articles

img

தீண்டாமை இருளில் தவித்தவர்களின் விடியலுக்காக வாழ்ந்த சுவாமி சகஜானந்தர்....

தமிழகத்தில், கோயிலின் அருகே செல்வதே பாவம் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட  மக்கள் அனைவரும் இன்று தங்கு தடையின்றி, அனைத்து கோயில்களிலும் செல்லும் உரிமையை பெறுவதற்கு பெரும் பங்காற்றியவர் சுவாமி சகஜானந்தர்.1890, ஜனவரி 27 அன்று திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணியை அடுத்துள்ள மேல்புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு  மகனாகப் பிறந்தவர் (பின்னாளில் சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்)  முனுசாமி.
ஆரம்ப கல்வியை தனது ஊரிலும், ஆறாம்வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடுகிறிஸ்தவ உயர்நிலை பள்ளியிலும் பயின்றார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்த முனுசாமியின் ஆற்றலைக் கண்ட பள்ளி நிர்வாகம் அருக்கு ‘சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது.பிழைப்பு தேடி அவரது குடும்பம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலுக்கு இடம்பெயர்ந்த போது,  முனுசாமியும் குடும்பத்தினருடன் அங்கு சென்றார். பின்பு, ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளதாக பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தார். வியாசர்பாடியில் இருந்த   கரபத்திர சுவாமிகளிடம் சீடராக சேர்ந்தார்.  அவர்தான் இவருக்கு சகஜானந்தர் என பெயர் சூட்டினார்.

அவரின் வழிகாட்டுதலின் படி, சிதம்பரத்திற்கு சென்று நந்தன் பெயரில் 1916 ஆம்ஆண்டு 25 மாணவர்களை வைத்து நந்தனார் கல்விக் கழகத்தைத் தொடங்கினார்.   ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி படித்தனர். கல்விநிலையம் விரிவடைந்தது. சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர். பணமாகவும், நிலமாகவும் தானமாக வழங்கினர். இலங்கை, பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் சென்று உரையாற்றி நிதி திரட்டினார்.ஒரு சில ஆண்டுகளிலேயே மேலும் ஏழு ஊர்களில் இதன் கிளைகளைத் தொடங்கி, அங்கெல்லாம் மாணவர்களுக்கு படிப்பு, ஆன்மிக ஞானம், தொழிற்கல்வி, தமிழிசை அனைத்தையும் போதித்தார். 1929ல் மாணவர் இல்லம், 1930ல் மாணவியர் விடுதியையும் தொடங்கினார். 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அப்பள்ளிக்கு வருகை தந்து, சகஜானந்தரின் சேவையை பாராட்டியுள்ளார்.

1926 முதல் 1947ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராக 21 ஆண்டுகளும், 1947 ஆம் ஆண்டில் இருந்து 1959ஆம் ஆண்டுவரை 12 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பின ராகவும்  தேசத்திற்கு பணியாற்றியுள்ளார்.பொது மக்களிடம் பலனையும், பணத்தையும் எதிர்பாராமல் உண்மையான கவ்வித்தந்தையாக வாழ்ந்த  சகஜானந்தர்,  தமிழ்ப் புலமை, சமஸ்கிருதப் புலமை மிக்கவராக இருந்துள்ளார். நாரத சூத்திரத்தைத் தமிழில்‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலை எழுதியுள்ளார்.  ‘பரஞ்சோதி’ என்ற இதழையும், ஆக்ஸ்போர்டு என்ற அச்சகத்தை யும் நடத்தியுள்ளார்.

தமிழக கோயில்களில் ஆதிதிராவிடர்களை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்,  தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட பஞ்சாயத்துகளில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று தனி கல்வி இலாக்கா அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட,  தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக, குரல் எழுப்பியவர். சிதம்பரத்தை அடுத்த நஞ்சை மகத்து வாழ்க்கைஎன்ற இடத்தில், மாசிமகத் திருவிழா கொண்டாடு வது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அங்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து, சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.

1934 டிசம்பர் மாதம் காந்தி சென்னைக்கு வந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிலங்கள் தரமற்ற நிலங்களாக உள்ளன; அவற்றை சீர்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக அவர்கள் மாற்றிய பின்னர்,மணியக்காரர்கள், ஜில்லா அதிகாரிகள் சூழ்ச்சியால், அந்த நிலங்கள் பஞ்சமர்களிடமிருந்து, கைமாறி போகின்றன என்று முறையிட்டார்.மின்சார உற்பத்தி  அரசாங்கத்தின் பொறுப்பில் தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அதை கொடுக்கக்கூடாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பாக பொதுத் துறைக்காக குரல் கொடுத்த அவர்,  ஏழை விவசாயிகள், கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அனைவரும் கோயிலுக்கு செல்ல உரிமை வேண்டும் என்றும், சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் தொகைக்கு   ஏற்ப கல்வி, குடியிருப்பு வசதிகள், சாலைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் தனி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தொடர் முழக்கத்தை முன் வைத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் மணிமண்டபம் நிறுவ வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி, மணி மண்டபம் அமைக்கப்பட்டது.தற்போது தமிழக அரசு சகஜானந்தரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது.இப்படியான சுவாமிகள் வாழ்ந்த இந்த தேசத்தில் தான் மத்தியில் ஆளும் வகுப்புவாத பாஜக,  தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை குறைப்பதும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான கொடிய பாலியல் வன்முறைகளை நிகழ்த்துவதும், வேடிக்கை பார்ப்பதும் தொடர்கிறது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. உலக அரங்கில் நம்மை அவமானத்திற்கு உள்ளாக்கும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்; கேரள அரசைப் போன்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; சகஜானந்தர் பிறந்த  புதுபக்கம் கிராமத்தில் உள்ள அவரின் நினைவு மண்டபத்தை புதுப்பித்து, கல்விச் சாலையாக மாற்றிட வேண்டும்.

எம்.வீரபத்திரன், சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை.

;