articles

img

கெடு மதியும் இழிசெயலும்....

அன்று ஆரியர்களுக்கு இருந்த அதே கெடு மதியும், இழிச்செயலும் இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் பிஜேபியினருக்கும் இருப்பது ஆச்சரியமில்லை. மார்க்சிய ஆசான் தோழர்.இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்கு வரும் போது பல கணங்களாக பல கட்டமாக வந்தனர். பல கோத்திர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகிறது. அவர்கள் கால்நடைகளோடு வந்தனர். தாங்கள் குடியிருக்கவும், ஆடு மாடுகளை வளர்க்கவும் வேண்டிய இடத்திற்காக தங்கள் சக கோத்திரங்களோடு மட்டுமல்லாது ஆரியர்கள் அல்லாத மற்ற பல மக்களோடும் போரிட்டனர்.

சிந்துச் சமவெளி மக்கள் ஆறுகளில் நீர்தேக்கங்கள் கட்டி நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்தனர். வேளாண் விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர். தோழர்.இ.எம்.எஸ் மேலும் எழுதுகிறார். தங்கள் ஆக்கிரமிப்பிற்காக நகரங்களை அழித்து தீக்கிரையாக்கியதை விட சிந்து சமவெளி மக்கள் ஆறுகளில் கட்டிய நீர்தேக்கங்களை உடைத்து தங்கள் கால்நடைகள் சுதந்திரமாக வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக மிகப்பெரிய பாவச்செயலை செய்தனர் என எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், சிறு தொழில்கள் போன்றவற்றை அழிததொழித்தார்கள். 

தங்கள் வளர்ச்சிப் பாதையில் அந்த காலத்தில் இந்தியாவின் தென்கோடியில் இருந்த, மௌரிய, மகத, சிந்து சமவெளி நாகரீகத்தை விட உயர்ந்து சிறந்த திராவிட நாகரீகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழித்தார்கள். தோழர்.இ.எம்.எஸ் எழுதும் போது மற்ற நாகரீகங்களில் மொழி வளர்ச்சியடையவில்லை. ஆனால் திராவிட நாகரீகத்தில் செந்தமிழ் வளர்ச்சி பெற்றிருந்தது என எழுதியுள்ளார். ரிக் வேத காலத்தின் கடைசி கட்டத்தில் அவர்கள் வந்ததால் மற்ற வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவைகளோடும், திராவிட, சிந்து சமவெளி நாகரீகங்களில் பல நல்ல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு இந்து நாகரீகம் என்ற பாரதீய நாகரீகத்தை உருவாக்கினார் என எழுதியுள்ளார். 

அதுபோல் இன்று பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா கோட்பாடுகளை மத்திய அரசில் இருந்து செயல்படுத்துவது நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் நாசகர விளைவுகளை ஏற்படுத்துவது கவலை அளிப்பதாக உள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்தியா கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது. 19 மாநிலங்களில் 156 கோடி மக்கள், பல லட்சக்கணக்கான கால்நடைகள், தாகத்திற்கு தண்ணீர் இன்றி உணவின்றி செத்து மடிந்தன. விவசாயம் நடக்காது, வேலை இருக்காது மத்திய, மாநில அரசுகள் மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க எந்தவிட நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஒரு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான யோகேந்திர யாதவ் 2015ல் உச்சநீதிமன்றம் தலையீடு செய்து மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் ஒன்று போர்க்கால அடிப்படையில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். இரண்டு மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும். மூன்று செயல்பாட்டில் உள்ள தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலையும், கூலியும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்தது. அப்போது மோடி தான் பிரதமராக இருந்தார். உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் வறட்சி நிவாரணத்திற்காக ஒரு சல்லிக்காசுக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்படவில்லை. குடிநீர் கூட வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றமும் தான் கொடுத்த பரிந்துரை அமுலானதா? இல்லையா? என எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேட்கவும் இல்லை.

