்லை. கிராமப்புற ஊராட்சிகள் நகராட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளது. சுமார் 10 பேர்தான் தூய்மை பணியாளர்கள் உள்ளார்கள். தெருக்களில் தூய்மை என்பது இல்லாத நிலை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப நிரந்தர தூய்மை பணியாளர்  நியமனம் வேண்டும். 

நகராட்சி பள்ளிகள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கக்கூடிய பள்ளி கட்டிடங்களை  முழுமையாக பழுது பார்க்க வேண்டும்.அல்லது இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். இந்த காலத்தில் ஏராளமான பேர் அரசு நகராட்சி பள்ளிகளில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அரசின் செயல்பாட்டுக்கு கிடைத்த பரிசு.எனவே தமிழக அரசும் கல்வித்துறையும் உள்ளாட்சி அமைப்பும் இணைந்து நகராட்சி பள்ளிகள் அனைத்தும் முழுமையாக நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிகளாக மாற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நகராட்சிகளில் வாசகசாலைகள் கூடுதலாக திறக்க வேண்டும்.இதன் மூலம் செய்தித்தாள் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் ஏழை மாணவர்கள் போட்டி தேர்வு எழுதிட பேருதவியாக அமையும். அரசு நூலகங்கள் வாடகை கட்டிடத்தில்இயங்கி வருவதால் கூடுதல் புத்தகங்கள் வாங்கிட முடியவில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகள் இடம் கொடுத்து உதவிட வேண்டும். இதனால் முதல்தரமான நூலகங்கள் உருவாகும். 

குறை தீர்க்கும் மனுக்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் நிவாரணங்கள் கேட்டும்,அடிப்படை வசதிகள் கேட்டும் ஏராளமான மனுக்கள் மாவட்டஆட்சியருக்கு நகராட்சி ஆணையர், வட்டாட்சியருக்கு  புகார் மனுக்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால் கொடுக்கக்கூடிய மனுக்களுக்கு உடனடியாக பதில் நடவடிக்கை என்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. நகராட்சிகளுக்கு மட்டும் புகார் தெரிவிக்க தனியான செயலி என்பது நகர்ப்புறநகராட்சி மாநகராட்சிகளில்  அமைப்புகளுக்கு என்று  உருவாக்கப்பட வேண்டும் இதன் மூலம் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களுடைய புகார்களை எளிமையாக தெரிவிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

கட்டுரையாளர் :கே.கந்தசாமி, சிபிஐ(எம்) பழனி நகரச் செயலாளர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்

;