கடன் ரத்து செய்யப்படவில்லை
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பத்து ஆண்டுகள் விவசாயிகள் கடன் பிரச்சனை முக்கியமானதாக இருந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 1970 முதல் 2014 வரை 4.6 லட்சம் விவசாயிகள் இறந்ததாக ஆய்வுகள் கூறுகிறது. 2014 ஆண்டு மட்டும் 15,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த தேர்தலுக்கு முன்பு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், தற்கொலை செய்து இறந்து போன சில குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அதை போலவே பிரதமர் மோடியும், முன்னாள் மகாராஷ்டிரா பிஜேபி தலைவருமான பட்னாவிஸும்  மத்திய பிரதேசத்தில் ஒரு பகுதியில் இறந்துபோனவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற காலை சிற்றுண்டி, மதிய உணவு அருந்தி வந்தனர். அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி,  நான் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன், வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் பணம் போடுவேன் என்ற வாக்குறுதி போலவே விவசாயிகள் கடன்கள் முழுவதும் ரத்து செய்வேன் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை நிர்ணயம் செய்து வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 1 1/2 ஆண்டு வரை கடன் ரத்து மற்றும் விவசாய விளை பொருள்கள் விலை நிர்ணயம் குறித்து எந்தவித அரசு அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையில் இந்தியா முழுவதும் இந்த இரண்டுகோரிக்கைகளுக்கான போராட்டங்கள் நடந்து வந்தன. 
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் கடன் ரத்து குறித்து கேள்வி எழுப்பிய போது பிரதமர் மோடி, விவசாயிகள் கடன் ரத்து செய்வது மாநில அரசு பொறுப்பு; மத்திய அரசு செய்ய முடியாது என கூறிவிட்டார். இது விவசாயிகளை நம்பவைத்து மோசடி செய்த பாதகச் செயலாக இருந்தது. 

2015ஆம் ஆண்டு கடன் பிரச்சனையோடு விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அப்போது தான் தில்லி தலைநகரத்தில் சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் இரண்டு அகில இந்திய விவசாய சங்கம், இரண்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் இவைகளோடு 107 விவசாயிகள் சங்கங்கள் இணைந்து ஹன்னன்முல்லா எம்.பி, அப்துல் குமார் அஞ்சான் ஆகியோர் தலைமையில் கூடி இரண்டு முக்கிய கோரிக்கைகளை முடிவு செய்தன. ஒன்று விவசாயிகள் கடன்கள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும். இரண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைபடி ஊ+2 (மொத்த சாகுபடிச் செலவு அதோடு சாகுபடிக்கு வாங்கிய கடனுக்கான வட்டி, குத்தகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வேலை ஆகியவற்றுக்கு) இரண்டு பங்கு சேர்த்து விலை நிர்ணயம் அமல்படுத்த நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பலமான போராட்டங்கள் நடைபெற்றது. பஞ்சாப் ரயில் மறியல் போராட்டம் வடமாலிங்களை ஸ்தம்பிக்க வைத்தது. மத்தியப் பிரதேசத்தில் வீரம் செறிந்த போராட்டம் சௌகான் அரசு 8 பேரை துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தது. மகாராஷ்டிரா தானே முதல் மும்பை வரை நீண்ட பயணம் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவது இந்த போராட்டம் நடந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முறையீடு செய்யப்பட்டது. மத்திய அரசு தரப்பில் மத்திய வேளாண்துறை செயலாளர் நேரில் வந்து மத்திய அரசு வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாது என கூறி சென்றுவிட்டார். உச்சநீதிமன்றமும் இதுவரை ஏதும் செய்யவில்லை. 

ஆனால் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக  நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை உடைக்க, பலவீனப்படுத்த செய்த அவதூறுகள், மோடி அரசு எடுத்த பல நடவடிக்கைகள் அப்பட்டமாக தோற்றுப் போயின. தற்போது உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தி அரசுக்கு ஆதரவானவர்களை குழுவாக அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முற்படுகிறது. இதனால் எந்த வகையிலும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது. இந்த குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது அப்பட்டமாக போராட்டத்தை சிதைக்க, உடைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் இழிவான முயற்சி அவர்கள் நான்கு பேரும் தற்போது மாநிலங்களுக்கு சென்று பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்களை பார்த்து விவசாயிகள் ஒற்றுமையை உடைக்க இழிவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  அவர்களது இழி முயற்சிகள் பலிக்காது. விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வென்றே தீரும்.

கட்டுரையாளர்  : எஸ். திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்


 

;